Published:Updated:

``பாரதிக்கு அந்த 16 கோடி ரூபாய் ஊசி போட்டாச்சு!'' - நெகிழ்ச்சியில் பெற்றோர்

குழந்தை பாரதி
News
குழந்தை பாரதி

சுமார் 10 நாள் காத்திருப்புக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) ஊசி பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அதனையடுத்து இன்று காலை குழந்தை பாரதிக்கு மருந்து செலுத்தப்பட்டது.

முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவு (Spinal Muscular Atrophy - SMA) என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சிராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதுக் குழந்தைக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசி போட்டால்தான் உயிர் காப்பாற்றப்படுவார் என்ற நிலை இருந்தது.

`பாரதியின் உயிரைக் காப்பாற்றுங்கள்' என்ற வாசகத்துடன் குழந்தைக்காக, `பொதுமக்கள் ஒவ்வொருவரும் 100 ரூபாய் கொடுத்தாலே போதும்' என்ற உதவி கோரல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் என்று பலரும் பாரதிக்காக உதவி கேட்டுப் பேசும் வீடியோக்கள் வெளியாகின.

பெற்றோருடன் குழந்தை பாரதி
பெற்றோருடன் குழந்தை பாரதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நடிகர் விஜய் சேதுபதி 20 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருநங்கைகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், மாணவர்கள் என்று பலர் உதவிக்கரம் நீட்ட பணம் சேர்ந்தது.

இறுதியாக 2.7 கோடி நிதி தேவைப்பட்ட நிலையில் மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர் எனப் பலரின் முயற்சியால் குழந்தைக்குத் தேவையான நிதி முழுவதும் கிடைத்தது. சிகிச்சைக்காக பாரதியின் பெற்றோர் ஜெகதீஷ் - எழிலரசி, மருத்துமனை அமைந்திருக்கும் பெங்களூரு நகரில் வீடு எடுத்துத் தங்கினர்.

இந்நிலையில் குழந்தை பாரதிக்கு சிகிச்சை முடிந்துவிட்டது என்று தகவல் பரவ, சில நாள்களுக்கு முன்பு எழிலரசியிடம் பேசினோம். ``அமெரிக்காவுல இருந்து இன்னும் மருந்து வந்து சேரல. வந்ததுக்கு அப்புறம்தான் சிகிச்சை கொடுப்பாங்க. பாப்பாவுக்கு ட்ரீட்மென்டுக்காக பெங்களூருல வந்து தங்கியிருக்கோம். இது தெரியாததால, எங்க சொந்த ஊருல, ஊரைக் காலி பண்ணிட்டோம்னு சிலர் நினைச்சிட்டாங்க. ஊசி போட்டதுக்குப் பிறகு ஏதாவது பக்கவிளைவுகள் வர வாய்ப்பிருக்குன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. அப்படி எதுவும் வந்துடாம, தொடர் கண்காணிப்புல இருந்து எங்க குழந்தையை பார்த்துக்கணும்னுதான் இங்க வந்திருக்கோம்.

அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 கோடி மதிப்பிலான  'ஸோல்ஜென்ஸ்மா' ஊசி மருந்து
அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 16 கோடி மதிப்பிலான 'ஸோல்ஜென்ஸ்மா' ஊசி மருந்து

பெங்களூர்ல வீடு எடுத்துத் தங்குற அளவு எங்களுக்கு வசதி, வாய்ப்பு கிடையாது. 16 கோடி ரூபாய் ஊசியை வாங்க தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு பலரும் உதவி பண்ணிட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் ஆயுள் முழுக்க நன்றி சொன்னாலும் தீராது. இனிமேலும் யாருகிட்டயும் பணம்னு போய் கேக்க எங்களுக்கு மனசு வரல. அதனால கடன் வாங்கித்தான் தங்கியிருக்கோம். எங்க அன்றாட செலவுக்குப் பிரச்னைன்னா எப்படியாவது சமாளிச்சிப்போம். ஆனா குழந்தையை எப்படியாவது மீட்டெடுத்துடணும், அது மட்டும்தான் எங்க ரெண்டு பேரு நினைப்புலயும் ஓடிட்டு இருக்கு" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், சுமார் 10 நாள்கள் காத்திருப்புக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து `ஸோல்ஜென்ஸ்மா' (Zolgensma) ஊசி பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. அதனையடுத்து இன்று காலை குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட்டது. இதுபற்றி அறிந்துகொள்ள குழந்தையின் அப்பா ஜெகதீஸிடம் பேசினோம். மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்து குரலில் பேசினார். ``இன்னைக்கு காலைல 9.30 மணிக்கு பாப்பாவுக்கு ஊசி போட்டுட்டாங்க. 11.30 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆகிட்டோம்.

 குழந்தை பாரதி
குழந்தை பாரதி
படம்: ம.அரவிந்த்

இன்னும் மூணு மாசத்துக்கு மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி தொடர் மருத்துவக் கண்காணிப்புல இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. குழந்தைக்கு எந்த பக்கவிளைவும் வரக்கூடாதுனு எங்களுக்காக வேண்டிக்கோங்க" என்றார் பிரார்த்தனையும் கோரிக்கையுமாக!

உலகை வெல்வாள் பாரதி!