Published:Updated:

`விஷவாயுவைக் கண்டறியும் ஹெல்மெட்; உடல் பரிசோதனைக்கு நாற்காலி!' - கண்டுபிடிப்பில் அசத்தும் இளைஞர்

தற்போது மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படக்கூடிய வகையில் புதிய நாற்காலி ஒன்றை உருவாக்கி வருகிறேன். இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

அமிர்த கணேஷ்
அமிர்த கணேஷ் ( ம.அரவிந்த் )

பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளால் அசத்தும் தஞ்சாவூர் இளைஞர் ஒருவர், ``மத்திய மாநில அரசுகள் என்னை ஊக்கப்படுத்தி வேண்டிய உதவிகள் செய்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் இன்னும் பல கருவிகளைக் கண்டுபிடிப்பேன்'' எனத் தெரிவித்தார்.

கருவியுடன் அமிர்த கணேஷ்
கருவியுடன் அமிர்த கணேஷ்

தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் அமிர்த கணேஷ் பி.இ எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் படித்திருக்கிறார். இவர் படித்து முடித்த பிறகு, கடந்த 12 ஆண்டுகளாக விவசாயம், ராணுவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மருத்துவத்துகுப் பயன்படக்கூடிய 600-க்கும் மேற்பட்ட புதிய கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார். தற்போது பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ள இவரை சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அமிர்த கணேஷ் கூறுகையில், ``நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலான பொருள்களைக் கண்டுபிடித்து வருகிறேன். பாதாள சாக்கடை சுத்தம் செய்யும்போது அந்தப் பணியில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. அதுபோன்ற செய்தி என்னை மிகவும் பாதித்து வருத்தமடையச் செய்தது.

கருவி பொறுத்தப்பட்ட ஹெல்மெட்
கருவி பொறுத்தப்பட்ட ஹெல்மெட்

இதைத் தடுக்கும் வகையில் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து அதன்படி புதிய கருவியைத் தயாரித்துள்ளேன். அதாவது, பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் இருக்கும் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் விஷவாயுக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில், விஷவாயுக்கள் இருக்கிறதா என்பதை மேலிருந்தபடியே குழாய் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ளும் வீதமாக, கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். அதவாது, குழாய் போன்ற கருவியைத் தொழிலாளர்கள் இறங்கக்கூடிய பாதாள சாக்கடையின் உள்ளே செலுத்தினால், அந்த இடத்தில் இருக்கும் வாயுக்களில் விஷத்தன்மை இருந்தால் குழாய் போன்ற அந்தக் கருவி உடனடியாக அதிர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்துவிடும். அதன் பிறகு சக்கர் எனப்படும் கருவி மூலமாக விஷ வாயுவை வெளியேற்றிவிட்டு சுத்தம் செய்வதற்கும் கருவி கண்டுபிடித்துள்ளேன்.

`இப்போ 2 புத்தகம் எழுதியாச்சு; 2 ஆப் உருவாக்கியாச்சு!' - சாதிக்கும் சிவகாசி பள்ளி மாணவர்

சில நேரங்களில் சுத்தம் செய்துகொண்டு இருக்கும்போதே, திடீரென விஷவாயுக்கள் வெளியேறி உயிரிழப்பு ஏற்படுவதும் உண்டு. இதைத் தவிர்க்கும் வகையில் விஷவாயுவைக் கண்டறியும் கருவியுடன்கூடிய ஒரு ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளேன். அதாவது, பாதாள சாக்கடை மற்றும் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். அப்போது மேல்பகுதியில் இருக்கும் நபர்கள் இந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டு பணி செய்யும்போது திடீரென விஷவாயு ஏற்பட்டால் ஹெல்மெட்டில் பொறுத்தப்பட்டுள்ள கருவி ஒலியை ஏற்படுத்தி தொட்டிக்குள் இருப்பவரை எச்சரிக்கும்.

அமிர்தகணேஷ்
அமிர்தகணேஷ்

இதேபோல் மேலே இருப்பவர்கள் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் சிகப்பு விளக்கு மற்றும் ஒலி எழுப்பி தொட்டிக்குள் இருப்பவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதை தெரியப்படுத்திவிடும். இதன்மூலம் உள்ளே இருப்பவர் மட்டுமல்லாது வெளியே இருப்பவர்களுக்கும் எச்சரிக்கையை ஏற்படுத்துவதால், விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கக்கூடிய வகையில் ஹெல்மெட் மற்றும் குழாய் கண்டுபிடித்துள்ளேன்.

மேலும், மின் அளவு குறியீட்டாளர்கள் வீடு வீடாகச் சென்று மின் அளவீடை குறிப்பதற்குப் பதிலாக, ஒரு கிலோ மீட்டர் அளவுக்குள்ளான இடத்தில் இருந்துகொண்டே அந்த வீட்டின் மின் அளவைக் குறிக்கக்கூடிய வகையிலான கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளேன். இதன்மூலம் நேரம் விரயமாவது தடுக்கப்படுவதுடன் வீட்டில் ஆள் இல்லை என்றாலும் மீட்டர் பாக்ஸில் உள்ள மின் அளவின் எண்ணிக்கை கணக்கெடுத்து கொள்ளலாம். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அசைவின் மூலம், அவர்கள் இழந்த உறுப்புகளைச் செயல்பட வைக்கும் கருவி, ராணுவத்தில் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றி, எதிரிகளை தாக்கக்கூடிய கருவி உள்ளிட்டவையும் கண்டுபிடித்துள்ளேன். தற்போது மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படக்கூடிய வகையில் புதிய நாற்காலி ஒன்றை உருவாக்கி வருகிறேன். இது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதாவது, உடல்நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர்களுக்கு பிரஷர், சர்க்கரை மற்றும் உடலில் உள்ள வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பல வகை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

அமிர்தகணேஷ்
அமிர்தகணேஷ்

தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு பயன்படக்கூடிய வகையில் புதிய நாற்காலி ஒன்றை கண்டுபிடித்து வருகிறேன். இது விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. உடல்நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும்போது அவர்களுக்கு பிரஷர், சர்க்கரை மற்றும் உடலில் உள்ள வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பல வகை பரிசோதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

பேப்பர் ரோல் நெல் விதைப்பு செலவைக் குறைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

இதன் மூலம் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நபர் மேலும் வேதனைக்குள்ளாவார். அத்துடன் நேர விரயமும் ஏற்படும். ஆனால், கருவியுடன் கூடிய இந்தப் புதிய நாற்காலியில் உட்கார்ந்தால் உடலில் உள்ள பிரச்னைகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்து மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர் சிஸ்டத்துக்கு அனுப்பிவிடும். உடனே, அவர்கள் பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு சிகிச்சையைத் தொடங்கிவிடலாம்.

கருவி
கருவி

மேலும், கருவிகள் கண்டுபிடிப்பு குறித்து 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறேன். இதற்காகக் கட்டணம் ஏதும் வாங்குவது இல்லை. என்னுடைய இந்தச் செயலுக்கு என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பெறும் உறுதுணையாக இருக்கின்றனர். நான் 600 கருவிகளை வரை கண்டுபிடித்திருக்கிறேன் அதில் பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படக்கூடிய விபத்தை தடுக்கும் வகையிலான கருவி கண்டுபிடித்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். அதே சமயம் எனக்கும், என்னால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். மத்திய, மாநில அரசுகள் என்னை ஊக்கப்படுத்தி வேண்டிய உதவிகள் செய்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் இன்னும் பல கருவிகளைக் கண்டுபிடித்துத் தருவேன். மேலும், கண்டுபிடித்த கருவிகளை அரசு பயன்படுத்துவதற்கான பணிகளையும் செய்வேன்'' என்றார் நம்பிக்கையுடன்.