Published:Updated:

`மேலோகத்தில்தான் வெற்றிடம் உள்ளது!' -கரூரில் `திடீரென' தலைகாட்டிய தம்பிதுரை

`தமிழகத்தில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமே வெற்றிடம் உள்ளது. அதற்குத்தான் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது' என்கிறார் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை.

தம்பிதுரை
தம்பிதுரை

கரூர் அ.தி.மு.க அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்துகொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க-வினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் பாப்பா சுந்தரம், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தம்பிதுரை
தம்பிதுரை

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணியிடம் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் தம்பிதுரை படுதோல்வியடைந்தார். இதனால், வெறுப்படைந்தவர், அதன்பிறகு கரூரில் தங்காமல் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்குச் சென்றார்.

Vikatan

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமான நோட்டீஸ்கள், அழைப்பிதழ்களில் தம்பிதுரை பெயர் போடப்பட்டாலும் அவற்றில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார்.

தம்பிதுரை நிகழ்ச்சி
தம்பிதுரை நிகழ்ச்சி
நா.ராஜமுருகன்

கரூருக்கு வருவதையே கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார். இதனால், கரூர் மாவட்டத்தில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் சோர்ந்து போனார்கள். அவர்கள் பலமுறை அழைத்தும், தம்பிதுரை கரூருக்கு வருவதில்லை. இந்நிலையில்தான், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால், அ.தி.மு.க சார்பில் மாநிலம் முழுக்க விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன.

அந்தவகையில் கரூரிலும் விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சிக்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கும் தம்பிதுரை வரவிரும்பாமல்தான் இருந்திருக்கிறார். ஆனால், கட்சித் தலைமை கூறியதால் விருப்பமில்லாமல் கலந்துகொண்டதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.

விருப்ப மனுக்களை பெற்றபின் பேசிய தம்பிதுரை, ``தமிழகத்தில் பலமாக உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க-தான். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். தி.மு.க-தான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் கூறி வந்தார்.

தம்பிதுரை நிகழ்ச்சி
தம்பிதுரை நிகழ்ச்சி

இந்தநிலையில், அவருக்குப் பதவி உயர்வு அளித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குத் தேர்தல் குறித்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு அப்படியில்லை. தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை. தேவைப்பட்டால், மேலோகத்தில் சென்று பார்த்தால், அங்கு வெற்றிடம் இருப்பது தெரியும்" என்றார் சிரித்தபடியே.