Published:Updated:

ராஜராஜ சோழன் வெட்டிய குளம்! -லாரி தண்ணீர் டு காவிரி நீர்; அசத்திய இளைஞர்கள்

அழகி குளம்
News
அழகி குளம்

`உங்கள் அனைவர் காலில் வேண்டுமானாலும் விழுகிறோம். நம்ம குளம் நிரம்ப வேண்டும், இதற்காக ஏற்படக்கூடிய சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு உதவுங்கள்' என்றோம்.

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குளம் ஒன்று அழியும் நிலைக்குச் சென்றுவிட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி இளைஞர்கள் குளத்தைத் தூர் வாரி மீட்டதுடன், பெரும் முயற்சியினால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நீரால் அந்தக் குளத்தை நிரம்பவைத்துள்ளது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் தண்ணீர்
குளத்தில் தண்ணீர்

தஞ்சாவூர் பர்மா பஜார் சாலையின் கிழக்குப் பகுதியில், குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்துள்ளது, அழகி குளம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் குளத்தில், கருவேல மரங்கள் காடு போல் மண்டிக்கிடந்ததால், பல வருடங்களாக குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவிட்டன. அத்துடன், குளத்தையொட்டி கீழவாசல் பகுதிக்கான இணைப்புச் சாலை செல்கிறது. அதன்வழியாக பொதுமக்கள் செல்லும்போது செயின் பறிப்பு, பெண்களிடம் சில்மிஷம் மற்றும் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள், குளத்தை மையமாக வைத்து நடந்து வந்தன. மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, பெரும் முயற்சி எடுத்து, கடந்த வருடம் அந்தக் குளத்தை தூர்வாரினர். தற்போது, காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதுடன், அந்தத் தடமே இல்லாத அளவுக்கு அழிந்துவிட்டது. இளைஞர்கள் சிலர் பெரும் முயற்சி எடுத்து, குழாய்கள் மூலமாக குளத்துக்குத் தண்ணீர் வர வைத்துள்ளனர். 50 வருடங்களுக்குப் பிறகு குளம் நிரம்பத் தொடங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றிலிருந்து செல்லும் குழாய்
காவிரி ஆற்றிலிருந்து செல்லும் குழாய்

இதுகுறித்து செல்வபெருமாள் என்பவரிடம் பேசினோம். ``மாமன்னன் ராஜராஜ சோழன், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்தவர் என்பதால், அவரது ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூரின் நகரப் பகுதியில் மட்டும் நீர்த் தேவைக்காக 50-க்கும் மேற்பட்ட குளங்களை வெட்டியுள்ளார். இதில், இந்த அழகி குளமும் அடங்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் குளத்துக்கு, அப்போது காவிரியின் கிளை ஆறான புது ஆறு என அழைக்கப்படும் கல்லணைக் கால்வாயிலிருந்து தண்ணீர் வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், ஆற்றிலிருந்து நீர் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அழகி குளம் வறண்டு காணப்பட்டது. அத்துடன், கருவேல மரங்கள் மண்டி குப்பை மேடாக மாறிவிட்டன. குளத்தின் பெருமையை அறிந்த எங்கள் பகுதியினர், கடந்த வருடம் மீண்டும் குளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இதற்காக, முதலில் கருவேல மரங்களை வெட்டியதுடன், அதில் கிடந்த குப்பைகளையும் அகற்றினோம்.

குழாய்
குழாய்

மேலும், தொண்டு நிறுவனத்தின் உதவி மற்றும் எங்கள் சொந்தப் பணத்தின் மூலம் சுமார் 8 லட்சம் செலவில் குளத்தைத் தூர் வாரியதுடன், கரைகள் அமைத்து கம்பி வேலி கொண்டு நான்கு புறமும் அடைத்தோம். கரைகளின் மேல் வன்னி, வில்வம், மந்தாரை, மனோரஞ்சிதம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வைத்து மரமாக்கிவருகிறோம். 400-க்கும் அதிகமான பனை விதைகளை விதைத்துள்ளோம். ஒரு பூங்காவைப் போல் காட்சி தரக்கூடிய வகையில் கரைப் பகுதியில் உட்காருவதற்கான வசதியும் செய்திருக்கிறோம்.

யோகா, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பர்ய கலைகளைக் கற்றுத் தருவதுடன், ஆன்மிக நிகழ்ச்சிகளையும் குளத்தின் கரைப் பகுதியில் நடத்திவருகிறோம். கடந்த வருடம், லாரி மூலம் தண்ணீர் கொண்டுவந்து குளத்தில் நிரப்பி, ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினோம். இந்நிலையில், கடந்த மாதம் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை கால்வாயில் பாய்ந்து சென்றது.

தண்ணீர் வரும் குழாய்
தண்ணீர் வரும் குழாய்

எப்படியாவது குளத்துக்கு காவிரிநீரைக் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், ஆற்றிலிருந்து குளத்திற்கு வரும் நீர் வழிப்பாதைகள் ஆக்ரமிப்புகளால் அழிந்துவிட்டன. இதனால் குழாய் மூலம் காவிரி நீரை குளத்துக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்தோம். இதையடுத்து, ஆற்றிலிருந்து குளம் வரைக்கும் விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய குழாய்களை தற்காலிகமாக சாலை மற்றும் குடியிருப்புக்குள்ளும் அமைத்தோம்.

இதற்கு, முதலில் பலர் ஒத்துக்கொள்ளவில்லை. உடனே இளைஞர்கள் சிலர், `உங்கள் அனைவர் காலில் வேண்டுமானாலும் விழுகிறோம். நம்ம குளம் நிரம்ப வேண்டும், இதற்காக ஏற்படக்கூடிய சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு உதவுங்கள்' என்றோம்.

குளத்திற்கு வரும் தண்ணீர்
குளத்திற்கு வரும் தண்ணீர்

ஒருவரது வீட்டிற்குள்ளேயே குழாய் வருகிறது. அவர், பெரிய மனதுடன் இதற்கு ஒப்புக்கொண்டார். இப்படியாக, கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கு மேல் சுமார் 1,400 அடி நீளம் வரை குழாய் அமைத்து, ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தோம். கடந்த இரண்டு தினங்களாக குளத்துக்குத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தற்போது, கொஞ்சம் கொஞ்சமாகக் குளம் நிரம்பிவருகிறது.

இதைப் பார்க்கும்போது எங்களுக்குள் பெரும் மகிழ்ச்சி. ஏதோ பெரிய விஷயத்தை சாதித்துவிட்ட அனுபவம் ஏற்பட்டது. இதற்காக எவ்வளவோ இடையூறுகளைச் சந்தித்தோம். சிலர், குளம் எங்களுடையது எனச் சொந்தம் கொண்டாடினார்கள். பலர், இதைவைத்து அரசியலும் செய்தனர்.

காவிரி நீர்
காவிரி நீர்

ஆனால், அதையெல்லாம் மீறி, நல்ல உள்ளங்களின் உதவியால் ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட இந்தக் குளத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்துவிட்டோம். இது, தற்காலிகமானதுதான். ஆனால். ஆற்றில் தண்ணீர் வரும்போதெல்லாம் நிரந்தரமாக குளத்திற்கு வரும் வகையில் மாவட்ட நிர்வாகம் புதிய நீர்வழிப் பாதையை உருவாக்கித் தர வேண்டும். அது, எங்களுடைய ஆசை மட்டுமல்ல கனவும்கூட. அதை இந்த அரசு நிறைவேற்றித் தரும் எனவும் நம்புகிறோம்" என்றார் உறுதியான குரலில்.