Published:Updated:

`மித்ரா போலவே பாரதியும் காப்பாற்றப்படுவாரா?' - மகள் உயிரைக் காக்க உதவியை நாடும் பெற்றோர்

மகள் உயிரைக் காக்க உதவிக்காகக் காத்திருக்கும் பெற்றோர் ( ம.அரவிந்த் )

``வாழ்க்கையில சந்தோஷத்தைக் கொடுத்த ஆண்டவன் கையோட அதை பறிச்சுக்கிட்ட மாதிரி எங்களுக்கு இருந்துச்சு. ரூ. 22 கோடி பணத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால ரெடி பண்ண முடியாது'' - மகள் உயிரைக் காக்க உதவி கேட்டு காத்திருக்கும் பெற்றோர்

`மித்ரா போலவே பாரதியும் காப்பாற்றப்படுவாரா?' - மகள் உயிரைக் காக்க உதவியை நாடும் பெற்றோர்

``வாழ்க்கையில சந்தோஷத்தைக் கொடுத்த ஆண்டவன் கையோட அதை பறிச்சுக்கிட்ட மாதிரி எங்களுக்கு இருந்துச்சு. ரூ. 22 கோடி பணத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால ரெடி பண்ண முடியாது'' - மகள் உயிரைக் காக்க உதவி கேட்டு காத்திருக்கும் பெற்றோர்

Published:Updated:
மகள் உயிரைக் காக்க உதவிக்காகக் காத்திருக்கும் பெற்றோர் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோர், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் மகளின் உயிரைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர். ரூ.16 கோடி மதிப்புடைய ஊசி மருந்து, அதற்கான வரி 6 கோடி என மொத்தம் 22 கோடி இருந்தால் மட்டுமே அவர்களின் மகள் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் உதவி கேட்டு கலங்கி நிற்கின்றனர். ``சமீபத்துல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரா என்ற குழந்தை பொதுமக்கள் உதவியால காப்பாற்றப்பட்டார். எங்க மகளையும் பொதுமக்கள் காப்பாற்றுவாங்கனு நம்பிக் காத்திருக்கோம்'' என அந்தப் பெற்றோர் நம்பிக்கையோடு கூறி வருகின்றனர்.

சிறுமி பாரதி
சிறுமி பாரதி

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (32). ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி எழிலரசி (32), ரெப்கோ வங்கி நாகை மாவட்ட கிளையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் ஒரே மகள் பாரதி, ஒன்றரை வயதுக் குழந்தை. ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்பதும், முதல் அடி எடுத்து வைத்து நடப்பதும் பேரானந்தத்தை தரும். ஜெகதீஷ் - எழிலரசி தம்பதி எல்லா பெற்றோரையும் போலவே தங்கள் செல்ல மகள் படிப்படியாக எழுந்து, நின்று, அன்ன நடை நடப்பதைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், பிறந்து 13 மாதங்கள் கடந்த பிறகும், பாரதி எழுந்து நிற்கவில்லை. இதையடுத்து குழந்தையை டாக்டரிடம் காட்டியுள்ளனர். பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்தால் சரியாகிவிடும் என்று சொல்லப்பட, அதைச் செய்துள்ளனர். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. பின்னர்தான், தங்கள் குழந்தைக்கு ஏதோ தீவிர பிரச்னை இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

அம்மா எழிலரசியுடன் பாரதி
அம்மா எழிலரசியுடன் பாரதி

சிகிச்சையைத் தொடர்ந்ததுடன் டாக்டர்களின் ஆலோசனைப்படி டெஸ்ட் எடுத்து பார்த்துள்ளனர். கடந்த 9-ம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்தபோது, பாரதி முதுகுத் தண்டுவட தசை நார் சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஜெகதீஷ் - எழிலரசி தம்பதிக்கு தலையில் இடி விழுந்ததுபோல் இருந்ததுள்ளது. அந்த நோய்க்கான மருந்தின் விலை ரூ.16 கோடி என்றும், அமெரிக்காவிலிருந்து அதை வரவழைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் சொல்ல, தங்கள் மகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் கண்ணீர் வடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தங்களுக்கு 16 கோடி என்பது கனவில்கூட கிடைக்காது என்ற நிலையில் மகளின் உயிரைக் காக்க சமூக வலைதளங்கள், மீடியா மூலமாகப் பலரிடமும் உதவி கேட்டு வருகின்றனர் அந்தப் பெற்றோர். ``இரண்டு மாதங்களுக்குள் அந்த மருந்தைப் பாரதிக்குச் செலுத்தணும். இல்லைன்னா...'' எனத் தொடங்கும்போதே பாரதியின் பெற்றோரின் கண்கள் குளமாகின்றன.

தந்தை ஜெகதீஷுடன் பாரதி
தந்தை ஜெகதீஷுடன் பாரதி

இது குறித்து எழிலரசியிடம் பேசினோம். ``நானும் என் கணவர் ஜெகதீசும் காதலிச்சு கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். நல்ல வேலை, ஆசப்பட்ட வாழ்க்கைனு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியா போச்சு. அதை இன்னும் அழகாக்குற விதமா எங்களுக்கு மகள் பிறந்தாள். எங்க உலகமே அவதான்னு பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். பொறந்த குழந்தைங்க ஏழு மாசத்துல எழுந்து நிக்கும், எட்டு மாசத்துல எடுத்து அடி வைக்குமுனு பெரியவங்க சொல்வாங்க. எல்லா பெற்றோரைப் போலவே நாங்களும் அந்த நாளுக்காகக் காத்திருந்தோம்.

ஆனா, அவளால தானாக எழுந்து நிற்கவே முடியல. நம்ம புள்ளைக்கு எதுவும் இருக்கக் கூடாதுனு பயம் தொற்றிக்கொள்ள, டாக்டர்கிட்ட காட்டினோம். `ரெண்டு பேரும் வேலைக்குப் போறீங்க, அதனால சரியா கவனிக்க முடியாததுனால லேட்டா நடப்பதற்கான வாய்ப்பிருக்கு'னு சொன்னாங்க. அதன் பிறகும் நாங்க நெனச்சது நடக்கல, எங்க மகளும் நடக்கல'' என்று சொல்லும்போதே எழிலரசி விம்முகிறார்.

``அடுத்தடுத்து சிகிச்சை மற்றும் டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுல, எங்க மகள் முதுகுத் தண்டுவட தசை நார் சிதைவு என்ற அரிய நோயால பாதிக்கப்பட்டிருப்பதும், அபாயகட்டமான இரண்டாம் வகையில இருப்பதாகவும் டாக்டர்கள் சொன்னாங்க. இந்த நோயைக் குணப்படுத்த `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற ஊசி மருந்து செலுத்தணும். அந்த மருந்தின் விலை ரூ.16 கோடி. அதை அமெரிக்காவுல இருந்து இறக்குமதி செய்யணும். அதுக்கான வரி ரூ.6 கோடி. மொத்தம் ரூ.22 கோடி செலவாகும்னு சொன்னாங்க.

சிகிச்சைக்காக காத்திருக்கும் பாரதி
சிகிச்சைக்காக காத்திருக்கும் பாரதி

வாழ்க்கையில சந்தோஷத்தைக் கொடுத்த ஆண்டவன், கையோட அதை பறிச்சுக்கிட்ட மாதிரி இருந்துச்சு. நானும் என் கணவரும் கிடந்து கதறினோம். 22 கோடி ரூபாங்கிறது, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால ரெடி செய்ய முடியாத தொகை. இந்நிலையில, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரா என்ற குழந்தை இதே நோயால பாதிக்கப்பட்டிருந்ததும், பொதுமக்கள் மூலமா நிதி திரட்டி அந்த ஊசி மருந்தை வரவைத்து செலுத்தியதும் தெரிய வந்தது. இப்போ அந்தக் குழந்தை நல்லபடியா இருக்கு என்பது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது.

மித்ராவுக்கு சிகிச்சையளித்த பெங்களூருவில் உள்ள அதே மருத்துவமனையில் பாரதியைக் காட்டினோம். `சீக்கிரமே பணத்தை ரெடி பண்ணுங்க, பாரதியைப் பத்திரமாகக் காப்பாத்தி கொடுத்துடுறோம்'னு சொன்னாங்க. அந்த வார்த்தையை, கடவுள் நேர்ல வந்த சொன்ன மாதிரி இருந்துச்சு. சொந்தக்காரவங்க, நண்பர்கள்னு பலர்கிட்ட உதவி கேட்டோம். எல்லோரும் கையில இருக்குறத கொடுத்துக்கிட்டு வர்றாங்க. ஆனா, ரூ. 22 கோடி என்பது பெரிய தொகை. அத்துடன் ரெண்டு மாசத்துல அந்த ஊசி மருந்தை பாரதிக்குப் போடணும் என்ற அவசர நிலையும் இருக்கு.

பாரதிக்கு உதவி செய்வதற்கான விவரங்கள்
பாரதிக்கு உதவி செய்வதற்கான விவரங்கள்

அதனால சமூக வலைதளங்கள், மீடியானு பல வகையிலும் உதவி கேட்டு காத்திருக்கோம். முகம் தெரியாத பலர் மித்ராவுக்கு உதவி செஞ்சு பொழைக்க வச்சாங்க. அவங்க மாதிரி நல்ல உள்ளங்கள் எங்க மகள் பாரதியையும் காப்பாத்த உதவி செய்வாங்கனு நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளையும் கடந்துகிட்டு இருக்கோம்'' என்றார்.

ஜெகதீஷிடம் பேசினோம். ``இதுவரை எங்களுக்கு ரூ. 1 கோடி கிடைச்சிருக்கு. இன்னும் 21 கோடி கிடைச்சாதான் மகளைக் காப்பாத்த முடியும். பணம் கிடைச்சு செலுத்திய பிறகு, ஃபார்மாலிட்டி எல்லாம் முடிஞ்சு மருந்து கைக்கு வர்றதுக்கே 20 நாளுக்கு மேல ஆகும். ரெண்டு மாசத்துக்குள்ள அந்த ஊசியை போடணும்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. இன்னும் ஒன்றரை மாசம்தான் பாக்கியிருக்கு. மத்திய, மாநில அரசுகள் உதவணும்னும் கோரிக்கை வச்சிருக்கோம். பரிதவிச்சு நிக்குற எங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கைகொடுப்பார் என்ற பெரிய நம்பிக்கை இருக்கு.

பெற்றோர்
பெற்றோர்

நவம்பர் மாதம் 6-ம் தேதி எங்க மகள் பாரதிக்கு ரெண்டாவது பர்த்டே வருது. அவ முகத்துல இருக்கிற சிரிப்பை நிரந்தரமாக்கணும். அவ எழுந்து நடப்பதையே அவளுக்கான பிறந்த நாள் பரிசா கொடுக்கணும்னு, துயர் மிகுந்த இந்தத் தருணத்துல போராடி வர்றோம். அது எங்க கையில மட்டும் இல்ல, பொதுமக்களும் உதவி செஞ்சா மட்டுமே இது சாத்தியமாகும். இல்லைன்னா...'' - அதற்கு அடுத்து பேச முடியாமல் மகள் பாரதியின் முகத்தோடு முகம் புதைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism