Published:Updated:

``மகன் வீட்டைவிட்டு விரட்டிட்டான்; அனாதரவா திரியுறோம்!'' - வயோதிகப் பெற்றோரின் கண்ணீர்க் கதை

மனோகரன் - தனலட்சுமி
மனோகரன் - தனலட்சுமி

தஞ்சையைச் சேர்ந்த ஒரு வயோதிகப் பெற்றோர், தங்களின் மகனால் விரட்டியடிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அகதிபோல் வாழ்ந்து வருவது நம் நெஞ்சை கனமாக்குகிறது.

முதுமைக் காலத்தில் பெற்றோரின் மனம், தங்களது பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும். தங்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட பிள்ளைகள், கடைசிக் காலத்தில் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும்போது, அதை உடைத்து சுக்குநூறாக்கினால் அவர்கள் அடையும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தஞ்சையைச் சேர்ந்த ஒரு வயோதிகப் பெற்றோர், தங்களின் மகனால் விரட்டியடிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அகதிபோல் வாழ்ந்து வருவது நம் நெஞ்சை கனமாக்குகிறது.

``மகன் வீட்டைவிட்டு விரட்டிட்டான்; அனாதரவா திரியுறோம்!'' - வயோதிகப் பெற்றோரின் கண்ணீர்க் கதை

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள அருள்மொழிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி. சுமார் 70 வயதான மனோகரன், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த வயதான காலத்திலும் உழைத்துச் சம்பாதித்து, அவரும் அவரின் மனைவியும் வாழ வேண்டிய கட்டாயம். அதைப் பற்றிக் கவலைப்படாமல் தளராது உழைத்துக் கொண்டிருந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டதால் வருமானம் இழந்து தவித்திருக்கிறார். இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய அவர்களின் மகனோ, அவர்களை வீட்டை வீட்டு விரட்டியடித்துவிட்டதாக, கண்ணீர் மல்கக் கதறுகிறார்கள் மனோகரன் - தனலட்சுமி தம்பதி.

``எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். எங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டோம். எங்களுக்கு ஒரே ஆண் வாரிசுங்குறதுனால, பையன் மேல பாசத்தைக் கொட்டி வளர்த்தோம். நான் சலூன் கடை வச்சிருக்கேன். ஆனாலும், என் பையனை பி.காம் வரைக்கும் படிக்க வச்சேன். அதுக்கு மேல எம்.சி.ஏ-வும் படிக்க வச்சேன். ஆனா, வேலை கிடைக்கல.

என்கிட்ட முடிவெட்ட, நிறைய அரசு அதிகாரிகள் வருவாங்க. அதுல ஒருத்தர்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, அரசு கொள்முதல் நிலையத்துல வேலைக்குச் சேர்த்துவிட்டேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சேன். அதுக்குப் பிறகு அவனோட நடவடிக்கைகள் தலைகீழா மாற ஆரம்பிச்சிடுச்சு. எங்களை எடுத்தெறிஞ்சு பேச ஆரம்பிச்சிட்டான். `இனிமே இந்த வீட்ல இருக்கக் கூடாது... வெளியில போயிடுங்க'னு சொல்லிக்கிட்டே இருந்தான். நாங்களும் கூட கோவத்துலதான் இப்படிச் சொல்றான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.

"பிறர் உதவில வளர்ந்தோம், இப்போ முடிஞ்சத செய்யறோம்!"- 50 பேருக்கு உணவளிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி

இதுக்கிடையில எங்க பொண்ணுக்குப் பிரசவம். மன்னார்குடி பக்கத்துல வடுவூர்ல உள்ள எங்களோட சம்பந்தி வீட்டுக்குப் போயிட்டு நாங்க திரும்பி வந்து பார்த்தா, எங்களோட வீடு பூட்டப்பட்டு கிடக்கு. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கிட்டு, எங்க மகன் சிவானந்தம், தன் மாமியார் வீட்டுக்குப் போயிட்டான்.

அங்க போயி அவன்கிட்ட வீட்டுச் சாவியைக் கேட்டோம். ரொம்ப மோசமா எங்களைத் திட்டி அனுப்பிட்டான். கடந்த ஒரு மாசமா, மாரியம்மன் கோயில், சொந்தக்காரங்க வீடுனு அகதி மாதிரி தங்கியிருந்து எங்க வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே வீட்டுக்குள்ள அனுமதிக்கவே மாட்டேன்னு எங்க மகனும் மருமகளும் பிடிவாதமா சொல்லிட்டாங்க. வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி ரசிது, கரன்ட் பில் எல்லாமே என் மனைவி தனலட்சுமி பேருலதான் இருக்கு.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்

இந்த வீட்டை தன்னோட பேருக்கு மாத்தி எழுதிக் கொடுங்கனு மிரட்டிக்கிட்டு இருக்கான். இந்த வீட்டை விட்டா, நாங்க வாழ வேற இடம் கிடையாது. இன்னும் எத்தனை நாளைக்குதான் கோயில்லயும் சொந்தக்காரங்க வீட்லயும் மாறி மாறி தங்கிக்கிட்டு இருக்க முடியும்? எங்க வீட்ல நாங்க வசிக்க, ஏதாவது வழி பண்ணிக் கொடுங்கய்யா’’ எனக் கதறினார் மனோகரன்.

``எங்க மகனும் மருமகளும் எங்களை எவ்வளவோ அவமானப்படுத்தியிருக்காங்க. அதையெல்லாம் கூட பொறுத்துக்கிட்டோம். இப்ப வீட்டை விட்டே எங்களை விரட்டினா, இந்த வயசான காலத்துல நாங்க எங்க போயி வாழ முடியும்?’’ என அழுது புலம்பினார் தனலட்சுமி.

இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையான பரிதாப நிலையை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ``கேக்குறதுக்கே ரொம்ப வேதனையா இருக்கு. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆர்.டி.ஒ-வை அனுப்பி விசாரணை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குறேன்’’ என உறுதி அளித்தார். தங்களுக்கு நீதி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையோடும் பரிதவிப்போடும் காத்திருக்கிறார்கள், இந்த வயது முதிர்ந்த பெற்றோர்.

அடுத்த கட்டுரைக்கு