Published:Updated:

பெற்றோர் மறைவு, வறுமையால் கலங்கும் பிள்ளைகள்; உதவிக்காக காத்திருக்கும் தாத்தா, பாட்டி!

பேரனுடன் சுப்ரமணியன்
பேரனுடன் சுப்ரமணியன்

``எங்க உசுரு இருக்குற வரைக்கும் நாங்க எப்பாடுபட்டாவது பேரப்புள்ளைகள வளர்த்துருவோம். ஆனா, எங்களுக்குப் பிறகு இந்த பிள்ளைகளோட நெலமைய நெனச்சாத்தான் ராவெல்லாம் தூக்கம் வரமாட்டேங்குது'' என வயதான தம்பதி கலங்குகின்றனர்.

பெற்றோர் தங்கள் இரண்டு பிள்ளைகளை சிறுவயதிலேயே தவிக்க விட்டுட்டு இறந்துவிட்ட நிலையில், அந்தப் பிள்ளைகளின் தாத்தா, பாட்டி இருவரும் தள்ளாத வயதிலும் வேலை செய்து தங்கள் பேரப்பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், இருப்பதற்கு நல்ல வீடு இல்லை, பேரப்பிள்ளைகளின் எதிர்காலப் படிப்புக்கும் வழியில்லை என்பதை நினைத்து அந்த வயதான தம்பதி கலங்கி நிற்கின்றனர்.

பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். அவருக்கு வயது 73. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாட்ச்மேனாகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி அம்மாக்கண்ணு (60). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். பெற்றெடுத்த பிள்ளைகளைக் கரைசேர்த்த நிம்மதியோடும், பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாரமாக இருக்கக் கூடாது என்ற உறுதியோடும் வயதான இந்தத் தம்பதி தள்ளாத வயதிலும் வேலைசெய்து வாழ்கையை நகர்த்தி வந்தனர்.

இடிந்து கிடக்கும் வீடு முன்பு சுப்ரமணியன்
இடிந்து கிடக்கும் வீடு முன்பு சுப்ரமணியன்

இவர்களுடைய இளைய மகன் பழனிவேல், சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். அவரின் மனைவி கோமதி. இந்தத் தம்பதிக்கு அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படிக்கின்ற சக்திவேல் என்ற மகனும், 6-ம் வகுப்புப் படிக்கின்ற சங்கவி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட கோமதி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, அந்த சோகம் மறைவதற்குள்ளேயே பழனிவேலும் இறந்துவிட்டார். பிள்ளைகள் இருவரும் செய்வதறியாது ஆதரவின்றி தவித்து நின்றனர்.

சொந்தங்கள் பல இருந்தும் அந்தப் பிள்ளைகளை அரவணைத்து வளர்க்கக்கூடிய வகையில் யாருடைய குடும்பச் சூழ்நிலையும் இல்லை. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி நின்ற குழந்தைகளை, முதுமையில் தள்ளாடிக் கொண்டிருந்த அவர்களின் தாத்தா, பாட்டி வாரியணைத்து பராமரித்தனர். இருவரும் வேலை செய்வதில் வரும் சொற்ப சம்பளத்தின் மூலம் பேரப்பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர்.

இடிந்து கிடக்கும் வீடு
இடிந்து கிடக்கும் வீடு

இதில், கஜா புயலில் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியாத துயரமும் இவர்களை துரத்துகிறது. பெரிய கூரை வீடு கண் முன்னே இடிந்து கிடக்க, சின்ன குடிசையில் பேரப்பிள்ளைகடன் வசித்து வருகின்றனர்.

``எங்க உசுரு இருக்குற வரைக்கும் நாங்க எப்பாடுபட்டாவது பேரப்புள்ளைகள வளர்த்துருவோம். ஆனா, எங்களுக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளோட நெலமைய நெனச்சாத்தான் ராவெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது. இருக்க குருவிக் கூடு மாதிரியான வீட்டைக்கூட இந்தச் சின்ன குஞ்சுகளுக்கு அமைச்சுத் தர முடியாம கண்ணை மூடிடுவோமோங்கிற கவலை என்னையும், என் பொஞ்சாதியையும் துளைத்தெடுக்குது'' என சுப்ரமணியன் கண்ணீர் வடித்து வருகிறார்.

``எங்களுக்கு மொத்தம் அஞ்சு பிள்ளைகள். தொழுநோயால் என்னோட ஒரு கை பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாயக் கூலி வேலை செஞ்சு அதுல வந்த வருமானத்தை வச்சு குடும்பத்தை நடத்தி வந்தோம். ஒரு வழியா எங்களோட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி கரையேத்திட்ட நிம்மதி, ரொம்ப நாள் நிலைக்கலை. என்னோட இளைய மகனும், அவன் மனைவியும் ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு அடுத்தடுத்து இறந்துட்டாங்க.

பேரப்பிள்ளையுடன் சுப்ரமணியன்
பேரப்பிள்ளையுடன் சுப்ரமணியன்

இதனால நாங்க நிலைகுலைஞ்சு போனோம். பேரப்புள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெருஞ்சுமை எங்களுக்கு ஏற்பட்டது. இதுக்கிடையில, எனக்கு பேராவூரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில வாட்ச்மேன் வேலை கிடைச்சது. பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பா மாசம் ரூ 4,000 சம்பளத்துல தற்காலிகப் பணியாளரா வேலைபார்க்கிறேன். என் பொஞ்சாதி விவசாயக் கூலி வேலைக்குப் போறா. இதுல வர்ற பணத்தை வச்சு எங்களையும் எங்க பேரப் புள்ளைகளையும் பார்த்துக்குறோம்.

இருக்குற வீடு தவிர வேறு எந்தக் குறையும் இல்லாம கவனிச்சுக்குறோம். அம்மாக்கண்ணுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போயிடுது. என் மகன் பழனிவேல் இருந்த வீடு கஜா புயலில் இடிஞ்சு போச்சு. அதனால சின்ன குடிசையில பேரப்புள்ளைகளோட இருக்குறோம். இட வசதி பத்தாததுனால என்னோட பேத்தி மாவடுகுறிச்சியில் உள்ள அவங்க அம்மா வழி பாட்டி வீட்ல கொஞ்ச நாளும், இங்க கொஞ்ச நாளுமா இருக்கா. அப்பா இருந்த வீடு இப்படி கெடக்குதேன்னு அந்தப் புள்ளைங்க அடிக்கடி கண் கலங்குறதை என்னால பார்க்க முடியல.

வீட்டை சீரமைச்சுக் கொடுக்கச் சொல்லி மாவட்ட கலெக்டர் தொடங்கி பலர்கிட்ட உதவி கேட்டேன். இல்லைன்னா தொகுப்பு வீடாவது கட்டிக் கொடுங்கன்னு கண்ணீர் விட்டேன். ஆனா, எந்த உதவியும் கிடைக்கல. எப்படியாவது பேரப்புள்ளைகள படிக்க வெச்சுடணும்னு பிரயாசப்பட்டுக்கிட்டு இருக்கேன். குடியிருக்க சின்ன அளவுல ஒரு நல்ல வீட்டை அமைச்சுக் கொடுத்துட்டா போதுமுனு மெனக்கெடுறேன். அதுக்கான வழியே பிறக்கல. எங்களுக்கும் உடம்பு முன்ன மாதிரி இல்ல. நாங்க இருக்குறவரை ரெண்டு பேரப்புள்ளைகளையும் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக்குவோம்.

சுப்ரமணியன்
சுப்ரமணியன்

எங்களுக்கு அப்புறம் அவங்க இருக்கவும், படிக்கவும் வழியில்லாம தவிச்சு நின்னுடுவாங்களோனு நெனைக்கும்போது என்னை அறியாம கண்ணீர் கொட்டுது. சின்ன வயசுலேயே பெற்றோரை இழந்ததே பெரும் கொடுமை. இதுல வறுமையும் சேர்ந்து அந்தப் பிஞ்சுகளை வாட்டுது. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு நல்லது நடக்கும்னு ஓடிக்கிட்டே இருக்கோம். சின்ன வீடும், நல்ல படிப்பும் அந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்குற வரைக்கும் எங்க மூச்சு நின்னுடாம இருந்துட்டா போதும்'' என்றார்.

இந்த முதிய தம்பதி, அவர்களின் பேரக்குழந்தைகளின் நலன் கருதி, `கஜா துயர்துடைப்போம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டி கொடுப்பது என்று ஆனந்த விகடன் குழுமத்தில் அறத்திட்டப்பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளை முடிவெடுத்துள்ளது.

குழந்தைகளின் படிப்புக்கான வழியை எதிர்நோக்கியிருக்கிறார்கள் தாத்தாவும் பாட்டியும்!

அடுத்த கட்டுரைக்கு