Published:Updated:

கலைக்கு பெரிய கோயில்... கல்விக்கு `சரஸ்வதி மஹால் நூலகம்’ - அழிவிலிருந்து மீட்கக் கோரும் சமூக ஆர்வலர்கள்

சரஸ்வதி மஹால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம் ( ம.அரவிந்த் )

கலைக்கு எடுத்துக்காட்டாக எப்படி தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறதோ அதே போல் கல்விக்கு எடுத்துக்காட்டாக சரஸ்வதி மஹால் நூலகம் திகழ்ந்து வருகிறது.

கொரோனா பரவியதைத் தடுப்பதற்காக மூடப்பட்ட தஞ்சாவூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சரஸ்வதி மஹால் நூலகத்தை திறந்து மீண்டும் பொதுமக்கள் படிப்பதற்கும் பார்வையிடுவதற்கும் அனுமதிக்க வேண்டும். உடனடியாக நிரந்தர நிர்வாக அலுவலரைப் பணிக்கு அமர்த்தி அழிவின் பாதையில் செல்லும் நூலகத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அரண்மனை வளாகம்
அரண்மனை வளாகம்

இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறியதாவது, ``தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவிலேயே முதன்மையானதாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் லட்சக்கணகிலான ஓலைச் சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகள் உள்ளன. மேலும், லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அத்துடன் மராத்தி மொழியில் உள்ள ஒரு வகை எழுத்தான மோடி எழுத்துகளில் எழுதப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட காகிதச் சுவடிகள் பண்டல்களாகவும் உள்ளன.

இதில் இலக்கியம், அறிவியல், மருத்துவம், அரிய வகை மூலிகைகள், ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்ட பல குறிப்புகள் உள்ளன. சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து குறிப்புகளை எடுப்பதற்காக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் எனத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் பலர் வந்து செல்கின்றனர். கலைக்கு எடுத்துக்காட்டாக எப்படி தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறதோ அதே போல் கல்விக்கு எடுத்துக்காட்டாக சரஸ்வதி மஹால் நூலகம் திகழ்ந்து வருகிறது.

ஜீவக்குமார்
ஜீவக்குமார்

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த நூலகத்துக்கு எனத் தனி நிர்வாக அலுவலர் இல்லை. பின்னர் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பேரில் ஒருவரை நியமித்தனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் டிரான்ஸ்பரில் சென்றுவிட்டார். அதிலிருந்து கிட்டத்தட்ட தனி நிர்வாக அலுவலர் இல்லாமல் செயல்படுகிறது. இங்குள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகளில் உள்ள குறிப்புகளை எடுத்து புத்தகம் எழுதப்படுவது வழக்கம். வருடத்துக்கு 20 புத்தகம் வரை வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் மறுபதிப்பும் செய்யப்படும்.

ஆனால், இது போன்ற நிர்வாகச் சிக்கல்களால் கடந்த இரண்டு வருடமாக ஒரு புத்தகம்கூட வெளியிடவில்லை. இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டதில் நூலகத்துக்கு எனத் தனி இயக்குநரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதிலிருந்த அரிய வகை நூல்கள் காணாமல் போயிருக்கின்றன. அது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கிறது. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது, போதுமான நிதி ஒதுக்காததால் பல்வேறு பணிகள் தேக்க நிலையில் உள்ளன. இது போன்றவற்றால் வரலாற்று சிறப்புமிக்க இந்த நூலகம் அழியும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.

சரஸ்வதி மஹால் நூலகம்
சரஸ்வதி மஹால் நூலகம்

தஞ்சையின் பெருமையான இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் பொக்கிஷமாகக் காக்கப்பட வேண்டும். கொரோனாவுக்காக மூடப்பட்ட இந்த நூலகத்துக்கு கடந்த 18-ம் தேதியிலிருந்து ஊழியர்கள் பணிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளைத் திறந்த அரசு நூலகங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும். உடனடியாக நிரந்தர நிர்வாக அலுவலரை பணிக்கு அமர்த்தி அழிவிலிருந்து காக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து கலெக்டர் கோவிந்தராவிடம் பேசினோம், ``மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பொறுப்பு நிர்வாக அலுவலராக இருந்து கவனித்து வருவதால் பணிகள் தொய்வின்றி நடக்கிறது. கொரோனா ஊரடங்கால் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரி செய்வதுடன் நூலகத்தைக் காப்பதற்கான நவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு