Published:Updated:

`எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது!' -டெக்ஸ்டைல் தொழிலாளி டு பொரிகடலை வியாபாரம்

ராமசாமி
ராமசாமி

'தினமும் 150 ரூபாய் கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. இது மூணு பேருக்கும் அன்னனைக்கு சாப்பாட்டுக்கே சரியா இருக்கு' என வேதனைப்படுகிறார் பொரிகடலை விற்கும் ராமசாமி.

உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ், பல எளிய மனிதர்களின் வருமானத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை உருட்டிவந்த அவர்களின் நிலைமை, இப்போது இன்னும் கவலைக்கிடமாகியுள்ளது.

ராமசாமியின் வியாபாரம்
ராமசாமியின் வியாபாரம்
நா.ராஜமுருகன்

அப்படி டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த ராமசாமி, அந்த வேலைக்குப் போகமுடியாததால், அனுபவமே இல்லாத பொரிகடலை, மாஸ்க் உள்ளிட்ட பொருள்களை விற்க, புது அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், "தினமும் 150 ரூபாய் கிடைக்கவே நாக்குத் தள்ளிப் போகுது. பலநாள் அதுவும் கிடைக்காது. அன்னைக்கு முழுக்கப் பட்டினிதான்" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார்.

`உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்!

கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஒரு வீட்டில், மாதம் ரூ.1,500 வாடகையில் குடியிருக்கிறார். இவரது மனைவி பானுமதி, மகன் சீராளன். கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் பேக்கிங் செய்யும் தொழிலாளியாக ராமசாமி இருந்து வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், அந்த வேலைக்குச் செல்ல முடியாத சூழல்.

ராமசாமி விற்பனை செய்யும் பொருள்கள்
ராமசாமி விற்பனை செய்யும் பொருள்கள்
நா.ராஜமுருகன்

வாடகை, உணவு என்று அடிப்படைத் தேவைகளுக்கே வருமானமின்றித் தவிக்கும் நிலை வர, அரசு மருத்துவமனை எதிரே சிறிய கட்டிலைப் போட்டு, அதில் பொரிகடலை, மாஸ்க், விளக்குமாறு, வளையல், பொட்டு, கண்ணாடி, சீப்பு என்று பொருள்களைப் பரப்பி, வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

தனது சோக நிலையைப் பற்றி நம்மிடம் பேசிய ராமசாமி,

"கடந்த 7 வருஷமா கரூர்ல உள்ள டெக்ஸ்டைல்ல துணிகளை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதுக்கு முன்னாடி பேக்கரி ஒன்றில் மாஸ்டரா இருந்தேன். ஆனால், கண்ணுல தீப்பட்டு, இரண்டு கண்ணுலயும் பார்வை 50 சதவிகிதம் குறைஞ்சுப் போயிட்டு. அதனால், கடந்த ஏழு வருஷத்துக்கு முன்னாடி, கரூர்ல உள்ள டெக்ஸ்டைல்ல வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 7,000 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. தினமும் ரயில்ல வேலைக்குப் போயிட்டு வந்தேன்.

ராமசாமி
ராமசாமி

இந்தச் சொற்ப வருமானத்தை வச்சுதான், வீட்டு வாடகை, உணவு, மத்த செலவுகள்னு சமாளிச்சு வந்தோம். என் மகளை கடனை உடனை வாங்கி திருமணம் பண்ணிக் கொடுத்தேன். என் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். இந்தச் சூழல்லதான், கொரோனா வந்து என் வாழ்க்கையில பூகம்பத்தை ஏற்படுத்திட்டு.

மூணு மாசமா ரயிலை நிறுத்தியதால், வேலைக்குப் போக முடியலை. சாப்பாட்டுக்கு வழியில்லை. வீட்டு ஓனர் வாடகை கேட்டு நச்சரித்தார். அதனால், ஒருமாச பாட்டை, மனைவியிட்ட இருந்த பொட்டுத் தங்கத்தை அடகு வச்சு சமாளிச்சோம்.

ஆனால், அதன்பிறகு நிலைமை மோசமாயிட்டு. பலநாள் வெறும் பச்சைத்தண்ணியைக் குடிச்சுக்கிட்டு, மூணு உசிரும் நாள்களைக் கடத்தினோம். அப்போதான், 'உசிரோட இருக்கிறதுக்காகவாச்சும் ஏதாச்சும் பண்ணணும்'னு நினைச்சேன். நண்பர் ஒருவர்கிட்ட கடன் வாங்கி, இந்த வியாபாரத்தை ஆரம்பிச்சேன். அனுபவம் இல்லாததால், என்னால இந்த வியாபாரத்தைச் சரிவர பண்ண முடியலை. பொரிகடலை, விளக்குமாறு, பொட்டு, கண்ணாடி, மாஸ்க்னு பொருள்களை வாங்கி விற்கிறேன். மருத்துவமனைக்கு வருபவர்களில் சிலர் என்மேல பரிதாபப்பட்டு, பொருள்களை வாங்குவாங்க.

 மாஸ்க்குகள்
மாஸ்க்குகள்

ஆனால், பலர் என்கிட்ட வந்து பேரம் பேசுறாங்க. தினமும் 150 ரூபாய் கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. இது மூணு பேருக்கும் அன்னன்னைக்கு சாப்பாட்டுக்குச் சரியா போயிடுது. வாடகை கொடுக்க, இதரச் செலவுகளுக்குன்னு வருமானம் கிடைக்க வழியியில்லாம, முழிபிதுங்கி நிக்கிறேன். என்னைக்குக் கொரோனா சரியாகும், எப்போ என்னோட வேதனை தீரும்னு தெரியலை. என்னோட நிலைமை என் எதிரிக்கும் வரக்கூடாது தம்பி" என்றார், நா தழுதழுக்க!

அடுத்த கட்டுரைக்கு