Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: `யாரும் இல்லை என்ற எண்ணம் வரக் கூடாது!’ - ஆதரவற்ற குழந்தைகளை உருகவைத்த கலெக்டர்

குழந்தைகளுடன் கலெக்டர் கோவிந்தராவ்
குழந்தைகளுடன் கலெக்டர் கோவிந்தராவ் ( ம.அரவிந்த் )

அரசுக் குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளின் நலன் கருதி தனிப்பட்ட முறையில் கலெக்டர் கோவிந்தராவ் அடிக்கடி விசிட் அடித்து வந்ததுடன், அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுத்துவந்தார்.

தஞ்சாவூரிலுள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்களுக்கென யாரும் இல்லை என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்றும், அவர்களை ஊக்கபடுத்தும்விதமாகவும் கலெக்டர் கோவிந்தராவ் தனது குடும்பத்தினருடன் ஆங்கிலப் புத்தாண்டை, அந்தக் குழந்தைகளுடன் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குடும்பத்தினருடன் கலெக்டர்
குடும்பத்தினருடன் கலெக்டர்

தஞ்சாவூர் மேம்பாலத்தில் சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), அரசினர் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்) ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இவற்றில், அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகள், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 48 ஆதரவற்ற ஆண் குழந்தைகள் என மொத்தம் 69 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்த அரசுக் குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளின் நலன் கருதி தனிப்பட்ட முறையில் கலெக்டர் கோவிந்தராவ் அடிக்கடி விசிட் அடித்து வந்ததுடன், அவர்களுக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்துவந்தார்.

கலெக்டர் கோவிந்தராவ்
கலெக்டர் கோவிந்தராவ்

இந்தநிலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று மாலை கலெக்டர் கோவிந்தராவ் தனது 6 வயது மகள் மற்றும் மனைவியுடன் சர்ப்ரைஸாக அரசுக் குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்றார். மேலும், அங்கிருந்த ஆதரவற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடினார். இதையறிந்த பலரும் கலெக்டருக்குப் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

இது குறித்து அரசு குழந்தைகள் இல்ல ஊழியர்களிடம் பேசினோம். ``கலெக்டர் சார், அடிக்கடி இங்கு விசிட் அடிப்பாங்க அப்போது `இங்கிருக்கும் குழந்தைகளை எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்கங்க. ஏதாவது வேண்டும் என்றாலும் உடனே எனக்குத் தெரியப்படுத்துங்க’ எனச் சொல்விட்டுச் செல்வதுடன் அவ்வப்போது வேண்டியவற்றையும் செய்து கொடுப்பார்.

இந்தநிலையில், ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று மாலை வழக்கம்போல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் கோவிந்தராவ் தனது மனைவி லட்சுமி ஸ்ரவ்யா, 6 வயது மகள் ஸ்ரீஆத்யா ஆகியோருடன் குழந்தைகள் இல்லத்துக்குள் திடீரென வந்தார்.

கலெக்டர் வந்ததையறிந்த குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குழந்தைகளைப் பார்த்த கலெக்டர் `எல்லோரும் எப்படியிருக்கீங்க..?’ என்று கேட்டதுடன், தன் மனைவி, மகளை அறிமுகம் செய்துவைத்து `உங்களோடு புது வருடத்தை கொண்டாட வந்திருக்கோம்’ எனக் கூற, குழந்தைகள் முகம் முழுக்கப் புன்னைகையுடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆதரவற்ற குழந்தையுடன் தனது குடும்பத்தினருடன்
ஆதரவற்ற குழந்தையுடன் தனது குடும்பத்தினருடன்

பின்னர் அனைத்துக் குழந்தைகளுக்கும் தனிதனியாக ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பழங்களைஹ்ட் தனது மகள் ஸ்ரீஆத்யா கையால் கொடுக்கவைத்தார். பிறகு அந்தக் குழந்தைகளுடன் ஸ்ரீஆத்யா விளையாடினார். இதை ரசித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார். இதையடுத்து அந்தக் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் உரையாடினார். அப்போது, `நீங்க அரசின் பிள்ளைகள். உங்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும், வந்தாலும் நீங்க என்கிட்ட தைரியமாகச் சொல்லலாம். எல்லாவற்றையும் அரசு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறது. எது நடந்தாலும் நீங்க படிப்பை மட்டும் விட்டுடக் கூடாது இங்கிருக்கும் எல்லோரும் படிச்சு பெரிய ஆளாக வர வேண்டும்.

நீங்கள் படித்து நல்ல பதவிக்குச் சென்ற பின்னர், நான் எங்கே பணிபுரிந்தாலும் என்னைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டால் அப்போது நான் தஞ்சாவூர் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் படித்தபோது நீங்கள் எனக்கு அறிவுரை சொன்னீங்க. அதனால நான் படிச்சு நல்ல பதவிக்கு வந்திருக்கேன் எனத் தெரிவிக்கணும். இது என்னோட ஆசை” எனக் கூறினார்.

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய கலெக்டர்
ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய கலெக்டர்

மேலும் குழந்தைகளிடம், `எதிர்காலத்தில் என்னவாகப்போறீங்க... உங்க லட்சியம் என்ன?’ என அவர் கேட்டதற்கு, `கலெக்டர்’, `டாக்டர்’, `ஐபிஎஸ் அதிகாரி’... என ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொன்றைச் சொல்ல, `உறுதியோடு நீங்க படிச்சா உங்க இலக்கை அடையலாம்’ என உற்சாகப்படுத்தினார்.

ராமநாதபுரம்: காரங்காடு படகு சவாரி... புத்தாண்டு முதல் பயணிகளுக்கு அனுமதி!

சுமார் இரண்டு மணி நேரம் வரை இருந்து புத்தாண்டைக் கொண்டாடிய கலெக்டர் கிளம்பும்போது, `சின்ன வயசுல பெற்றோர் இல்லாத வலி என்பது ரொம்பவே கொடுமையானது. அந்தக் குழந்தைகளுக்கு தங்களுக்கென யாரும் இல்லை என்கிற எண்ணம் மட்டும் வந்துடக் கூடாது. அதற்கு இடம் கொடுக்காம பார்த்துக்கங்க, அதிக அன்போடு பழகுங்க. என்ன கேட்டாலும் செய்து கொடுங்க. அந்தக் குழந்தைகள் முகம் எப்போதும் சிரிப்பை மறக்கக் கூடாது’ என உருக்கமாகக் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு