Published:Updated:

2 பெண் குழந்தைகளுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த கலெக்டர்!

பெண்ணின் குடும்பத்துக்கு உதவிய கலெக்டர்
பெண்ணின் குடும்பத்துக்கு உதவிய கலெக்டர்

கலெக்டர் நிதியிலிருந்து ரூ. 25,000 மற்றும் கைம்பெண் உதவித் தொகை ரூ.1,000 கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து, அந்தப் பெண் வாழ்விலும் வெளிச்சம் பாய்ச்சி இரண்டு குடும்பங்களையும் நெகிழ வைத்துள்ளார்.

தஞ்சாவூரில், கணவர் இறந்த நிலையில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ வழியின்றித் தவித்த பெண் ஒருவருக்கு நிவாரண நிதி, மாதம்தோறும் கைம்பெண் உதவித் தொகை மற்றும் அந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான ஏற்பாட்டையும் செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அனுசுயா. இவரின் கணவர் சுகுமார். இவர்களுக்கு சங்கரி, யோகலட்சுமி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த சுகுமார் சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட, சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வாழ வேண்டிய வயதில் கணவரை பறிகொடுத்துவிட்டு தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் தவித்துள்ளார் அனுசுயா.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
பெற்றோரால் கைவிடப்பட்டு கொத்தடிமைகளான குழந்தைகள்; மீட்டு நெகிழவைத்த கலெக்டர்!

தன் பிள்ளைகள் பசிக்கு சாப்பிடக்கூட வழியில்லாத சூழல் ஏற்பட்டதால், அனுசுயா வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அதன் மூலம் ஓரளவுக்குக் கிடைத்த சம்பளத்தை வைத்து சங்கரியையும் யோகலட்சுமியையும் வளர்த்து வந்துள்ளார். அதன் பிறகுதான் அனுசுயாவின் வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியிருக்கிறது. தன் கணவர் சுகுமார் போலவே அனுசுயாவும் சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். பின்னர் உடல் பலவீனமாகத் தொடங்கியதால் முன்பு மாதிரி வீட்டு வேலைக்குச் செல்ல முடியவில்லை. கையில் இருந்ததை வைத்தும் கடன் வாங்கியும் சில மாதங்களை ஓட்டியிருக்கிறார். அதன் பிறகு, வாழ வழியின்றி தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் பரிதவித்துக் கலங்கியிருக்கிறார்.

அனுசுயாவின் நிலை பற்றி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்குச் செல்ல, உடனடியாக அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அனுசுயா மற்றும் அவரின் பிள்ளைகளின் நிலை கண்டு கலங்கியவர் உடனே கலெக்டர் நிதியிலிருந்து ரூ. 25,000 மற்றும் மாதம்தோறும் கைம்பெண் உதவித் தொகை ரூ. 1,000 கிடைப்பதற்கான உத்தரவையும் வழங்கியிருக்கிறார்.

அத்துடன் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்களின் கல்விச் செலவுக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு சார்பில், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,000 மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவதற்கும் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

இது குறித்து அனுசுயாவிடம் பேசினோம். ``வசிப்பதற்கு வீடில்லை. துரத்தும் வறுமைக்கு இடையில் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசிக்கிறேன். என் பரிதாபமான நிலை கலெக்டர் சாருக்கு தெரிய வந்திருக்கிறது. கொஞ்சம்கூட தாமதிக்காமல் நாங்கள் இருக்கும் இடத்துக்கு வீடு தேடி வந்தார் கலெக்டர் சார். எங்களைப் பற்றி அறிந்து கலங்கியவர், உடனே ரூ. 25,000 கொடுத்தார். கைம்பெண் உதவித் தொகை ரூ. 1,000 கிடைப்பதற்கும் உத்தரவிட்டார்.

பெண்ணின் குடும்பத்துக்கு உதவிய கலெக்டர்
பெண்ணின் குடும்பத்துக்கு உதவிய கலெக்டர்
மதுரை: `மூதாட்டியின் மனு; தன் காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்று நடவடிக்கை! - நெகிழவைத்த கலெக்டர்

என் மூத்தமகள் சங்கரி 10-ம் வகுப்பும், இளைய மகள் யோகலட்சுமி 6-ம் வகுப்பும் படிக்கின்றனர். நாங்கள் இருக்கும் சூழலில் அவர்களைப் படிக்க வைப்பதில் உள்ள கஷ்டத்தை புரிந்துகொண்டு, கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ. 2,000 கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். `படிச்சு நல்ல பெரிய ஆளா வரணும், அப்பதான் நிரந்தரமா கஷ்டம் தீரும், உங்க அம்மாவையும் நல்லா பார்த்துக்கணும்' என்று பிள்ளைகளை உற்சாகப்படுத்தினார்.

எனக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதில் இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம், நான் தங்கியிருக்குற வீட்டுல உள்ள பெண்ணும் கணவரை இழந்தவர். அவரும் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பற்றியும் அறிந்து அவருக்கும் கலெக்டர் நிதியிலிருந்து ரூ. 25,000 மற்றும் கைம்பெண் உதவித் தொகை ரூ. 1,000 கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்தப் பெண் வாழ்விலும் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார். கலெக்டரின் இந்தச் செயலுக்கு அந்தப் பெண் கண்ணீரால் நன்றி தெரிவித்தார். `கஷ்டப்படுற மக்களைக் காக்குறதுக்காகத்தான் அரசும் நாங்களும் இருக்கோம், கவலையில்லாம இருங்க' என்று சொல்லிட்டு எங்களை நெகிழ வைத்துச் சென்றார்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு