ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி இந்திரா நகரைச் சேர்ந்த லட்சுமணன் - பூமாதேவி தம்பதியின் மகள் ஆர்த்தி. அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டும், அம்மா மனநலம் பாதிக்கப்பட்டும் உள்ளதால், சிறுமி தன் தாத்தா, பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஆர்த்திக்கு 5 வயது பூர்த்தியாகியதைத் தொடர்ந்து, மேல கடலாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். சிறுமி காதுகளில் காதணி எதுவும் அணியாமல் இருந்ததைப் பார்த்த ஆசிரியர்கள், சிறுமியின் தாத்தாவை அழைத்துக் கேட்டனர். வறுமையின் காரணமாக இதுவரை தன் பேத்திக்கு காது குத்தாமல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார் அவர்.

இதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் சிறுமிக்கு காதணி விழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி சிறுமியின் தாத்தா, பாட்டியுடன் தலைமை ஆசிரியர் சற்பிரசாத மேரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து பேசி விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்படி, கடந்த ஞாயிறு அன்று பள்ளியில் வைத்து சிறுமி ஆர்த்திக்கு காதணிவிழா விமரிசையாக நடந்தது. சிறுமிக்கு பட்டுப் பாவாடை, தேங்காய், பழங்கள் அடங்கிய சீர்வரிசை பொருள்களை எடுத்து வந்த ஆசிரியைகள் அனைவரும் ஒரே மாதிரி புடவை அணிந்திருந்தனர். தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் மடியில் சிறுமியை அமரவைத்து, அனைத்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், கிராமத்தினர் முன்னிலையில் காதணி விழா நடத்தப்பட்டது.
பின்னர் கிராம மக்களுக்கு சைவம், அசைவ உணவுகளுடன் விருந்து உபசரிப்பு நடத்தப்பட்டது. ஏழை மாணவிக்கு ஆசிரியர்கள் காதணி விழா நடத்தி வைத்த சம்பவம் கடலாடி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சற்பிரசாத மேரியிடம் பேசினோம். ''ஆர்த்திக்கு 5 வயது பூர்த்தியாகியும் காது குத்தாமல் இருந்தார். மற்ற குழந்தைகள் விதவிதமான காதணிகள் அணிந்து வருவதை ஏக்கத்துடன் பார்த்தது குழந்தை.
ஆர்த்தியின் தாத்தாவிடம் பேசியபோதுதான், அவள் பெற்றோரின் நிலை பற்றியும், குடும்பத்தின் வறுமை பற்றியும் எங்களுக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, `ஆர்த்தி நம் குழந்தை, அவளுக்கு நாம்தான் காதணி விழா செய்ய வேண்டும்' என்று முடிவெடுத்தோம். ஆசிரியர்கள் நாங்கள் ஒன்றிணைந்து இந்தக் காதணி விழாவை நடத்தியுள்ளோம். சிறிய அளவில் இந்த விழாவை நடத்தி முடிக்க நினைத்தோம். ஆனால், கிராம மக்கள் கலந்துகொண்டு சிறப்பான விழாவாக மாற்றினர். அவர்களது பாராட்டு எங்களைக் கண்கலங்கச் செய்துவிட்டது'' என்றார்.