Published:Updated:

`நாளொன்றுக்கு 500 பேர்; 7 வண்ண டோக்கன்கள்!' -டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடு

டாஸ்மாக் கடையில் வழங்கப்பட உள்ள டோக்கன்கள்
டாஸ்மாக் கடையில் வழங்கப்பட உள்ள டோக்கன்கள்

மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாகக் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 70 பேரை மட்டுமே அனுமதிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. தொடக்கத்தில், மதுவுக்கு அடிமையானவர்கள் சற்று சிரமப்பட்டபோதிலும், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுவின் பிடியிலிருந்து மீளத் தொடங்கினார்கள்.

டாஸ்மாக் மது
டாஸ்மாக் மது

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி, ஊரடங்கு உத்தரவைத் தளர்த்திய தமிழக அரசு, மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. அதனால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், மதுக் கடைகள் முன்பாக கூட்டம் கூடியது. காவல்துறையினர் மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலை உருவானது.

டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு அவசரகதியில் திறந்ததற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து கடைகளை மூடிவைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அதனால் சென்னை உயர் நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

அதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பாக வாதிடப்பட்டது. அதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதனால் டாஸ்மாக் நிர்வாகம், நாளை முதல் கடைகளைத் திறந்து மது விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, சில வழிகாட்டு நெறிமுறைகளை மதுக்கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 

வழங்கப்பட உள்ள டோக்கன்கள்
வழங்கப்பட உள்ள டோக்கன்கள்

அதன்படி, ஒரு வாரத்துக்கு ஏழு வண்ணங்களில் டோக்கன்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மணிநேரத்தில் 70 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு