Published:Updated:

கவிஞர் வண்ணதாசன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

கவிஞர் வண்ணதாசன் மற்றும் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவரும் கௌரவ டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்.

ஆ.சிவசுப்ரமணியன், வண்ணதாசன்
ஆ.சிவசுப்ரமணியன், வண்ணதாசன்

மிகச் சிறந்த கதைகள் மற்றும் கவிதைகளால் தனி வாசகர் பரப்பைப் பெற்றவர், வண்ணதாசன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளால் புதிய தடத்தைப் பதித்தவர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன். இவர்களின் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கவிருக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா, அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெற உள்ளது.

பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தபோது, ``விருதுகளைப் பொறுத்தவரை நிறை குறை இரண்டுமே வழங்குபவர்களிடமும் பெறுபவர்களிடமும் இருக்கின்றன. இவற்றிற்கிடையில்தான் படைப்பாளிகள் பயணப்பட வேண்டியிருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில், விருதுகள் குறிப்பிட்ட காலத்தில் கிடைத்திருந்தால், என் ஆய்வுகளைத் திட்டமிட்டபடி இன்னும் செய்திருக்கலாம்.

ஆ.சிவசுப்பிரமணியன்
ஆ.சிவசுப்பிரமணியன்

ஆனால், அதற்கான காலம் முடிந்துவிட்டது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 'ஆய்வாளர்' என்று பொதுப்படையாகக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேனா என்பது கேள்விதான். நான் ஈடுபாடுகொண்ட நாட்டார் வழக்காற்றியல் துறையை மையமாக வைத்து வழங்கியிருப்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

Vikatan

நாட்டார் வழக்காற்றியல் துறை முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உடனடி பலனை எதிர்பார்க்கிறவர்கள் இந்தத் துறைக்குள் வரமாட்டார்கள். எனவே, இந்த மாதிரி விருதுகள், இதில், ஈடுபட நினைப்பவர்களுக்கும் ஊக்குவிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். எழுத்தாளனுக்குப் பெரிய மகிழ்ச்சி விருதுகளைவிட பெரியளவில் வாசகர் பரப்பைச் சென்றடைவது தான். விருதுகளால் இது சாத்தியமாகிறது. விருதுகளைத் தேடி எழுத்தாளன் அலையக்கூடாது. வரக்கூடிய விருதுகளின் தராதரத்தைப் பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்" என்றார்.

வண்ணதாசன்
வண்ணதாசன்

டாக்டர் பட்டத்திற்கான வாழ்த்துகளை, எழுத்தாளர் வண்ணதாசனிடம் தெரிவித்தோம். அவர் கூறுகையில், ``கல்விப்புலம் சாராத படைப்பாளிகளுக்கு, நீண்டநாள்களுக்குப் பிறகு டாக்டர் பட்டம் கொடுப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.