Published:Updated:

உற்சாக என்ட்ரி கொடுக்கும் யானைகள் - தேக்கம்பட்டியில் நாளை தொடங்குகிறது புத்துணர்வு முகாம்..!

கோவை தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நாளை தொடங்குகிறது.

  தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்

தமிழகத்தில் கோயில் யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2012-ம் ஆண்டு முதல், கோவை தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் கோயில் மற்றும் மடங்களில் இருந்து 28 யானைகள் இதில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் முகாம் தொடங்குவதற்கு முந்தைய நாளே அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கும். ஆனால், இந்தாண்டு பணிகள் சற்று மெதுவாகத்தான் நடந்து வருகிறது. தகர ஷீட்கள் அமைக்கும் பணி, அருகில் காட்டு யானைகள் இருப்பதால் மின்சார வேலி அமைக்கும் பணி, குளியலுக்காக ஷவர் அமைக்கும் பணி என்று எந்தப் பணியுமே நிறைவடையவில்லை. அனைத்துப் பணிகளும் அவசர கதியில் நடந்து வருகிறன்றன.

இன்று மதியம் 2 மணிக்குள் முகாமுக்கு வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், உத்தரவு கடைசி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான இடங்களில் இருந்து இன்று காலைதான் யானைகள் புறப்பட்டன. இதனால், மாலை 5 மணி நிலவரப்படி மொத்தமே 5 யானைகள்தான் தேக்கம்பட்டிக்கு வந்தன. முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, இரண்டாவதாக ஸ்ரீபெரும்புதூர் கோதை, மூன்றாவதாக பழநி கோயில் கஸ்தூரி, நான்காவதாக சிவகங்கை காளையார் கோயில் செண்பகவல்லி, ஐந்தாவதாக பேரூர் கல்யாணி யானைகள் வந்தன. அவற்றுக்கு சிறப்பு பூஜையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாம்

அடுத்தடுத்து யானைகள் அட்டன்டென்ஸ் போடுவதால், ஒவ்வொரு யானையும் உற்சாகமாக முகாமுக்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றன. தேக்கம்பட்டியில் தற்போது நன்கு மழை பெய்து வருவதால், குளிர் காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால், அடுத்த 48 நாள்களுக்கு யானைகளுக்கு புத்துணர்வுக்கு பஞ்சம் இருக்காது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ``முகாம் நடத்துவதற்கான அரசாணை நேற்றுதான் வெளியானது. இதனால், நாங்களும் நேற்றிலிருந்துதான் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறோம். இரவுக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும். அதேபோல, இரவுக்குள் 28 யானைகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.