Published:Updated:

தீ விபத்தில் வீட்டைப் பறிகொடுத்த 5 குடும்பங்களை நெகிழவைத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்!

 உதவும் ரஜினி மக்கள் மன்றத்தினர்
உதவும் ரஜினி மக்கள் மன்றத்தினர்

தீ விபத்தில் வீடுகளைப் பறிகொடுத்த அந்த 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தேவையான சமையல் பாத்திரம், உடுத்துவதற்கு உடைகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கொடுத்து உதவியுள்ளனர்.

பேராவூரணி அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் மற்றும் அதனுள் இருந்த பொருள்கள் அனைத்தும் தீக்கிரையாகின. உடுத்துவதற்கு ஒரு உடைகூட இல்லாமல் போன துயரத்தில் தவித்த அவர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேசக்கரம் நீட்டியதுடன் தேவையான உதவிப் பொருள்களையும் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளனர்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ளது செம்பருத்தி நகர். இங்கு சுமார் 60 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் மீன் பிடிப்பதற்கான கூலி வேலைக்குச் செல்கின்றனர். அதில் வரும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததுடன் வீட்டிற்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் ஒன்றுகூட மிச்சம் இல்லாத வகையில் தீக்கிரையாயின.

ஏற்கெனவே கொரோனா பரவி வருவதால் வேலை இல்லாத நிலையில் போதுமான வருமானமின்றிக் கடும் துயரங்களைச் சந்தித்து வந்துள்ளனர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தநிலையில் குடியிருந்த வீடும், அதிலிருந்த பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலானதால் சொல்ல முடியாத பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு தவித்துள்ளனர். இந்தத் தகவல் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது.

உதவிப் பொருள்களை வழங்கும் ரஜினி. கணேசன்
உதவிப் பொருள்களை வழங்கும் ரஜினி. கணேசன்

இதையடுத்து தீ விபத்தில் வீட்டைப் பறிகொடுத்த அந்த 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு வீட்டிற்குத் தேவையான சமையல் பாத்திரம், உடுத்துவதற்கு உடைகள், அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து உதவியுள்ளனர். இதைப்பெற்றுக்கொண்ட வயதான பாட்டி ஒருவர், `நடிகர் ரஜினியைப் போலவே உங்களுக்கும் இளகிய மனசுப்பா’ என நெகிழ்ந்து பாராட்டினார்.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ரஜினி கணேசன் கூறுகையில், ``எங்கள் தலைவர் ஆரோக்கியம் போச்சுனா வாழ்க்கையே போச்சு எனக் கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்டு கொரோனா பரவுதல் உள்ளிட்ட பல காரணங்களால் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். இந்தநிலையில் தீ விபத்தில் வீட்டைத் தொலைத்துவிட்டு செய்வதறியாமல் நின்ற 5 குடும்பங்களுக்குத் தலா ரூ.8,000 என மொத்தம் ரூ.40,000 மதிப்பிலான உதவிப் பொருள்களை வழங்கினோம்.

உதவி
உதவி

அத்துடன் அவர்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா இல்லை என்றார்கள். அதுகுறித்து விசாரித்தபோது குறிப்பிட்ட அந்த இடம் வனத்துறைக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பட்டா வாங்கித் தருவதற்கு முயற்சி செய்ய இருக்கிறோம். `அப்படி இல்லையென்றால், பட்டாவுடன்கூடிய மாற்றும் இடத்தைப் பெற்றுத் தருகிறோம். கவலைப்படாம இருங்க’ என உறுதி கொடுத்திருக்கிறோம். இப்போதே இது தொடர்பாக அரசு அதிகாரிகள் சிலரிடம் பேசியிருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு