Published:Updated:

`பிறந்த குழந்தையைக்கூட கொஞ்ச முடியவில்லை...' - கொரோனா தொற்று பாதிப்பால் கலங்கிய தஞ்சைப் பெண்

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அந்தப் பெண்ணின் மாமனார் டெல்லியிலிருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தஞ்சாவூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் தனித்தனியாக கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ` குழந்தைக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பது, பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா தடுப்பு பணி
கொரோனா தடுப்பு பணி

தஞ்சாவூரில் மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டதுடன் போலீஸாரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பரவாமல் தடுக்கும்விதமாக, மொத்தம் 15-க்கும் மேற்பட்ட ஊர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள சுந்தர நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் கர்ப்பமாக இருந்ததால், தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து மிகவும் கவனமுடன் மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்துவந்தனர்.

சீல் வைக்கப்பட்ட பகுதி
சீல் வைக்கப்பட்ட பகுதி

இதைத் தொடர்ந்து, நேற்று அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண், ` என் குழந்தையை பக்கத்துல வச்சுப் பார்க்க முடியல. அவனை என்னால் தொட்டுக் கொஞ்சக்கூட முடியவில்லையே' என கலங்கியிருக்கிறார்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் பேசினோம். `` அந்தப் பெண்ணின் மாமனார் டெல்லியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருடைய மருமகளான அந்தப் பெண்ணுக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், இவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை அறிய, ரத்தம் உள்ளிட்டவை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், மாமனாருக்கு இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை, அதற்குள் அந்தப் பெண்ணுக்கான பரிசோதனை முடிவு வந்ததில் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது.

மருத்துவமனை
மருத்துவமனை

இதற்கிடையில், அவரை தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை கொடுத்துவந்தோம். அவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், சிசேரியன் மூலம் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளனர். தாய்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், குழந்தையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை அறிய ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். ஒரு வாரம் கழித்துதான் அதுகுறித்த விவரம் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு