Published:Updated:

`கரும்புத் தோட்டத்தில் கள்ளச் சாராயம்..!' - தென்காசிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

சாராயம் காய்ச்சப்பட்ட கரும்புத் தோட்டம்
சாராயம் காய்ச்சப்பட்ட கரும்புத் தோட்டம்

கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதுடன் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டதால் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய கரும்புத் தோட்டத்துக்குள் சாராயம் காய்ச்சியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வணிக நிறுவனங்கள் திறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

`கேரள எல்லை... கூடங்குளம்... மகேந்திரகிரி இஸ்ரோ மையம்!’ - கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டும் நெல்லை

இந்த நிலையில்,  தென்காசி மாவட்டம் ராயகிரி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச முயன்றதாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கைதானவர்களில் ஒருவர் ஆசிரியர் என்பது தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு `Guard of honour’ - அசத்திய நெல்லை மாநகரக் காவல்துறை 

தென்காசி மாவட்டம் ராயகிரி அருகே உள்ள தெற்குச் சத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் சிவன். 55 வயது நிரம்பிய அவர் அதே பகுதியில் உள்ள பிச்சாண்டி என்பவருக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார்.

பள்ளி ஆசிரியர் சிவன்
பள்ளி ஆசிரியர் சிவன்

கொரோனா பாதிப்பு காரணமாக தோட்ட வேலைக்கு ஆட்கள் யாரும் வருவதில்லை. அத்துடன், பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஆசிரியர் சிவனுக்கு நேரம் போகவில்லை. நீண்ட நாள்களாக மது குடிக்காததால் தன் நண்பரான தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்ற ராபர்ட்டை அழைத்துப் பேசியிருக்கிறார்.

மது கிடைக்காத விரக்தியில் இருந்த ஆசிரியர் சிவன் மற்றும் அந்தோணிராஜ் ஆகிய இருவரும் கரும்புத் தோட்டத்தில் சாராயம் காய்ச்ச முடிவெடுத்திருக்கிறார்கள். தற்போது கரும்பு நன்கு வளர்ந்து இருப்பதால் அதைப் பயன்படுத்தி சாராயம் காய்ச்சியிருக்கிறார்கள். 

சாராயம் காய்ச்ச உதவிய அந்தோணிராஜ்
சாராயம் காய்ச்ச உதவிய அந்தோணிராஜ்

இருவரும் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதுபற்றி பெருமையாக ஊருக்குள் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவல் மதுவிலக்கு போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது.

தேனி ஆண்டிபட்டியில் தலைதூக்கும் கள்ளச்சாராயம்..! - இரண்டே நாளில் 11 பேர் கைது

தகவலின் அடிப்படையில் சிவகிரி போலீஸார் சிவனின் கரும்புத் தோட்டத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டுள்ளனர். அப்போது தோட்டத்துக்குள் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அங்கிருந்த நான்கு லிட்டர் சாராயத்தையும் அதைத் தயாரிக்கப் பயன்படுத்திய பாத்திரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சாராயம் காய்ச்சப்பட்ட கரும்புத் தோட்டம்
சாராயம் காய்ச்சப்பட்ட கரும்புத் தோட்டம்

``தோட்டத்தில் கரும்பு அறுவடைக்குத் தயாராக இருந்தபோதிலும் ஆட்கள் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் சும்மா இருக்க வேண்டியதிருப்பதால் நேரம் போகவில்லை. மது குடிக்கவும் கடைகள் இல்லை. அதனால்தான் ஓங்கி வளர்ந்த கரும்புக் காட்டுக்குள் சாராயம் காய்ச்சினோம்” என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார், ஆசிரியர் சிவன். 

பள்ளி ஆசிரியரே குடிப்பதற்காக கள்ளச் சாராயம் காய்ச்சிய சம்பவம் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு