Published:Updated:

சிவகங்கை: `புத்தகக் கடையில் மூலிகை டீ அங்காடி!’ - இளைஞரின் அசத்தல் முயற்சி

மூலிகை டீ
மூலிகை டீ

மூலிகை டீ செய்ய கொஞ்சம் டைம் எடுத்துக்கும். அதனால வாடிக்கையாளர்கள் டீக்காகக் காத்திருக்கும் நேரத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடலாம்னு படிக்க புத்தகம் கொடுப்பேன்.

சிவகங்கை மாவட்டம் இலந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் காளவாசல் பகுதியில் 'தமிழ்குடியோன்' என்ற பெயரில் பழைய புத்தகக் கடை வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் எனச் சலுகை விலையில் புத்தகம் வழங்கி வருகிறார்.

புத்தகக் கடை
புத்தகக் கடை

கொரோனோ ஊரடங்கு கடுமையாக இருந்த சமயத்தில் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் சென்று இலவசமாகப் புத்தகம் வழங்கி வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தினார். இந்நிலையில் தனது புத்தகக் கடையில் மூலிகை தேனீர் அங்காடி திறந்து வரவேற்புகளை பெற்றுள்ளார். தனது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளார்கள் இலவசமாகப் புத்தகங்கள் படித்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்து பொதுமக்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இது குறித்து புத்தகக் கடை முருகன், ``எனக்கு தொல்லியல், இயற்கை வளம், புத்தக வாசிப்பு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்டவைகள் மீது தீராத காதல் உள்ளது. இப்ப என் புத்தகக் கடை முன்னாடி மூலிகை டீக்கடை ஆரம்பிச்சிருக்கேன். நம்மல சுற்றிக் கிடக்கும் மூலிகைகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அதன் மூலமா மூலிகை இனங்களை பாதுகாக்கவும், தற்சார்பு வாழ்க்கைக்கு மக்களை பழக்கப்படுத்தனும்னு விரும்புறேன். மூலிகை டீ செய்ய கொஞ்சம் டைம் எடுத்துக்கும். அதனால வாடிக்கையாளர்கள் டீக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திடலாம்னு படிக்க புத்தகம் கொடுப்பேன்.

மூலிகை டீ
மூலிகை டீ

என் மூலிகை டீ வாடிக்கையாளர் புத்தகங்கள படிச்சுக்கிட்டே டீ குடிச்சுக்கலாம். இதனால்தான் இந்த மூலிகை டீக் கடைய ஆரம்பிச்சிருக்கேன். டீ குடிச்சா தான் புத்தகம் படிக்கனும்னு கட்டாயம் அல்ல. தாராளமாக யாவரும் வந்து இலவசமாக புத்தகம் படிக்கலாம். எந்த தடையும் இல்ல. தேவைப்படும் நபர்கள் புத்தகங்கள விலைக்கு வாங்கிக்கலாம். அதனால என்னுடைய பொருளாதரத்தையும் நான் ஈட்டிக்க வாய்ப்பா இருக்கும்.

நாகரீக உணவு என்ற நினைச்சுக்கிட்டு தீங்கான துரித உணவை சாப்பிட்டு நோயுடன் வாழ்ந்துகிட்டு இருக்கிற இந்த சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாத்தணும்னா... நம்ம முன்னோர்கள் சொன்ன வாழ்வியலை கடைப்பிடிக்கணும். அதுக்கான முயற்சிகளை என்னால முடிஞ்சளவு செய்வதற்கு வேலை செய்வேன். மூலிகை டீக்கடையில ஆவாரை, நத்தைச் சூரி, கற்பூரவல்லி, ஆடாதோடை, தூதுவளை என 5 வகையான மூலிகை டீ, தினமும் ஒரு முளைகட்டிய சிறுதானியமும் விற்பனை செய்றேன். டீ வாங்கினா சிறுதானியம் இலவசம். அதுக்கு தனியா காசு வாங்க மாட்டேன்.

மூலிகை டீ
மூலிகை டீ

மூலிகை டீ விலை 10 ரூபாய்தான். தொடர்ந்து இதே விலைதான் நீடிக்கணும்னு நினைக்கிறேன். என்னுடைய கடைய விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. மக்களிடம் வரவேற்பு இருந்தா போதும். ஆரோக்கியம், மூலிகை பாதுகாப்பு, தற்சார்பு வாழ்வியல், வாசிப்பு பழக்கம் அதிகரிப்பு, அடிப்படை பொருளாதார தேவை பூர்த்தி, சமூக சேவை என 6 விஷயத்தை இந்த மூலிகை தேநீர் அங்காடி மூலமா செய்ய முடிகிறது” என்று நெகிழ்ந்தார்.

வாடிக்கையாளர்கள் சிலர், ``10 ரூபாய்க்கு மூலிகை டீயும் சிறுதானியமும் கொடுக்கிறாங்க. கொரோனா சமயத்தில் அனைவரும் இந்த உணவுகள் தேவை. இந்த மூலிகை டீ மற்றும் தானியங்கள் விலை 30.ரூ இருக்கும் ஆனா சமூக நோக்கத்தோட விலை குறைவாக கிடைக்கிறது பாராட்ட வேண்டிய ஒன்று. டீயோட புத்தகம் புரட்டுரதும் வித்தியாச அனுபவமாதான் இருக்கு” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு