Published:Updated:

`ஊரடங்கு முடியும்வரை உணவு கொடுப்போம்!’ - நெகிழவைக்கும் தஞ்சை இளைஞர்கள்

உணவு கொடுக்கும் இளைஞர்கள்
உணவு கொடுக்கும் இளைஞர்கள் ( ம.அரவிந்த் )

`கவலைப்படாதீங்கய்யா, இன்றைக்கு மட்டுமல்ல ஊரடங்கு அமலில் இருக்கும் எல்லா நாள்களிலும் நாங்க வந்து சாப்பாடு தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தஞ்சாவூரில் ஆதரவற்றநிலையில் சாலையில் வசிப்போருக்கு உணவு வழங்கியதுடன் ஊரடங்கு தொடரும் வரை உணவு கொடுப்போம் என இளைஞர்கள் சிலர் முன்வந்துள்ளனர். இதேபோல் வீட்டின் உரிமையாளர் ஒருவர் தன்னுடைய வீட்டில் குடியிருப்பவர்களிடம் வரும் மாதத்திற்கு வாடகை வேண்டாம் எனக் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு உதவும் இளைஞர்கள்
கொரோனா பாதிப்பு உதவும் இளைஞர்கள்

உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் அச்சத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தால் மட்டுமே கொரோனா பரவுவதைக் கட்டுபடுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரம் கொடுக்க பலர் களமிறங்கியிருப்பது மனதிற்கு பெரும் ஆறுதலைத் தருகிறது. குறிப்பாக, தஞ்சாவூரில் 4 இளைஞர்கள் ஆதரவற்ற சாலையோரம் வசிக்கும் நபர்களைக் கண்டுகொண்டு அவர்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்துள்ளனர். இதே போல் சுமார் 10 வீடுகள் வரை வாடகைக்கு விட்டிருக்கும் ஒருவர் வரும் மாதம் வாடைகை வேண்டாம் எனத் தனது வீட்டில் குடியிருப்பவர்களிடம் கூறியிருக்கிறார்.

இளைஞர்
இளைஞர்

இது குறித்து சமூக ஆர்வலரான ராம்குமார் என்பவரிடம் பேசினோம். ``கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க 21 நாள்கள் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தற்காப்பு நடவடிக்கைதான் என்றாலும், இதனால் தினக்கூலி அடிப்படையில் வேலைபார்த்த தொழிலாளர்கள், யாருமற்ற சாலையோரம் வசிக்கும் மனிதர்கள் எனப் பலர் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இளைஞர்கள் சிலர் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். தங்கள் உயிரைப் பற்றி நினைக்காமல் பசியால் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி வருவது பாராட்டுதலுக்குரியது. தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், சிவபாலன், சச்சின், மணிவண்ணன் ஆகிய நான்கு இளைஞர்கள் பெரியகோயில் மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சாம்பார், தயிர் சாதம் மற்றும் ஊறுகாய் கொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அப்போது ஒரு பெரியவர், சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கியதும் முகம் மலர்ந்தவராய்,`எங்களோட பசியாத்த யாரும் வரமாட்டங்களான்னு கண்கள் இருள சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தச் சின்ன வயசுல உங்களுக்கு பெரிய மனசுப்பா’ என்றார். அதற்கு அந்த இளைஞர்கள், `கவலைப்படாதீங்கய்யா, இன்றைக்கு மட்டுமல்ல ஊரடங்கு அமலில் இருக்கும் எல்லா நாள்களிலும் நாங்க வந்து சாப்பாடு தருகிறோம்’ எனக் கூறியுள்ளனர். இதுபோன்ற உதவுபவர்கள் போலீஸ் உள்ளிட்டவர்களால் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வருகிறது. இல்லாதவர்களுக்கு உதவ நினைக்கும் தன்னார்வலர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.

இதேபோல் தஞ்சாவூர் அன்பு நகரைச் சேந்தவர் முருகவேல் ராஜாங்கம். இவர், வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சுமார் 10 வீடுகள் வரை உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், வியாபாரம் செய்வர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் நடந்ததும் இங்கு நடப்பதும்... ஒரு நேரடி அனுபவத்துடன் 'கொரோனா' பாடங்கள்!

இதனால், தன் வீட்டில் வசிப்பவர்களால் வீட்டு வாடகை தர முடியாது என்பதை உணர்ந்த அவர், வெளிநாட்டில் இருந்தபடியே போன் செய்து, வரும் மாதம் யாரும் வாடகை தர வேண்டாம் என கூறியிருக்கிறார். இதுபோன்ற செயல்கள் தஞ்சை மக்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நெறஞ்ச மனசு கொண்டவர்கள் இருப்பதினால் கொடிய கொரோனாவை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இதுபோன்ற இன்னும் பல மனிதர்கள் மூலம் மனிதம் வாழட்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு