Published:Updated:

தஞ்சாவூர்: `மரம் நான் வளர்க்கிறேன்; பயனை மக்கள் அடைவார்கள்!’ - அசத்தும் ஊராட்சிமன்றத் தலைவர்

தென்னங்கன்று
தென்னங்கன்று ( ம.அரவிந்த் )

`மரம் நிறைய இருந்தால் சுத்தமான காற்று கிடைக்கும், மழை பொழியும், மண் வளமாகும் என்பதால் ஊராட்சி முழுக்க மரக்கன்றுகளை நட நினைத்தேன்'.

பட்டுக்கோடை அருகே உள்ள ஊராட்சி ஒன்றில்,அதன் ஊராட்சி மன்றத் தலைவர் பாசன வாய்க்கால் கரைகளின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை நட வைத்துள்ளார். இதனால், ஊராட்சிக்கு வருமானம் வருவதுடன், மனிதனும், மண்ணும் சுகாதாரமாக இருப்பார்கள் என கூறும் அவரைப் பலரும் பாராட்டுகின்றனர்.

மரக்கன்று ஊன்றும் பணியில்
மரக்கன்று ஊன்றும் பணியில்

பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ளது பெரியக்கோட்டை ஊராட்சி. இங்கு சுமார் 1,000 குடும்பங்கள் உள்ளன. அனைவருக்கும் விவசாயம்தான் பிரதான தொழில். இந்த ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் பாலசுப்ரமணியன். இவர், தன்னுடைய பெரும் முயற்சியால் பெரியக்கோட்டை ஊராட்சியைக் கடந்து செல்லும் கல்லணை கால்வாயின் கிளைப் பிரிவான ரெகுராமசமுத்திரம் பாசன வாய்க்காலின் கரைகளின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை நட்டுள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ``நான் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற உடனேயே, பசுமை விஷயத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என நினைத்தேன். ஏன் என்றால் கடைமடைப் பகுதியாக இருந்தாலும் எங்க ஊர் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

மரக்கன்று
மரக்கன்று

மரங்கள் நிறைய இருந்தால் சுத்தமான காற்று கிடைக்கும், மழை பொழியும், மண் வளமாகும் என்பதால் ஊராட்சி முழுக்க மரக்கன்றுகளை நட நினைத்தேன். அதே நேரத்தில், ஊராட்சிக்கு நல்ல வருமானம் வர வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டேன்.

இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக எங்க ஊராட்சியைக் கடந்து செல்லும் ரெகுராமசமுத்திரம் பாசன வாய்க்கால்களில் தென்னம் பிள்ளைகளை ஊன்ற நினைத்தேன். இதற்காக அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தென்னங்கன்றுகளை கேட்டு வாங்கியதுடன் சுமார் 2 கிலோ மீட்டர் கொண்ட வாய்க்கால் கரைகளின் இருபுறமும் 100 நாள் வேலையாட்கள் மூலம் அந்தக் கன்றுகளை ஊன்ற வைத்தேன். இதுவரை மொத்தம் 1,000 தென்னங்கன்றுகள் ஊன்றப்பட்டுள்ளன.

ஊராட்சி மன்றத் தலைவர்
ஊராட்சி மன்றத் தலைவர்

பின்னர், தென்னம்பிள்ளைகளைக் காப்பதற்காக நான்கு புறமும் மரக் குச்சிகளை ஊன்றி, பச்சைத் துணியை வலையாக அடைக்க வைத்தேன். ஒவ்வொரு கன்றுக்கும் இதேபோல் செய்யப்பட்டது ஆடு, மாடுகளிடமிருந்து கன்றுகளைக் காப்பதற்காக இதைச் செய்துள்ளோம். அப்புறம் 100 நாள் வேலையாட்களைக் கொண்டே அவ்வப்போது தென்னங்கன்றுக்குத் தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு பெரிய செலவும் எதுவும் ஏற்படவில்லை.

Vikatan

தற்போது கன்றுகள் நன்கு வளரத் தொடங்கியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 5 அடி வரை ஒரு சில கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன. தென்னங்கன்றுகள் வளர்ந்த பிறகு பாசன வாய்கால்களின் கரைகள் பலமாகும், மண் அரிப்பு ஏற்படாமல் வாய்க்கால் பாதுக்காப்பாக இருக்கும். மேலும், ஊராட்சிக்கு வருமானமும் வரும்.

கிராமம்
கிராமம்

சுமார் 6 வருடங்களில் கன்றுகள் வளர்ந்து மரமாகி தேங்காய் காய்க்கத் தொடங்கிவிடும். இதன் மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வரை ஊராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். அடுத்த கட்டமாக பொது மற்றும் கோயில் இடங்கள் என அரசுக்கு சொந்தமான காலியிடங்களில் பாரம்பர்யமிக்க நம்முடைய இன்னும் பல ரக மரக்கன்றுகளை ஊன்ற உள்ளேன்.

இதைப் பலர் பாராட்டி வருகின்றனர் ஒரு சிலர், `5 வருடம் தானே ஊராட்சி மன்றத் தலைவராக இருக்க போற? தொடர்ச்சியாக நீயே இருக்க போறன்னு நினைப்பா? ஏன் இவ்வளவு சிரமப்படுற?’ என கேட்டாங்க. அவர்களிடம், `மரம் நான் வைக்கிறேன். பலனை நம்ம ஊர் மக்கள்தான் அனுபவிக்கப் போறாங்க. அதற்காகத்தான் நானே முன்னெடுத்து மரக்கன்று ஊன்றுவதில் அதிக அக்கறை காட்டுகிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்காக இதனை செய்யவில்லை. எதிர்காலத்தில் இந்த மண்ணும், இங்கும் வாழும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறேன்.

ஊர்மக்கள்
ஊர்மக்கள்

என்னைப் பொறுத்தவரை பூமியில் அதிக மரக்கன்றுகள் இருந்தால் மனிதன் மட்டுமல்ல மண்ணும் சுகாதாரமாக இருக்கும் என்பதை முழுமையாக நம்புகிறேன். அதனால் வளம் மிகுந்த பசுமையான பகுதியாக எங்க ஊரட்சி எப்போதும் திகழ்வதற்காக மரக்கன்றுகளை ஊன்றுவதுடன் அவற்றை மரமாக ஆளாக்கி விட வேண்டும் அதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு