Published:Updated:

`வீடு மட்டுமல்ல; எங்க முகத்துல சிரிப்பையும் கொடுத்துட்டார்!' - மாணவியை நெகிழ வைத்த கலெக்டர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடு வழகிய கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர்
வீடு வழகிய கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர்

``நடப்பதெல்லாம் கனவு மாதிரி இருக்கு; சொந்த வீட்டுல எல்லோரும் ஒண்ணா இருக்க ஆசைப்பட்டேன்; இவ்வளவு சீக்கிரமே அந்த ஆசை நிறைவேறும் என நெனச்சு கூட பார்க்கலை" என தன் அண்ணன்களிடம் கலங்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின். பள்ளி மாணவிக்கு உதவி கிடைத்தது எப்படி?

வீடு இல்லாததால் தான் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கூறி கோரிக்கை வைத்த, 10-ம் வகுப்பு மாணவிக்கு வீடு வழங்கியதுடன், அவர் படிப்பிற்கான உதவியினையும் செய்து, அவருடன் தீபாவளியையும் கொண்டாடி நெகிழ வைத்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பென்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் திவான் நகரைச் சேர்ந்தவர் சிவசாமி. இவருக்கு தர்மசீலன் (25), தர்மபிரபு (20), பாலாஜி, கார்த்தி ஆகிய 4 மகன்கள், மீரா ஜாஸ்மின் (15), மதுமதி (6) ஆகிய 2 மகள்கள் என மொத்தம் 6 பிள்ளைகள். இந்நிலையில் சிவசாமி உடல் நலக் குறைபாட்டால் இறந்துவிட்டார். கணவர் இறந்த நிலையில் பிள்ளைகளின் அம்மாவும் பிள்ளைகளை கைவிட்டு தனியே சென்று விட்டார்.

பெற்றோரும் இல்லாமல் இருக்க வீடும் இல்லாமல் பெரும் வலியை சுமந்தபடி ஆறு பேரும், தங்கள் சித்தி மற்றும் பெரியம்மா வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மீரா ஜாஸ்மின், ``நமக்குனு ஒரு வீடு இருந்திருந்தா அம்மா, அப்பா இல்லாத நாம ஒரே இடத்துல சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருக்கலாம்; அதற்கான கொடுப்பினையும் நமக்கு இல்லையே" என தன் அண்ணன்களிடம் கூறி கலங்கியிருக்கிறார்.

ஒரு மணி நேரத்தில் பெண்ணுக்கு வீடு வழங்கிய ஆட்சியர்; கடிதம் மூலம் பாராட்டிய தலைமை செயலாளர்!

இதனைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மின், தன் தங்கை மதுமதியுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றதுடன், ``சின்ன வயசுல பெற்றோர் இல்லாமல் இருப்பதே பெரிய கொடுமை சார். அதோடு எங்களுக்கு இருக்க வீடும் இல்லை; நீங்க ஒரு வீடு கிடைக்க உதவி செஞ்சா, பிரிந்து கிடக்கும் நாங்க ஒரு கூட்டுக்குள்ள பறவைகள போல சேர்ந்து வாழ்ந்திடுவோம். வலிகளுடன் பழக்கப்பட்ட எங்களுக்கு அந்த சந்தோஷமாவது கிடைக்குமுனு நம்புறோம் சார்; ப்ளீஸ்... எங்களுக்கு ஒரு வீடு கொடுங்க" என தங்களது நிலையினை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீரா ஜாஸ்மின் மற்றும் அவரது சகோதரர்களின் நிலை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் நெஞ்சை உலுக்கவே, உடனடியாக தாசில்தார் உள்ளிட்டவர்களை அங்கு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து தஞ்சை பிள்ளையார் பட்டியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மீரா ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கீடு செய்து கொடுத்து, அதற்கான ஆணையையும் மீரா ஜாஸ்மினின் கையில் கொடுத்தார்.

மாணவி மீரா ஜாஸ்மின் வீட்டில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மாணவி மீரா ஜாஸ்மின் வீட்டில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இதையடுத்து மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட ஆறு பேரும் தீபாவளி பண்டிகைக்கு முன் பிள்ளையார்பட்டி புதிய வீட்டில் குடி புகுந்தனர். ``நடப்பதெல்லாம் கனவு மாதிரி இருக்கு; சொந்த வீட்டுல எல்லோரும் ஒண்ணா இருக்க ஆசைப்பட்டேன்; இவ்வளவு சீக்கிரமே அந்த ஆசை நிறைவேறும் என நெனச்சு கூட பார்க்கலை" என தன் அண்ணன்களிடம் கலங்கியிருக்கிறார் மீரா ஜாஸ்மின். இந்நிலையில் 3-ம் தேதி மாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிற்குச் சென்ற ஆட்சியர் நேராக மீரா ஜாஸ்மின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

``என்னம்மா இப்ப சந்தோஷமா இருக்கியா?" எனக் கேட்டதுடன் ஆறு பேருக்கும் புது டிரெஸ், பட்டாசு, இனிப்பு கொடுத்து, ``தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடுங்க. எப்போதும் கவலைகள் மறந்து மகிழ்ச்சியா இருக்கணும்; நல்லா படிச்சு பெரிய ஆளாகி கஷ்டப்படுற பலருக்கு உதவி செய்யணும்" எனக் கூறியவர் மீரா ஜாஸ்மின் படிப்பு தடைபடாமல் இருக்க பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000 கிடைப்பதற்கான ஆணையினையும் தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.

``வீடு கேட்ட எங்களுக்கு வீடு கொடுத்து, வீடு வரை வந்து என்னோட படிப்புக்கும் உதவி செய்த கலெக்டர் சாரை எங்களோட மூத்த அண்ணனாகவே நான் பார்க்கிறேன்" என அதிகாரிகள் முன்னிலையிலேயே ஆனந்த கண்ணீரை துடைத்தபடி மீரா ஜாஸ்மின் நன்றி தெரிவித்துள்ளார். இப்படி தஞ்சை மாவட்ட ஆட்சியர், வீடு கேட்ட மாணவிக்கு வீடு கொடுத்ததுடன் அவரின் வீட்டிற்கும் சென்று பரிசுகள் கொடுத்து தீபாவளி கொண்டாடிய சம்பவம் தற்போது தெரியவர பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குடும்பத்தினருடன் மாணவி மீரா ஜாஸ்மின்
குடும்பத்தினருடன் மாணவி மீரா ஜாஸ்மின்
விழுப்புரம்: அடிப்படை வசதிகள்கூட இல்லை... அல்லாடும் இருளர் பழங்குடிகள்! - நம்பிக்கை அளித்த ஆட்சியர்

இதுகுறித்து மீரா ஜாஸ்மினிடம் பேசினோம். ``எனக்கு 4 அண்ணன்கள்; அதில் 3 பேர் பாத்திரக்கடையிலும், ஒரு அண்ணன் லாட்ஜிலும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். அம்மா, அப்பா இல்லாத எனக்கும் தங்கச்சிக்கும் எங்க அண்ணன்கள்தான் உலகம். ஆனால் இருக்க வீடு இல்லை என்பதால் எல்லோரும் ஆளுக்கொரு இடத்துல இருந்து வந்தோம். பெற்றோரும் இல்ல; வீடும் இல்ல; இதனால் எங்களுக்கு ஏற்பட்ட வலிகளை சொல்ல வார்த்தைகளும் இல்ல.

நாங்க எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என்னோட ஆசை. நமக்குனு வீடு இருந்தா அந்த ஆசை நிறைவேறும்னு தோன்றவே, வீடு கேட்டு கலெக்டர்கிட்ட உதவி கேட்டேன். இப்ப வீடு மட்டுமல்ல; என் படிப்புக்கும் உதவி செஞ்சு எங்க முகத்துல சிரிப்பையும் சேர்த்து கொடுத்திருக்கார். புது வீடு ,புது வாழ்க்கைனு இந்த தீபாவளி எங்களுக்கு புதுசா இருந்தது. மத்தாப்பூ வெளிச்சத்தைத் தாண்டி என்னோட முகம் மலர்ந்தது எனக்கே தெரிஞ்சது. நாங்க பட்ட வலிகளைப் புரிஞ்சிக்கிட்டு அதற்கு மருந்தாக இந்த வீட்டைக் கொடுத்த கலெக்டர் சார என்னோட மூத்த அண்ணனா பாக்குறேன்" என உருகியபடி தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு