Published:Updated:

தஞ்சாவூர்: நிரந்தரமான நிர்வாக அலுவலர்... புத்துயிர் பெறுமா சரஸ்வதி மகால் நூலகம்?!

சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம்

‘’புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாக அலுவலர் இங்கேயிருந்து காணாமல் போனால் போன, பழைமையான நூல்கள், ஓலைச்சுவடிகள், கலைப்பொக்கிஷங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

உலகின் தலைச் சிறந்த மிகவும் பழைமையான நூலகங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது, தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம். இது விலை மதிக்க முடியாத அறிவு கருவூலமாக திகழ்கிறது. மருத்துவம், இசை, நாடகம், ஜோதிடம், கணிதம், வரலாறு, வாழ்வியல், இலக்கியம், வானவியல் என அனைத்து துறைச் சார்ந்த, பல மொழிகளிலும் எழுதப்பட்ட 39 ஆயிரம் ஓலைச்சுவடிகள், 69 ஆயிரம் புத்தகங்களை கொண்ட உயராய்வு மையமாக இது விளங்குகிறது. இன்னும் பல தலைமுறைகளுக்கு போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த நூலகத்திற்கு, நிரந்தரமான தனி நிர்வாக அலுவலர் இல்லையென்பது மிகப்பெரும் பின்னடைவு என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஆதங்கப்பட்டு வந்தார்கள்.

சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம்

இந்நூலகத்தில் அமர்ந்து முழுநேரமாக இதனை நிர்வகிக்கக்கூடிய உயர் அலுவலர் இல்லாததால்தான், இந்நூலகம் நிர்வாக சீர்கேடுகளாலும், முறைகேடுகளாலும் சீரழிவதாக அபயக் குரல்கள் ஒலித்து வந்தன. இது தொடர்பாக ஜூனியர் விகடனிலும் விகடன் இணையதளத்திலும் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தோம். இந்நிலையில்தான் தற்போது தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திற்கென நிரந்தரமான நிர்வாக அலுவலரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இனி இந்நூலகம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக தஞ்சை மக்கள் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்தும் பேசும் தஞ்சைவாசிகள், ‘’இந்நூலகம் பலநூறு ஆண்டுகள் பழைமையானது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நூலகமானது, நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மேலும் விரிவுப்படுத்தப்பட்டது. அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய மிகவும் அரிய ஓலைச்சுவடிகளும், நூல்களும் உள்ளன. இது விலைமதிக்க முடியாத அறிவுப் பெட்டகம். ஆனால் இதற்கென தனியாக, நிரந்தர நிர்வாக அலுவலர் இல்லை. வருவாய்த்துறை அல்லது பள்ளிகல்வித்துறை அலுவலர்தான், கூடுதல் பொறுப்பாக இதில் இருந்து வந்தார். பணி சுமையின் காரணமாக அவர் இங்கு எட்டிப்பார்ப்பதே அரிது.

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரியகோயில்

இதனால் இங்கு நூலகராக பணியாற்றும் ஊழியர்கள் சிலர், தங்களது சுய லாபத்திற்காக, பல முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் சீகன் பால்குவால் அச்சிடப்பட்ட முதல் தமிழ் அச்சு நூலான, முதலாம் வேத ஆகமம் நூல் (பைபிள்) சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து 2005-ம் ஆண்டு திருடுப்போனது. இன்னும் ஏராளமான அரிய நூல்களும் ஓலைச்சுவடிகளும் கூட காணாமல் போனது. இங்குள்ள ஓலைச்சுவடிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பழைமையான ஓலைச்சுவடிகள், புத்தகமாகப் பதிப்பிக்கும் பணிகளும் ஒழுங்காக நடைபெறவில்லை. புத்தக விற்பனையும் சுணக்கமாக இருப்பதாக ஆதங்கம் நிலவியது.

இந்நிலையில்தான் இந்நூலகத்திற்கென நிரந்தரமான நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டால்தான் இதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலராகப் பணியாற்றும் மணிவண்ணனை தஞ்சை சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது."

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், "இந்நூலகத்துக்கு என்று தனி அதிகாரி இல்லாததால், இதனுடைய அனைத்து செயல்பாடுகளுமே மிகவும் மோசமான நிலையில் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் இதனுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. உலகமே போற்றக்கூடிய இந்நூலகம் சிறப்பாகச் செயல்பட, இதற்கென்று தனியாக நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியபடி இருந்தோம்.

தஞ்சை பெரியகோயில்
தஞ்சை பெரியகோயில்

தஞ்சை மக்களின் ஆதங்கத்தை விகடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இப்போது தமிழக அரசு இந்நூலகத்துக்கு என நிர்வாக அலுவலரை நியமனம் செய்திருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டவர்களுக்கு தஞ்சை மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினருமான பழ.ராஜேந்திரன் பேசுகையில், "புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாக அலுவலர் ஆக்கப்பூர்வமாகவும் துடிப்போடும் செயல்பட வேண்டும். ஏற்கெனவே இங்கேயிருந்து காணாமல் போன, பழைமையான நூல்கள், ஓலைச்சுவடிகள், கலைப்பொக்கிஷங்கள் போன்றவற்றை மீட்க நடடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இந்நூலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை தஞ்சை மக்கள் மனதில் துளிர்விடத் தொடங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு