Published:Updated:

நீலகிரி: `வேலையை செஞ்சுட்டோம்... வருமானம்..?!’ - தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராகத் திரண்ட தொழிலாளர்கள்

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

``அட்டை கடிக்கும், யானைக்கும் பயந்து இலையைப் பறிச்சுக் கொண்டாறோம். புள்ளகுட்டிங்களைவெச்சுக்கிட்டு என்ன பண்ணுவோமுன்னு தெரியலை. இதுல தீவாளி வேற வருது...’’

பல மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட நிர்வாகங்களையும், 20 விழுக்காடு போனஸ் தர மறுக்கும் அரசுத் தோட்டக் கழகத்தையும் கண்டித்து ஒரு வாரமாக தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பணப்பயிரான தேயிலையை நீலகிரியில் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்திருந்தாலும், மாவட்டத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இன்றைக்குத் தேயிலை தொழில் விளங்கிவருகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

நீலகிரியில் சுமார் 55,000 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில் தேயிலையே அதிக அளவில் இருக்கிறது. 50,000-க்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகள், 100-க்கும் அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள், தனியார் மற்றும் அரசுத் தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. இந்தத் தோட்டங்களில் மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

மழை, பனி, வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் எனப் பல சிக்கல்களை எதிர்கொண்டு மலைச்சரிவுகளில் நாள்முழுக்க பணியாற்றும் இந்தத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமே இன்னும் எட்டாக்கனியாக இருப்பதாகச் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

கொரோனா காலத்திலும் பணியாற்றிவரும் இந்த மக்களுக்கு கொரோனாவைக் காரணம் காட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. மேலும் போனஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கையை விரித்துவிட்டன நிறுவனங்கள். `டேன் டீ’ [TANTEA] எனப்படும் தமிழ்நாடு அரசுத் தேயிலைத் தோட்டக் கழகமே நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் 10 விழுக்காடு போனஸை அறிவித்திருக்கிறது. இந்தநிலையில் ஊழியர்கள் 20 விழுக்காடு கேட்டுப் போராடிவருகின்றனர்.

கூடலூரைச் சேர்ந்த தோட்டப் பெண் தொழிலாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``நாள் முழுக்க இலை பறிச்சாலும், முந்நூறு ரூவாயைக் கண்ணுல பார்க்க முடியாது. இத்தனை நாள் டீக்கு விலை இல்லைன்னு சொன்னாங்க. இப்போ நல்ல ரேட்டுக்குப் போகுது. ஆனாலும் அஞ்சு மாசமாச் சம்பளம் தராம இழுத்தடிக்கிறாங்க. அட்டை கடிக்கும், யானைக்கும் பயந்து இலையைப் பறிச்சுக் கொண்டாறோம். புள்ளகுட்டிங்களைவெச்சுக்கிட்டு என்ன பண்ணுவோமுன்னு தெரியலை. இதுல தீவாளி வேற வருது... வேலயை செஞ்சுட்டு ஒரு வருமானமும் கிடைக்காம ஆயிரக்கணக்கான குடும்பம் காத்துக்கிடக்குறோம்’’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்

இந்த விவகாரம் குறித்து கூடலூர் எம்.எல்.ஏ [தி.மு.க] திராவிட மணியிடம் பேசினோம். ``எங்களது ஆட்சியில், அரசுத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. தற்போது தேயிலைக்கு நல்ல விலை கிடைத்துவருகிறது. தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பால் லாபம் அடைந்த நிர்வாகம் உரிய போனஸை வழங்க மறுக்கிறது. உரிய போனஸ் வழங்க அழுத்தம் கொடுத்துவருகிறோம்’’ என்றார்.

``தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கேட்பது குறித்து அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம்" என டேன் டீ மேலாண்மை இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு