Published:Updated:

கொரோனா: `கஷ்டத்திலும் உதவிய நல்லுள்ளங்கள்!’ - பாரம்பர்ய விழிப்புணர்வோடு கவுரவித்த மக்கள்

பாராட்டு விழா
பாராட்டு விழா

இவர்கள் அனைவருமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவின்போது, ஊர்மக்களில் பலர், நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள் .

கொரோனா ஊரடங்கின் போது, மிகவும் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை கவுரவிக்கும் விதமாக, அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக்கூடம் கிராமத்தில் கல்லாலான கை உரல் வழங்கி அசத்தியுள்ளார்கள், கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்கத்தினர். சமூக சேவையாற்றியவர்களை ஊக்கப்படுத்திய அதேசமயம், மக்களின் உடல் நலனை மேம்படுத்தக்கூடிய பாரம்பர்ய வாழ்வியலை மீட்டுடெடுக்கக்கூடிய இரட்டை பலனாக இந்நிகழ்வு அமைந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பாராட்டு விழா
பாராட்டு விழா

கொரோனா ஊரடங்கின்போது, அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைப்பட கலைஞர்கள், வணிகர்கள் எனப் பல தரப்பினரும் செய்த சமூக பங்களிப்புகள், வெளியுலகில் வெளிச்சமிட்டன. இவர்கள் செய்த பங்களிப்புகள் பாராட்டுக்குரியதுதான் என்றாலும்கூட, இது இவர்களுக்கு கடினமான காரியமல்ல. ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளவர்கள், இத்தகைய சேவைகளில் ஈடுபடுவதுதான் நெகிழ்ச்சியானது. இவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியதோடு, ஊர்மக்கள் மத்தியில் பாரம்பர்ய வாழ்வியல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருப்பது மேலும் நெகிழ்ச்சியானது.

இதற்கு முன் முயற்சி எடுத்த, கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்கத்தின் செயலாளர் தங்க.சண்முகசுந்தரத்திடம் பேசினோம்.``தற்போது கிராமப்புறங்களிலும்கூட, மிக்சி கிரைண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால், கடந்த தலைமுறை வரைக்கும் நகரங்கள்லகூட, கல்லாலான கை உரல் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருள்களை இடித்து பயன்படுத்துவதன் மூலம் இயல்பான இயற்கையான சுவை அதிகரிக்கும். மேலும், கை உரல் மூலம் உணவு தயாரிக்கும்போது நீண்ட நேரத்திற்கு உணவு கெட்டுப் போகாது. மாறாக மிக்சி கிரைண்டர் பயன்படுத்தும்போது சில மணிநேரங்களிலேயே உணவு கெட்டுப்போய் விடுகிறது. உடலும் சோம்பேறித்தனமாக மாறிவிடும்.

பரிசாக வழங்கப்பட்ட கல் உரல்
பரிசாக வழங்கப்பட்ட கல் உரல்

இதனால்தான், கொரோனா கால சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கவும், பாரம்பர்ய கல் உரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பரிசுப் பொருளாக கல் உரல் வழங்கினோம். கொரோனா ஊரடங்கு சமயத்துல, கீழ காவட்டாங்குறிச்சியைச் சேர்ந்த ஏழை மாணவி அபி, தனது பங்களிப்பாக, 5 ஆண்டுகாலமாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த உண்டியல் பணம் 3,000 ரூபாயை செலவு பண்ணி, கிராம மக்களுக்கு மூலிகை வெதுநீர் வழங்கினார். கட்டடத் தொழிலாளி சுயம்பிரகாசம், கைகள் வளர்ச்சி பெறாத, மாற்றுத் திறனாளியான கார்த்திக், இளவரசன், புஷ்பலா, மாரியாயி, ஆசிரியை அல்லி உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கவுவிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தினமும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு, மளிகைப்பொருள்கள், முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட உயரிய சேவைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கு நடத்தப்பட்ட இந்தப் பாராட்டு விழாவின்போது, ஊர்மக்களில் பலர், நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு