Published:Updated:

கன்றுகளை விற்று நிவாரண நிதி, விகடன் தந்த வெளிச்சம், கிடைத்த உதவி; நெகிழும் மாற்றுத்திறனாளி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிதி உதவி வழங்கிய கலெக்டர் கோவிந்தராவ்
நிதி உதவி வழங்கிய கலெக்டர் கோவிந்தராவ் ( ம.அரவிந்த் )

இன்று ரவிச்சந்திரன் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர் கோவிந்தராவ், கறவை மாடு வாங்கி ரவிச்சந்திரன் தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள, தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின் படி, தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 50,000-க்கான காசோலையை வழங்கினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் அருகே விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக வளர்த்து வந்த இரண்டு கன்றுக் குட்டிகளை விற்று அதில் வந்த பணத்தை கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அவரை பாராட்டிய கலெக்டர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரூ. 50,000 நிதி வழங்கியிருக்கிறார். `இதற்குக் காரணமான விகடனுக்கு நன்றி' என நெகிழ்ந்தார் அந்த மாற்றுத்திறனாளி.

கலெக்டரிடம்  நிதி உதவி வழங்கும் ரவிச்சந்திரன்
கலெக்டரிடம் நிதி உதவி வழங்கும் ரவிச்சந்திரன்

தஞ்சாவூர் அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). விழிச்சவால் உடைய மாற்றுத்திறனாளி. தன்னைபோல் கஷ்டப்படும் பலருக்கு அரசு சார்பில் கிடைக்கக் கூடிய உதவிகளை எந்த எதிர்பார்ப்புமின்றி பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுப்பவர். ஆக்கிரமிப்பில் உள்ள நீர் நிலைகளை மீட்பதில் ஆக்கமுடன் செயல்பட்டு வருபவர். தான் சார்ந்த ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பதுடன் அதற்கான செயல்களிலும் ஈடுபட்டு வருபவர்.

இவரின் மனைவி மகேஷ்வரி (42). இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் (20), பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள சஞ்சய் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர். நூறு நாள் வேலையில் கிடைக்கும் சம்பளம், மாதந்தோறும் கிடைக்கும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை ஆகியவற்றைக் கொண்டே ரவிச்சந்திரன் குடும்பம் நகர்கிறது.

இந்நிலையில் தன் இளைய மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காகக் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தில் இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்தார். இதற்கிடையில், கொரோனா வேகமாகப் பரவியதை கண்டு மனம் கலங்கியதுடன் தன்னைப்போல் கஷ்டப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என நினைத்தார்.

கன்றுகுட்டிகளுடன் ரவிச்சந்திரன்
கன்றுகுட்டிகளுடன் ரவிச்சந்திரன்

எனவே தன் மகன் படிப்பிற்காக வளர்த்த இரண்டு கன்றுக் குட்டிகளை ரூ 6,000 விற்று அந்தப் பணத்தை கொரோனா தடுப்புப் பணிக்கு பயன்படுத்துவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கலெக்டர், `உங்களுடைய செயல் பாராட்டுக்குரியது' என வாழ்த்தியதோடு, ``உங்களுக்கு என்ன உதவி தேவை கேளுங்க" எனச் சொல்ல, ``எனக்குனு எதுவும் வேண்டாம், ஊர் நலனுக்காக சில கோரிக்கைகளை மனுவாக எழுதி கொண்டு வந்திருக்கேன் சார், அதை செஞ்சு கொடுங்க" என்றார் ரவிச்சந்திரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக மனுக்களை வாங்கிப் படித்த கலெக்டர், அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். ரவிச்சந்திரன் கன்றுக் குட்டிகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கியது குறித்து, `மகன் படிப்புக்காக வளர்த்த கன்றுகளை விற்று கொரோனா நிவாரண நிதியளித்த மாற்றுத்திறனாளி' என்ற தலைப்பில் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இது சமூக வலைதளங்களில் பரவியது.

குடும்பத்தினர்
குடும்பத்தினர்

அத்துடன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் கவனத்திற்கும் சென்றது. வறுமை நிலையிலும் மற்றவர்கள் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்து நிதி வழங்கிய ரவிச்சந்திரன் செயல் போற்றுதலுக்கு உரியது என நெகிழ்ந்த இறையன்பு, உடனடியாக தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவை தொடர்பு கொண்டு, அரசு சார்பில் ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு உதவி செய்ய வலியுறுத்தினார்.

பின்னர் கலெக்டர் கோவிந்தராவ், ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு என்ன தேவை என விசாரிக்க, கறவை பசு மாடு வாங்கிக் கொடுத்தால் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து இன்று ரவிச்சந்திரன் வீட்டுக்கு நேரில் சென்ற கலெக்டர் கோவிந்தராவ், கறவை மாடு வாங்கி ரவிச்சந்திரன் தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள, தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின் படி, தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 50,000-க்கான காசோலையை வழங்கினார்.

கலெக்டர் கோவிந்தராவுடன் ரவிச்சந்திரன்
கலெக்டர் கோவிந்தராவுடன் ரவிச்சந்திரன்
மகன் படிப்புக்காக வளர்த்த கன்றுகளை விற்று கொரோனா நிவாரண நிதியளித்த மாற்றுத்திறனாளி!

தன்னுடைய வீட்டிற்கு கலெக்டர் வந்ததால் நெகிழ்ந்த ரவிச்சந்திரன், ``சார் நான் எதையும் எதிர்பார்த்து செய்யலை, எனக்கு நிதியெல்லாம் வேண்டாம்" எனக் கூறினார். ``நீங்க பல கஷ்டத்துல இருக்குற சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காக முடிந்த உதவியைச் செஞ்சிருக்கீங்க. உங்களைப் போன்றவர்களை அரசு சார்பில் கவுரவப்படுத்துவது கடமை. இந்த நிதியைப் பெற்று வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்திக்கோங்க" எனக் கூறினார்.

ரவிச்சந்திரனிடம் பேசினோம். ``மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எனது எண்ணத்தினை அறிந்து, கலெக்டர் சாரை பார்க்க வைத்து, கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்கான ஏற்பாட்டை விகடன் செய்தது. இன்று கலெக்டர் சார் என் வீட்டுக்கு வந்துடன், `என்னைத் தேடி நீங்க வந்தீங்க, இப்ப உங்க வீட்டுக்கு நாங்களெல்லாம் வந்திருக்கோம்' எனக் கூறி ரூ.50,000 நிதி உதவி வழங்கினார். தலைமைச் செயலாளர் இறையன்பு சார் செய்யச் சொன்னதாகவும் தெரிவித்ததுடன், மகன்கள் படிப்பு குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

ரவிச்சந்திரன் வீட்டில் கலெக்டர் கோவிந்தராவ்
ரவிச்சந்திரன் வீட்டில் கலெக்டர் கோவிந்தராவ்

நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், ``உன் நல்ல மனசுக்கு நல்லது நடக்கும்" என்று பலரும் பாராட்டுகிறார்கள். என் வீட்டுப் பட்டாவுக்கான நகலையும் அதிகாரிகள் வாங்கிச் சென்றனர். இந்த நேரத்தில், கலெக்டர், தலைமைச் செயலாளர் இருவருக்கும், இதற்கு வித்திட்ட விகடனுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என நெகிழ்ந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு