Published:Updated:

`ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - அதிரடி காட்டும் தஞ்சை கிராமத்தினர்

கிராமத்தினர்
கிராமத்தினர்

``விவசாய விளைநிலங்களுக்கு அருகே குடித்துவிட்டு பாட்டிலை வயலுக்குள் தூக்கி வீசுகின்றனர். வயலில் இறங்கி விவசாயப் பணி செய்யும் விவசாயிகளின் காலை பதம் பார்க்கிறது” என்று கிராமத்தினர் தங்களது வருத்தத்தைத் தெரிவிக்கின்றனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு என்ற கிராமத்தில், 1500

-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட சுமார் பத்தாயிரம் பேர் வசித்துவருகின்றனர். இங்குள்ள ஊர் பெரியவர்கள் கூடி கூட்டம் நடத்தி, `யாரும் ஊர் எல்லைக்குள் மது அருந்தக் கூடாது. மது அருந்திவிட்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது. மீறினால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும்' என அறிவித்துள்ளனர். அப்படி வசூல் செய்யப்படும் பணம், ஊரின் நலன் சார்ந்த பொது விஷயத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இதை அருகில் உள்ள கிராமத்தினரும் சமூக ஆர்வலரும் பாராட்டி வரவேற்றுவருகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் பேசினோம். ``எங்க ஊரில் 2000-ம் வருடமே மது விலக்குக் கொள்கையை அறிமுகப்படுத்தி, அதை அப்போதைய கலெக்டர் ராஜாராமை வைத்து தொடங்கினோம். அதன்படி, ஊர் எல்லைக்குள் யாரும் மது அருந்தவோ விற்கவோ கூடாது என கட்டுப்பாடு விதித்திருந்தோம்.

தென்னமநாடு ஊராட்சி
தென்னமநாடு ஊராட்சி

இதனால் மதுவால் ஏற்படும் எந்தப் பிரச்னையும் இங்கு நடக்காது. பெரிய அளவில் நடக்கும் ஊர் திருவிழாவின்போது, பாதுகாப்பிற்கு போலீஸை அழைக்காமல் நாங்களே விழாவை நடத்துவோம். அப்படி ஒரு கட்டுக்கோப்பாக இருக்கும் எங்கள் ஊர்.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக ஊர் பொதுஇடங்களான கோயில், குளம் உள்ளிட்ட இடங்களில் பலர் மது அருந்திவிட்டு பாட்டிலை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ஊர் எல்லைக்குள் வெளியூர் இளைஞர்கள், ஏகப்பட்ட பேர் மது அருந்தி வந்தனர். அவர்களுடன் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சில இளைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து மது அருந்தத் தொடங்கினர். `நம்ம கண் முன்னாலேயே வருங்கால இளைஞர் சமுதாயம் சீரழிகிறதே' என என்னைப் போன்ற ஊர் பெரியவர்களுக்கு ஒரே வருத்தம். மேலும், குடித்துவிட்டு அவர்கள் வீசிச்செல்லும் கண்ணாடி பாட்டில்கள் உடைந்து, காலில் குத்தி காயம் ஏற்படுத்துகிறது. அத்துடன் விவசாய விளைநிலங்களுக்கு அருகே குடித்துவிட்டு பாட்டிலை வயலுக்குள் தூக்கி வீசுகின்றனர்.

பாட்டில் உடைந்து வயலில் கிடப்பதால், வயலில் இறங்கி விவசாயப் பணி செய்யும் விவசாயிகளின் காலை பதம் பார்க்கிறது. இதனால் பல நாள்கள் அவர்களால் வயலில் இறங்கி வேலை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. மது அருந்துவதால் சண்டை சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

எனக்கு 78 வயசாகிறது. கடந்த 5 வருடமாகத்தான், இதுபோன்று நடக்கிறது. இதற்கு முன் இது போல் நடந்து நான் பார்த்தது இல்லை. இதற்கு முக்கியமான காரணம், அருகிலுள்ள அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள்தான். எனவே, ஊர் பஞ்சாயத்து கூடி ஒரு முடிவை எடுத்தோம். அதன்படி, ஊர் எல்லைக்குள் யாரும் குடிக்கக்கூடாது, குடித்துவிட்டு சண்டையிடக்கூடாது என அறிவித்தோம்.

குளம்
குளம்

இதை மீறும் நபர்கள் ஒவ்வொருக்கும் ரூ.5,000 அபராதம் விதித்தும் அறிவித்துள்ளோம். இதில் வசூல் ஆகும் பணத்தை குளம் தூர் வாரவும், பொது இடத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட பல பணிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததி நல்லா இருக்கணும் அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ஊர் முழுக்க சேர்ந்து இதைச் செய்துள்ளோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு