Published:Updated:

`ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கவிட மாட்டேன்..!' - 6 பிள்ளைகள் கைவிட்ட நிலையிலும் கணவரை காக்கும் மனைவி

சுசீலா
சுசீலா ( ம.அரவிந்த் )

இந்த மரங்கள் இனி காய்க்காது எனத் தெரிந்த பிள்ளைகள் எங்களைப் புறக்கணிக்கத் தொடங்கினர். என்னடா ஆசையாக வளர்த்த பிள்ளைகள் இப்படி நம்மளை அநாதையாக நிற்க வைத்து விட்டார்களே என என் கணவர் கண்கள் கலங்கி நின்றதை என்னால் பார்க்க முடியவில்லை.

தஞ்சாவூரில் வயதான பெண்மணி ஒருவர் தன்னுடைய ஆறு பிள்ளைகளாலும் கைவிடப்பட்ட நிலையில் உடல் நல பிரச்னையால் வாடும் தன் கணவரை ஒரு குழந்தையாக அரவணைத்துக் கொண்டதுடன், `நான் இருக்கும் வரை உங்களை ஒரு சொட்டு கண்ணீர் வடிக்க விட மாட்டேன்' எனக் கடலை மிட்டாய் வியாபாரம் செய்து கணவரைக் காப்பாற்றி வருகிறார்.

சுசீலா
சுசீலா

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுசீலா வயது 65. இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு வயது 80. இவர்களுக்கு 4 ஆண் 2 பெண் என மொத்தம் 6 பிள்ளைகள். ஒரே ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் தனித் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த வயதான காலத்தில் இவர்களை பிள்ளைகள் அனைவரும் கவனிக்காமல் கைவிட்டு விட்டனர்.

இந்த நிலையில் முடியாத தன் கணவனைக் காப்பாற்ற தஞ்சை பெரியகோயில் முன்பு கடலை மிட்டாய் வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிள்ளைகள் கைவிட்டால் என்ன நான் இருக்கிறேன் எனக் கணவரை அரவணைத்து மன வலிமையோடு அனைத்தையும் எதிர்கொண்டு ஒரு குழந்தையைப் போலவே தன் கணவரை காப்பாற்றி வருவது பலருக்கும் நெகிழ்ச்சியைத் தருகிறது.

மனைவி சுசீலா
மனைவி சுசீலா

சுசீலாவிடம் பேசினோம், ``எங்களுக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்காங்க. எங்க வீட்டுக்காரர் மொத்த மிட்டாய் வியாபரம் செய்து வந்தார். அதில் வந்த வருமானத்தைக் கொண்டுதான் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து கல்யாணமும் செய்து வைத்தோம். அப்புறம் என் கணவருக்கு வயதாகிவிட்டதால் சரியாகக் காது கேட்காமல் போய்விட்டது. அதனால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனக்கும் காலில் எலும்பு நகர்ந்து பிளேட் வைத்து ஆபரேஷன் செஞ்சிருக்கு. அதனால் ரொம்ப நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது.

இந்த மரங்கள் இனி காய்க்காது என தெரிந்த பிள்ளைகள் எங்களைப் புறக்கணிக்கத் தொடங்கினர். என்னடா ஆசையாக வளர்த்த பிள்ளைகள் இப்படி நம்மளை அநாதையாக நிற்க வைத்து விட்டார்களே என என் கணவர் கண்கள் கலங்கி நின்றதை என்னால் பார்க்க முடியவில்லை. உடனே உங்களுக்கு நான் குழந்தை எனக்கு நீங்கள் குழந்தை நான் இருக்கும் வரை உங்களை ஒரு சொட்டு கண்ணீர்கூட வடிக்க விட மாட்டேன் எனக் கடலை மிட்டாய் வியாபாரத்துக்குக் கிளம்பிவிட்டேன்.

வியாபாரம்
வியாபாரம்

அப்புறம் தனியாக நீ மட்டும் போகாதே துணைக்கு நானும் வாரேன் எனச் சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய கோயிலுக்கு கைகோத்தபடி நடந்தே வருவோம். மெயின் வாசலில் அவரும், சிவகங்கை பூங்கா வாசலில் நானும் கடலை மிட்டாய் விற்போம். ஒரு பாக்கெட் வித்தா மூன்று ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.200 கிடைக்கும். அதை கொண்டுதான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னோட ஒடிந்த தேகத்தைப் பார்த்து சிலர் கடலை மிட்டாய் வாங்காமலேயே காசு தருவார்கள். அவர்களிடம், யாருகிட்டேயும் சும்மா கை நீட்டி ஒத்த பைசா வாங்கக் கூடாது பிள்ளைகள் கைவிட்டால் என்ன நம்பிக்கை எங்களை விடவில்லை என மறுத்துவிடுவேன். உடனே அவர்கள் முகம் முழுக்க புன்னகையுடன் கூடுதலாக இரண்டு பாக்கெட் வாங்கிச் செல்வார்கள்.

சுசீலா
சுசீலா

நான் அந்தக் காலத்திலேயே எஸ்.எஸ்.எல்.சி படித்தவள். பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், எதிர்காலத்தில் அவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஆனால், இப்போ கால சூழ்நிலையில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்றதும் என் கணவர் எனக்கு கால் அமுக்கி விடுவார். அவருக்கு நான் தலை கோதி விடுவேன். இப்படியாக ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகச் சென்றாலும் பிள்ளைகள் அருகில் இல்லையே என ஒரு வகையான வேதனை தொலைத்தெடுக்கும். சும்மாவா சொன்னார்கள் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்று பேசிக்கொண்டே கடலை மிட்டாய் விற்க தொடங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு