Election bannerElection banner
Published:Updated:

தென்காசி: `நெருடலாக இருக்கிறது!’ -பொங்கல் பரிசுத்தொகையை அரசுக்குத் திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

சமூக ஆர்வலர் ராமநாதன்
சமூக ஆர்வலர் ராமநாதன்

பொங்கல் பரிசுத் தொகையாக, தமிழக அரசு கொடுக்கும் ரொக்கப் பணம் ரூ.2,500 பெறுவது தனக்கு நெருடலாகவும் உறுத்தலாகவும் இருக்கிறது. அதனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாக சமூக ஆர்வலர் ராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பொருள்களுடன், ரொக்கப் பணமாக 2,500 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. அரசு ரொக்கப் பணம் கொடுப்பது தொடர்பாக அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன.

பொங்கல் பரிசு... தேர்தலுக்கு 'டோக்கன்' அட்வான்ஸா?! - எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?

இதற்கிடையே, `பொங்கல் பரிசுப் பணம் பெறுபவர்கள், அதை டாஸ்மாக் கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே கொடுத்துவிடுவார்கள்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையானது. இந்தநிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட பணத்தை அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்.

தென்காசி மாவட்டம், பொட்டல்புதூர் அருகேயுள்ள திருமலையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (74 ). சுதந்திரப் போராட்ட தியாகியான வாஞ்சிநாதன் பெயரில்`வாஞ்சி இயக்கம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ராமநாதன், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

ராமநாதன்
ராமநாதன்

ரேஷன் கடைக்குச் சென்ற அவருக்கு, தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பையுடன் பணமாக ரூ.2,500 கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை அவர் தமிழக அரசுக்கு டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, திருப்பி அனுப்பியிருக்கிறார்.

பணத்தைத் திருப்பி அனுப்பிய ராமநாதன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்குகிறது. இந்தத் தொகை முழுமையாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மட்டும் பயன்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

பொங்கல் பரிசுத்தொகையுடன் அனுப்பப்பட்ட கடிதம்
பொங்கல் பரிசுத்தொகையுடன் அனுப்பப்பட்ட கடிதம்

ஊதாரித்தனமான செலவுகளுக்கு அல்லது மதுக்கடைகள் வழியாக மீண்டும் தமிழக அரசுக்கே சென்றடையலாம். அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் முன்பு வழங்கப்பட்டு, தற்போது வழங்கப்படாமலிருக்கும் உளுந்தம் பருப்பு போன்ற உணவுப் பொருள்களை மாதந்தோறும் விலையின்றி வழங்கலாம்.

பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணம் கொடுப்பதற்கு பதிலாக உணவுப் பொருள்களை விலையின்றி வழங்கினால், பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள். அத்துடன், இந்தியாவிலேயே ரேஷன் பொருள்களை விலையின்றி வழங்கும் மாநிலம் என்ற பெருமையும் தமிழக அரசுக்குக் கிடைக்கும்.

அரசுக்கு அனுப்பப்பட்ட டிடி
அரசுக்கு அனுப்பப்பட்ட டிடி

இப்போது அந்த நிலை இல்லாததால், தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் 2,500 ரூபாயைப் பெறுவது எனக்கு மிகவும் நெருடலாகவும் உறுத்தலாகவும் இருக்கிறது. அதனால் அந்தப் பணத்தை தமிழக அரசிடமே திருப்பிக் கொடுக்கிறேன்’’ என்று முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கல் பரிசு தொகையாக 2,500 கொடுப்பதை அ.தி.மு.க-வினர் பெருமையாகப் பேசிவருகிறார்கள். இந்தத் தொகையை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். ஆனால், இந்தத் தொகை தனக்குத் தேவையில்லை என்று சமூக ஆர்வலர் ராமநாதன் திருப்பி அனுப்பியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு