Published:Updated:

சொத்துப் பிரச்னையில் தீவைக்கப்பட்ட வீடு!- ஒரே இரவில் பறிபோன குடும்பத்தின் எதிர்காலம்

எரிந்த வீட்டின் முன் பிரேமா
எரிந்த வீட்டின் முன் பிரேமா

தஞ்சாவூர் அருகே சொத்துப் பிரச்னை ஒன்றில் குடியிருந்த வீட்டை உறவினர் ஒருவரே இரவு நேரத்தில் தீ வைத்துக் கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

தீவைத்ததில் வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் தீக்கு இரையானதுடன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மாற்று துணிக்கு கூட வழியில்லாமல் நிற்கதியாக நிற்க வைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமா குடும்பத்தினர்
பிரேமா குடும்பத்தினர்

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்தவர் பிரேமா (35). இவரின் கணவர் நாகராஜன் (40) துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு உதயா என்ற மகன், பிரீத்தி என்ற மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சொத்துப் பிரச்னையில் பிரேமாவின் அண்ணன் மனைவி ரேவதி, பிரேமாவின் வீட்டை தீ வைத்து எரித்துள்ளார். இதில் வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் பொருள்கள் அனைத்தும் தீக்கு இரையானதுடன் பிரேமாவின் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. ஒரே இரவில் தன் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதை நினைத்து பிரேமா அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

`வரதட்சணை கொடுமை, கணவருடன் வாழவிடலை!’- மாமியாருக்குத் தீ வைத்த மருமகள்

இது குறித்து பிரேமாவிடம் பேசினோம். ``நானும் என் வீட்டுக்காரரும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டோம் எங்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஆகிறது. என் மகள் பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறாள். மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். என்னோட அப்பா, அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் நான்தான் அவர்களைக் கவனித்து வருகிறேன்.

எரியும் வீடு
எரியும் வீடு

எங்க அண்ணன் வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள இடத்தில் சிறிய அளவிலான கூரை வீட்டில் நாங்க வசித்து வருகிறோம். நத்தம் புறம்போக்கான அந்த இடத்துக்கு என் பெயரில் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை நான் செலுத்தி வருகிறேன். இந்த நிலையில், பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக என் கணவர் கடந்த இரண்டு வருடங்களாக துபாயில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எங்க பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக குருவி சேர்ப்பது போல் பணம், நகை உள்ளிட்டவைகளைச் சேர்த்து வைத்தோம்.

இந்த நிலையில், நாங்க இருக்கும் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என எங்க அண்ணன் மனைவியான என்னோட அண்ணி ரேவதி மற்றும் அவரின் அக்கா ஆகியோர் எங்களிடம் பிரச்னை செய்துகொண்டே இருந்தனர். இதையடுத்து, இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்க உள்ளே தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இரவு 2 மணியளவில் வீட்டுக் கூரை மேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். கூரை எரிவதைப் பார்த்த என் மகள் அலறித் துடித்து `அம்மா கூரை எரியுது’ என்றாள். அதற்குள் தீ முழுவதும் பரவி விட்டது நாங்க உயிர் பிழைப்பதற்கு பெரும்பாடாகி விட்டது.

தீயில் எரிந்த பொருள்
தீயில் எரிந்த பொருள்

இதில் என் மகள் கல்யாணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.1,80,000 பணம், உடைகள் மற்றும் வீட்டிலிருந்த பொருள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. ஒரே இரவில் மாற்றுத் துணிக்கு வழியில்லாமலும், இருப்பதற்கு வீடு இல்லாமலும் நாங்க நடுத்தெருவுக்கு வந்து விட்டோம். என் மகன் போலீஸாக வேண்டும் என்ற லட்சியத்துக்காக ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயித்து பல மெடல்கள் வாங்கியிருக்கிறான் அவையும் தீயில் எரிந்து விட்டன.

`இனி என்னால போலீஸ் ஆகமுடியாதாம்மா?’ என அவன் கலங்கியது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது. பொண்ணை ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போதிலிருந்தே சிக்கனமாக இருந்து சேர்த்து வைத்த பொருள்களும் எரிந்து விட்டன. இப்படி ஒரே இரவில் எங்களுடைய கனவுகளைச் சிதைப்பதற்கு எங்க அண்ணிக்கு எப்படிதான் மனசு வந்ததோ தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை நான் இன்னும் என் கணவரிடம் சொல்லவில்லை இதைச் சொன்னால் அவர் துடிதுடித்துப் போய்டுவார்.

வீட்டின் முன்பு பிரேமாவின் மகன்
வீட்டின் முன்பு பிரேமாவின் மகன்
நள்ளிரவில் திடீர் தீ; பற்றியெரிந்த 1,000-த்துக்கும் மேற்பட்ட குடிசைகள்! - டெல்லி அதிர்ச்சி

இப்போதைக்கு உறவினர் ஒருவர் வீட்டில் இருக்கிறோம். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், இன்னும் என் அண்ணி தரப்பை கைது செய்யவில்லை. இந்த விஷயத்தில் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு