Published:Updated:

தஞ்சாவூர்: ஊரடங்கால் உணவின்றி தவித்த நாய்கள்... பிரியாணி வழங்கும் நபருக்குக் குவியும் பாராட்டு!

 நாய்களுக்கு உணவு வைக்கும் ராஜி
நாய்களுக்கு உணவு வைக்கும் ராஜி ( ம.அரவிந்த் )

அவரை கண்டதுமே ஆங்காங்கே நிற்கும் நாய்கள் குழந்தைகள் போல் தாவிக் குதித்து ஓடிச் செல்கின்றன. அவற்றிற்கு முழு பாசத்துடன் வாளியில் சமைத்து எடுத்துச் சென்ற பிரியாணியை பேப்பர் பிளேட்டில் வைத்துக் கொடுக்கிறார். கொரோனா நேரத்தில் அவருடைய இந்த பணி நெகிழ வைத்துள்ளது.

தஞ்சாவூரில் கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட லாக்டெளனால் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் உணவு கிடைக்காமல் தவிக்கும் என்பதை உணர்ந்த ஒருவர் தினமும் பிரியாணி சமைத்து எடுத்துச் சென்று 50 நாய்களுக்கு வைத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜி
ராஜி

தஞ்சாவூர் பூக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (56). இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று பேருக்குமே திருமணமாகி விட்டது. ராஜி கேட்டரிங் தொழில் செய்துவருகிறார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தமிழக அரசு லாக்டெளன் விதித்துள்ளது. இதனால் அன்றாடம் வேலை செய்து பிழைத்து வந்த ஏழை மக்களே உணவு கிடைக்காமல் தவித்துவரும் நிலையில் வாயில்லா ஜீவன்களான தெருவில் சுற்றும் நாய்களின் நிலைமை பரிதாபமாகவே இருக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் தெருநாய்கள் உணவின்றி தவிப்பதை உணர்ந்த ராஜி லாக்டெளன் தொடங்கியதிலிருந்தே தினமும் மதிய நேரத்தில் நாய்களுக்குப் பிரியாணி கொடுத்து வருகிறார். அவரை கண்டதுமே ஆங்காங்கே நிற்கும் நாய்கள் குழந்தைகள் போல் தாவிக் குதித்து ஓடிச் செல்கின்றன. அவற்றிற்கு முழு பாசத்துடன் வாளியில் சமைத்து எடுத்துச் சென்ற பிரியாணியை பேப்பர் பிளேட்டில் வைத்துக் கொடுக்கிறார். நாய் நன்றியுள்ள விலங்கு என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ராஜி உணவை வைத்ததுமே தனது வாலை ஆட்டி நன்றி சொல்வது போல் நாய்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதைப் பார்க்கும்போது பெரும் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. ராஜியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கொரோனா லாக்டெளன் உனவு கொடுக்கும் ராஜி
கொரோனா லாக்டெளன் உனவு கொடுக்கும் ராஜி

ராஜியிடம் பேசினோம். "தஞ்சாவூர் பூக்காரத் தெரு அரசமரம் பகுதியில் நிற்கும் நாய்களுக்கு நான் தினமும் காலை பிஸ்கட் கொடுப்பேன். அதேபோல் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் சுமார் 200 நபர்களுக்கு உணவு சமைத்து பொட்டலமாக ரெடி செய்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்குக் கொடுக்கிறேன்.

தற்போது லாக்டெளன் அமலில் இருப்பதால் வெளியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. ஹோட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இலைகளில் இருக்கும் மிச்சம் மீதி உணவைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்த தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காது. 'தனக்கு பசிக்குது' என யாரிடமும் அவற்றால் வாயைத் திறந்து கேட்பதற்கும் முடியாது என்பதை உணர்ந்தேன். இதையடுத்து கோழி தலை, கால் அல்லது முட்டை வாங்கி பிரியாணி சமைத்து அதை ஒரு வாளியில் வைத்து என்னுடைய டூ வீலரில் எடுத்துக் கொண்டு செல்வேன்.

நாய்
நாய்

பூசந்தை, சாந்தபிள்ளை கேட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நாய்களை அழைப்பேன். தரையில் பிரியாணியை வைத்தால் மண் ஒட்டும் என்பதற்காக பேப்பர் பிளேட்டில் பிரியாணியை வைத்து நாய்களுக்கு வைப்பேன். சில நாள்கள் இதேபோல் தொடர்ந்து செய்த பிறகு 'எப்போது நான் வருவேன்' என்று நாய்கள் எனக்காகக் காத்திருக்கின்றன. நான் வண்டியை நிறுத்தியதுமே நாய்கள் ஓடி வரும். எல்லாவற்றிற்கும் பொறுமையாகச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அடுத்த இடத்துக்குப் போவேன்.

இதை பெரிதாக நினைத்து எல்லோரும் பாராட்டுறார்கள். ஆள் அரவமில்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடக்கும்போது இந்த வாயில்லா ஜீவன்கள் யாரிடம்போய் சாப்பாடு கேட்கும் என்ற எண்ணமே நான் இதனை செய்வதற்கு உந்துதலாக அமைந்தது. தினமும் சுமார் 50 நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். லாக்டெளனுக்கு பிறகும் இதனை செய்யலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு