Published:Updated:

பாரம்பர்யத்துக்கு கிடைத்த பெருமை! -புவிசார் குறியீடு வென்ற தஞ்சாவூர் நெட்டி, அரும்பாவூர் மரச்சிற்பம்

நெட்டியில் உருவாக்கப்பட்ட சிற்பம்
நெட்டியில் உருவாக்கப்பட்ட சிற்பம்

ஒவ்வொரு பொருள்களின் வரலாறு, தனிச் சிறப்பு ஆகியவற்றைக் கொண்டு அதன் ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு பொருள்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.

தமிழகத்தில் உருவாக்கப்படும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, வீணை, கலைத்தட்டு, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு உள்ளிட்ட 35 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், தற்போது தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நெட்டி மூலம் தயார் செய்யும் பொருட்கள்
நெட்டி மூலம் தயார் செய்யும் பொருட்கள்

தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பதிவுபெற்ற பொருள்களின் ஒருங்கிணைப்பாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சஞ்சய் காந்தியிடம் பேசினோம்.

`` ஒவ்வொரு பொருள்களின் வரலாறு, தனிச்சிறப்பு ஆகியவற்றைக் கொண்டு அதன் ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஒவ்வொரு பொருள்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. புவிசார் குறியீடு பெற்றுத் தருவதற்கான பணிக்கு தமிழக அரசு என்னை நியமித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் உள்ள 35 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரவேலைப்பாடு ஆகிய இரண்டு பொருள்களுக்கு தற்போது புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்திருப்பது தமிழகத்தின் பாரம்பர்யத்துக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

சஞ்சய் காந்தி
சஞ்சய் காந்தி

தஞ்சாவூர் நெட்டி மற்றும் அரும்பாவூர் மரவேலைப்பாடு ஆகிய இரண்டு பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக பூம்புகார் சார்பில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதன் சிறப்புகள் மற்றும் பாரம்பர்யத்துக்கான ஆதாரங்களைத் திரட்டி 2014-ம் ஆண்டு புதுடெல்லியில் ஏழு நபர்களைக் கொண்ட புவிசார் குறியீடு வல்லுநர் குழு முன்பு எடுத்து வைத்தேன். மேலும், இதற்காக பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில் 7 வருட உழைப்புக்குப் பிறகு தற்போது இந்தப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழர்களின் பாரம்பர்ய விழாவான மாட்டுப் பொங்கல் விழா 1000 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட மாடுகளுக்கு மரியாதை செய்யும்விதமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழாவில் நெட்டிகளைக் கொண்டு அலங்கார மாலைகள் செய்து அதை மாடுகளுக்கு அணிவித்து மகிழ்ந்து சிறப்புமிக்க இந்த விழாவை கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கான சான்று அரசு நாளிதழில் உள்ளது.

தேர்
தேர்

ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் வளரும் தன்மை கொண்டது நெட்டி என்கிற செடி வகையிலான தாவரம். இதன் நடுப்பகுதி கைவிரல் அளவுக்கு தண்டு போன்று நீளமாக இருக்கும். இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் காய வைத்தால் எடை இல்லாமல் தக்கையாக இருக்கும். இதன் நடுப்பகுதியில் துளையிட்டு மாலை, கோயில், தாஜ்மஹால் போன்ற பல்வேறு கைவினைப்பொருள்கள் மற்றும் நினைவுப் பரிசுப் பொருள்கள் செய்யப்படுவது வழக்கம்.

எந்தப் பொருளைக் கொடுத்து அதன் அமைப்பு போலவே நெட்டியில் செய்யச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் கலைஞர்கள் வேறு எந்தப் பொருள்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே பயன்படுத்தி இயந்திரம் எதுவும் பயன்படுத்தாமல் கைகளாலேயே அப்படியே அச்சு அசலாக அந்தப் பொருள்களை செய்து அசத்துவார்கள். தஞ்சை பெரிய கோயில் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை எழில்மிகுந்த இடங்கள் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றை இதில் உருவாக்கி வருகின்றனர். தமிழகம் தாண்டி நெட்டியில் செய்யப்படும் பொருள்களுக்கு நல்ல மவுசு இருப்பதுடன் சிறப்புமிக்கதாகவும் திகழ்ந்து வருகிறது.

நெட்டியில் செய்யப்படும் பொருள்
நெட்டியில் செய்யப்படும் பொருள்

இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் செய்யப்படும் மரவேலைப்பாடுகள் 250 ஆண்டுகள் பழைமையானதுடன் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறது. போயர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மர வேலைப்பாடுகளில் கோயில்களுக்குப் பயன்படக்கூடிய பொருள்களைச் செய்து வருகின்றனர். தேக்கு, மாவிலகை, பூவாகம், வேம்பு, மா, அத்தி உள்ளிட்ட மரங்களைக் கொண்டு தேர், கோயில் சிற்பங்கள், கொடி மரம் மற்றும் கோயில் தொடர்புடைய பொருள்களை அழகிய வேலைபாடுகளுடன் கூடிய வகையில் இன்றளவும் செய்து அசத்துகின்றனர்.

5 ஆண்டுகால முயற்சி; 6000 தொழிலாளர்களின் உழைப்பு! - புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்

தமிழகத்தில் சிறப்புமிக்க கோயில்களான ஸ்ரீரங்கம், வடபழனி, ஆவுடையார்கோயில், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு மரங்கள் மூலம் இவர்கள் கைவண்ணத்திலேயே நுணுக்கமான சிறப்புமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய தேர் செய்து கொடுத்து அசத்தியுள்ளனர். பார்ப்பதற்கு அழகாகவும் அதே நேரத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரும்பாவூர் மரச்சிற்பம்
அரும்பாவூர் மரச்சிற்பம்

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடுகளுக்கு புவிசார் அங்கீகாரம் கேட்டு 2013-ல் விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 2020 ஜனவரி 10-ம் தேதி அரசிதழில் ஆட்சேபனை கேட்டு வெளியிடப்பட்டது. நான்கு மாதம் இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது, இதற்கு ஏதும் ஆட்சேபனை வராததால் இன்று இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் இயங்கி வரும் புவிசார் குறியீட்டின் பதிவாளர் மற்றும் துணைப்பதிவாளர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டதுடன் இரண்டு தினங்களில் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது தமிழர்களின் பாரம்பர்யத்துக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு