Published:Updated:

இது வாத்தியார்களின் வீடு... ஒரே குடும்பத்தில் 7 ஆசிரியர்கள்; அதில் 3 பேருக்கு நல்லாசிரியர் விருது!

நல்லாசிரியர் விருது பெற்ற ஜெகதீசன்
நல்லாசிரியர் விருது பெற்ற ஜெகதீசன்

மொத்தம் இந்தக் குடும்பத்தில் 7 பேர் ஆசிரியர்கள். ஜெகதீசனின் மூத்த மகன் செல்வராஜன் 2017-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். ஜெகதீசனின் இன்னொரு மகனான பிரேம்குமார், இன்று நல்லாசிரியர் விருது பெறுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆசிரியர்கள் என்று சொன்னாலே சமூகத்தில் எப்போதுமே தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. ஒவ்வொரு தனி மனிதரின் வாழ்க்கையிலுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மனதில் ஆழமாக பதிந்து, அவரது நினைவுகளில் வாழ்நாள் முழுவதும் பயணிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் 7 பேர் ஆசிரியர்கள் என்பது நமது கவனத்தை ஈர்க்கிறது. ஒரு வீட்டில் ஒரு ஆசிரியர் இருந்தாலே அந்த வீடு 'வாத்தியார் வீடு' என அப்பகுதியில் மிகுந்த மதிப்போடு பார்க்கப்படும். ஒரே வீட்டில் ஏழு பேர் ஆசிரியர் என்றால், இது வாத்தியார்களின் வீடுதானே?! இதை ஒரு பள்ளிக்கூடம் என்றும் அழைக்கலாம்!
வாத்தியார்களின் வீடு
வாத்தியார்களின் வீடு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செட்டி தெருவில் வசிக்கிறது ஆசிரியர் ஜெகதீசனின் குடும்பம். இவர் 35 ஆண்டுகள் கல்விப் பணியில் ஈடுபட்டவர். கூத்தநல்லூரில் உள்ள மன்-உல்-உலா நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது கல்வி சேவைக்காக, 1987-ம் ஆண்டு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும், 1994-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டது. இவருக்கு இரண்டு மகள்கள், மூன்று மகன்கள். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற நான்கு பேர், ஆசிரியர்கள். இதுமட்டுமல்ல ஜெகதீசனின் ஒரு மருமகனும், ஒரு மருமகளுமே ஆசிரியர்தான். ஆக மொத்தம் இந்தக் குடும்பத்தில் 7 பேர் ஆசிரியர்கள். ஜெகதீசனின் மூத்த மகன் செல்வராஜன் 2017-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார். ஜெகதீசனின் இன்னொரு மகனான பிரேம்குமார், இன்று நல்லாசிரியர் விருது பெறுகிறார்.

செல்வராஜன்
செல்வராஜன்
கப்பல் ஓட்டியது முதல் மளிகைக் கடை நடத்தியது வரை... 150வது பிறந்த நாள் காணும் வ.உ.சி.யின் வரலாறு!

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பிரேம்குமாருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு நாம் பேசினோம். ‘’எங்க அப்பா ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் எங்க குடும்பத்துல உள்ள எல்லோருக்குமே ஆசிரியர் பணியில் ஈடுபாடு ஏற்பட்டது. காலையில ஏழு மணிக்கெல்லாம் வீட்ல இருந்து கிளம்பி ஸ்கூலுக்கு போயிட்டு, இரவு ஏழு மணிக்குதான் வீடு திரும்புவாரு. நாங்க அப்பாவை சந்திக்கக்கூடிய நேரம் ரொம்ப குறைவு. மாணவர்கள் நலன்ல அப்பா ரொம்ப அக்கறையோடு இருப்பார். அதேசமயம் கண்டிப்பானவர். அவர் சமூக அறிவியல் பாடம் நடத்தக்கூடிய விதத்தை பார்த்து, மாணவர்கள் மட்டுமல்ல.... கல்வித்துறை அதிகாரிகளே லயிச்சிப் போயிடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்.

பிரேம்குமார்
பிரேம்குமார்

என்னோட மூத்த அக்கா தமிழ்க்கொடி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். என்னோட அண்ணன் செல்வராஜன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர். என்னோட அண்ணி, நீலாவதி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியை. என்னோட சின்ன அக்கா சாந்தி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. என்னோட அக்கா வீட்டுக்காரரும் தலைமை ஆசிரியராக இருந்தவர்.

நான் மன்னார்குடி பக்கத்துல உள்ள துளசேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கிட்டு இருக்கேன். நல்லாசிரியர் விருது பெறக்கூடிய இந்தத் தருணத்தை நான் ரொம்பவே பெருமிதமாக உணர்றேன். மாணவர்களின் நலனில் இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தணுங்கற கடமையை எனக்கு இந்த விருது உணர்த்தியுள்ளது. ஒரு நாட்டில் எந்த வளமுமே இல்லைனாலும் கூட, அந்த நாட்டில் கல்வி வளம் மட்டும் கிடைத்தாலே அந்த நாடு முன்னேறிடும்னு சொல்லுவாங்க. இருள் நிறைந்த அறையில் தங்க ஆபரணங்கள் தேவையில்லை. ஒரு விளக்கு ஏற்றி வைத்தால்போதும். அந்த அறை முழுவதும் வெளிச்சமாயிடும். கல்வி பணி அவ்வளவு உயர்வானது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு