Published:Updated:

தேனி: `மாணவர்களைத் தேடிச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!’ - குவியும் பாராட்டுகள்

மரத்தடியில் நடக்கும் வகுப்பு
மரத்தடியில் நடக்கும் வகுப்பு

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மூழ்கியுள்ள சூழலில், மாணவர்களின் இருப்பிடம் தேடிச் சென்று பாடம் நடத்திவருகிறார்கள் தேனி ஆசிரியர்கள்.

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் 550 மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். கொரோனா காலகட்டமாக இருப்பதால், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து, வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்தி, ஆன்லைன் வகுப்பு மற்றும் வீட்டுப் பாடங்கள் கொடுப்பது என முயன்றுவருகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.

மரத்தடியில் நடக்கும் வகுப்பு
மரத்தடியில் நடக்கும் வகுப்பு

அதேநேரத்தில், ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளித் தலைமையாசிரியர் தலைமையில் கூடிய ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் சொல்லிக்கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். திட்டத்தோடு நிற்காமல் அதற்குச் செயல் வடிவம் கொடுத்து அசத்திவருகிறார்கள்.

நம்மிடையே பேசிய பள்ளித் தலைமையாசிரியர் புவனேஷ்வரி, ``எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மாணவர்கள். அவர்களில் நிறைய பேர் வீடுகளில் ஸ்மார்ட்போன் இருப்பதில்லை. அப்படிப்பட்ட மாணவர்கள், தமிழக அரசின் `கல்வி’த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளைப் பார்க்கிறார்கள். இருந்தாலும், அவர்களுக்குச் சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், நேரடியாகப் பாடம் நடத்தவும் திட்டமிட்டு, மாணவர்களின் கிராமத்துக்கே செல்கிறோம்.

மரத்தடியில் நடக்கும் வகுப்பு
மரத்தடியில் நடக்கும் வகுப்பு

என் தலைமையில் 13 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தினமும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மாணவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிடுவோம். அவர்களை ஊருக்குப் பொதுவான இடத்தில், மந்தை, மரத்தடி எனச் சமூக இடைவெளியோடு அமரவைத்து பாடம் சொல்லிக்கொடுப்போம். கடந்த ஒரு மாதமாக இந்தப் பணியைச் செய்துவருகிறோம். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருப்பதால் இது சாத்தியமாகிறது” என்றார்.

பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் கூறும்போது, ``6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறோம். 71 மாணவர்கள் எங்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லை. இவர்கள், உப்புக்கோட்டை, சடையால்பட்டி, டொம்புச்சேரி, குண்டல்நாயக்கன்பட்டி, போடேந்திரபுரம், பாலார்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

மாணவர்கள்
மாணவர்கள்

தினமும் ஒரு கிராமம் வீதம் சுழற்சிமுறையில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறோம். ஒரு நாளில் தலா 45 நிமிடங்கள் கொண்ட இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் நடக்கும். அன்றைகே வீட்டுப்பாடமும் கொடுத்துவிடுவோம். சுழற்சிமுறையில் மீண்டும் அந்த கிராமத்துக்கு வரும்போது, வீட்டுப் பாடத்தைச் சரிபார்த்துவிட்டு அடுத்த பாடம் நடத்துவோம்.

இது மட்டுமல்லாமல், மாணவர்கள் அனைவரும் வீட்டிலும் `கல்வி’த் தொலைக்காட்சிப் பார்க்கிறார்கள். அதில் சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களில் சந்தேகம் இருந்தாலும், அவற்றை நோட்டில் குறித்துக்கொண்டு வந்து எங்களிடம் கேட்பார்கள். மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். பெற்றோர்களும் ஊருக்குப் பொதுவான இடத்துக்கு அவர்களின் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். பள்ளி திறக்கும் வரை இந்தப் பணியைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி
பச்சையப்பா உயர்நிலைப்பள்ளி

பச்சையப்பா உயர்நிலைப்பள்ளியின் பொருளாளர் பச்சையப்பராஜா கூறும்போது, ``கிராமப்புற மாணவர்களுக்காக 1958=ம் ஆண்டு என்னுடைய தாத்தாவால் உருவாக்கப்பட்டது இந்தப் பள்ளி. அப்போதைய முதல்வர் காமராஜர், இங்கே நேரடியாக வந்து பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். நடுநிலைப்பள்ளியாக ஆரம்பித்து, தற்போது உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்கள் குழு ஏற்படுத்தி, மாணவர்களின் கிராமங்களுக்குச் சென்று பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். `கிராமப்புற ஏழை மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்களால் முடிந்த முயற்சியெடுத்து அதைச் சிறப்பாக செயல்படுத்திவருகிறார்கள். மாணவர்களைச் சமூக இடைவெளியில் அமரவைத்து, மாஸ், சானிடைஸர் எப்போதும் அவர்களிடம் இருப்பதை உறுதி செய்து பாடம் நடத்துவதால், பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்” என்றார்.

காமராஜர் பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
காமராஜர் பள்ளிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்கள் கையிலெடுத்துள்ள இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு