Published:Updated:

`2,000 கிலோ வந்தும் வாங்க ஆளில்லை!' - எகிப்து வெங்காயத்தால் கலங்கும் தஞ்சை வியாபாரிகள்

இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் எனவும் இதனால் மத்திய, மாநில அரசுகளின் மீதான விமர்சனங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

எகிப்து வெங்காயம்
எகிப்து வெங்காயம்

இந்தியாவில் காய்கறிகளின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாடாளுமன்றம் வரை எதிரொலித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனை சர்ச்சையில் சிக்க வைத்த வெங்காயம், கிலோ 200 ரூபாயை எட்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தஞ்சை
தஞ்சை

விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இறங்கியது மத்திய அரசு. அப்படி எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. தஞ்சைக்கு கொண்டு வரப்பட்ட எகிப்து வெங்காயத்திற்கு மக்களிடம் பெரிதாக வரவேற்பில்லை என்கிறார்கள் வியாபாரிகள்.

வெங்காயத்தின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், பற்றாக்குறையைப் போக்குவதற்காகவும், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் எனவும் இதனால் மத்திய, மாநில அரசுகளின் மீதான விமர்சனங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

சுவையில்லை, மணமில்லை... எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சாவூர் காமராஜ் காய்கறி மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் ``வெங்காய விலை ஏறினதுனால, எங்களுக்கும் ரொம்ப சிரமமான சூழல்தான். கடந்த ஒரு மாசமா வியாபாரம் குறைஞ்சிடுச்சு. எகிப்து நாட்டுல இருந்து மத்திய அரசு, வெங்காயத்தை இறக்குமதி செய்யப்போகுதுனு தெரிஞ்சதும் ரொம்பவே சந்தோசப்பட்டோம். அந்த வெங்காயம் வந்துட்டா, மறுபடியும் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சுடும்னு நம்பிக்கையா இருந்தோம்.

இரண்டாயிரம் கிலோ எகிப்து வெங்காயம் இங்க விற்பனைக்கு கொண்டு வந்தாங்க. ஆனா, மக்கள் இதை வாங்க மாட்டேங்குறாங்க. ஒரு சிலர் வேற வழியில்லாம, வேண்டா வெறுப்பாதான் வாங்கிக்கிட்டுப் போறாங்க. இதுல காரத்தன்மை இல்லைனும், வழக்கமான வெங்காயம் அளவுக்கு இதுல சுவை இல்லைனும் மக்கள் சொல்றாங்க.

எகிப்து வெங்காயம்
எகிப்து வெங்காயம்

அதுமட்டுமில்லாம எகிப்து வெங்காயம், செவ செவனு நல்லா சிவப்பு நிறத்துல வித்தியாசமா இருக்குறதுனாலயும், இதை வாங்குறதுக்கு, மக்கள் தயங்குறாங்க. ஹோட்டல் நடத்துறவங்களை மட்டும்தான் இப்போதைக்கு நாங்க நம்பிருக்க வேண்டியதா இருக்கு. ஆனால் இது மட்டுமே போதாது” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள்.