Published:Updated:

`பென்ஷன் வாங்கப்போனவரு, வழிதவறிட்டாரு! - தஞ்சையில் தவித்த ராமநாதபுரம் முதியவரை நெகிழவைத்த இளைஞர்

நாகரத்தினம்
நாகரத்தினம்

தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்த அந்த முதியவரிடம் பொறுமையாகப் பேசிப்பார்த்திருக்கிறார் ரியாசுதின். முதியவரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தனூர் என்ற தகவல் மட்டுமே தெரிந்திருக்கிறது.

தஞ்சாவூரில் கடந்த சில தினங்களாக ஒரு முதியவர் சுற்றித் திரிந்தார். முதுமையின் காரணமாக, நிதானம் தெரியாமல் இருந்ததால், அவர் யார் எனத் தெரியவில்லை. தஞ்சை வல்லத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், அவருக்கு மனிதாபிமானத்தோடு உதவிகள் செய்திருக்கிறார். மேலும், அந்த முதியவரின் குடும்பத்தினரைத் தேடிக் கண்டுப்பிடித்து, அவர்களோடு சேர்த்து வைத்த சம்பவம் தஞ்சை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சை
தஞ்சை
Representational Image

பொது இடங்களில் யாராவது பரிதாபமான நிலையில் இருந்தால், அவரது அருகில் சென்று, விசாரிப்பதற்குக் கூட யாரும் முன் வருவதில்லை. சமீபகாலமாக மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. ஆனாலும், இன்றைக்கும் ஈர மனம் படைத்த மனிதர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு முதியவர் மயங்கிக் கிடந்திருக்கிறார். அந்த வழியாக வந்த பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றிருக்கிறார்கள். கேட்பாரற்ற நிலையிலேயே நீண்டநேரம் கிடந்திருக்கிறார் அந்த முதியவர்.

இந்நிலையில்தான் தஞ்சை வல்லம் பகுதியைச் சேர்ந்த ரியாசுதின் என்பவர் இருசக்கர வாகனத்தில் அந்த வழியில் சென்றிருக்கிறார். மயங்கிக் கிடந்த முதியவருக்கு உதவிகளைச் செய்து, தஞ்சாவூர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் உரிய முறையில் மதிப்பளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், ரியாசுதின் அந்த முதியவரை அப்படியே விட்டுவிடவில்லை. தெளிவாகப் பேச முடியாத நிலையில் இருந்த அந்த முதியவரிடம் பொறுமையாகப் பேசிப் பார்த்திருக்கிறார் ரியாசுதீன். முதியவரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தனூர் என்ற தகவல் மட்டுமே தெரிந்திருக்கிறது.

`தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப் பதறவைத்த டிப் டாப் முதியவர்

இதையடுத்து ராமநாதபுரத்தில் காவல்நிலையத்துக்குத் தொடர்பு கொண்டிருக்கிறார். சாத்தனூரில் உள்ள சிலரின் செல்போன் எண்களைக் காவல்துறையினர் கொடுத்திருக்கிறார்கள். முதியவரை போட்டோ எடுத்து, வாட்ஸ் அப்பில் அந்த எண்களுக்கு அனுப்பியிருக்கிறார். அங்குள்ள வாட்ஸ்அப் குரூப்களில் அது பகிரப்பட்டுள்ளது. முதியவர் குறித்த தகவல் பரவத் தொடங்கியிருக்கிறது. பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜராமன் என்பவர், ரியாசுதினைத் தொடர்புகொண்டு, புகைப்படத்தில் இருப்பது தனது தந்தை நாகரத்தினம் எனத் தெரிவித்திருக்கிறார்.

`100 மீ தூரத்தில் ரயில்; தண்டவாளத்தில் கிடந்த முதியவர்!' - விரைந்து செயல்பட்ட ஆரல்வாய்மொழி போலீஸார்

பரமக்குடியில் உள்ள வங்கிக்கு பென்ஷன் வாங்கச் சென்ற தனது தந்தை நாகரத்தினம், சொந்த ஊருக்கு வருவதற்குப் பதிலாக, நிதானம் தெரியாமல், தஞ்சாவூருக்கு ரயில் ஏறி வந்துவிட்டதாக, அவரது மகன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தஞ்சாவூர் வந்த ராஜராமன், ரியாசுதினுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து, தனது தந்தை நாகரத்தினத்தை ராமநாதபுரத்திற்கு அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் தஞ்சை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு