Published:Updated:

தஞ்சாவூர்: சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்; ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த போலீஸ்!

கர்ப்பிணி வந்த ஆட்டோ
கர்ப்பிணி வந்த ஆட்டோ ( ம.அரவிந்த் )

பெண் போலீஸ் ஒருத்தரே, கர்ப்பிணினு சொல்லியும் நாங்க பயணம் செய்றதோட நோக்கத்தைப் புரிஞ்சுக்காம அபராதம் வசூலிச்சது வேதனையா இருக்கு

கொரோனா ஊரடங்கிலும் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் தடையின்றி செல்லலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பாபநாசம் பகுதியிலிருந்து தஞ்சாவூருக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த ஆட்டோ டிரைவரிடம், போலீஸ் பெண் எஸ்.ஐ ஒருவர், மாஸ்க்கை சரியாகப் போடவில்லை எனக் கூறி ரூ.200 அபராதம் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருவதையடுத்து தமிழக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்து, அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பால் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதியளித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக செல்பவர்களைத் தடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

கணவருடன் கர்ப்பிணிப் பெண்
கணவருடன் கர்ப்பிணிப் பெண்

பொதுமக்கள் ஊரடங்கு நேரத்திலும் அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக போலீஸ் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அனுமதி இன்றியும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்கின்றனர். தஞ்சாவூரில் அனுமதியில்லாமல் வெளியே சுற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அய்யம்பேட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு சத்யா என்ற கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரின் கணவர் சங்கர் ஆகியோரை, கோவிந்தராஜ் என்ற ஆட்டோ டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது கண்காணிப்புப் பணியிலிருந்த போலீஸ், ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜிடம் மாஸ்க்கை சரியாகப் போடவில்லை எனக் கூறி ரூ. 200 அபராதம் வசூல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்ப்பிணி பெண் சத்யா கூறுகையில், ``நான் என் கணவர் சங்கர்கூட அய்யம்பேட்டை கீழ வீதியில வசிக்கிறேன். இப்போ கர்ப்பிணியா இருக்கும் நான், தஞ்சாவூர்ல இருக்குற தனியார் மருத்துவமனையில ஒரு டாக்டர்கிட்ட சிகிச்சை எடுத்துட்டு வர்றேன். இந்நிலையில், மாதந்தர பரிசோதனைக்காக நானும் கணவரும் ஆட்டோவில் தஞ்சைக்கு வந்தோம்.

கோடியம்மன் கோயில் பக்கத்துல வந்தப்போ, அங்க பாதுகாப்புப் பணியில ஈடுபட்டிருந்த போலீஸார் ஆட்டோவை வழிமறிச்சாங்க. அப்போ என் கணவர் மருத்துவமனைக்குப் போவதா சொல்லி, மருத்துவ ரிப்போர்ட்டுகளைக் காண்பிக்க, ஆட்டோவை அனுமதிச்சாங்க. அதேபோல ஆட்டோ கரந்தைப் பகுதிக்குப் போனப்போ, அங்க பணியிலிருந்த பெண் போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் ஆட்டோவை நிறுத்தினார்.

`ஆட்டோல எங்க போறீங்க?'னு கேட்டார். என் கணவர், நான் கர்ப்பமா இருப்பதைக் கூறி, பரிசோதனைக்காகப் போவதைச் சொன்னார். ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் தன்கிட்ட இருந்த ஆவணங்களைக் காண்பித்தார். ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காத போலீஸ் எஸ்.ஐ, `இ-பாஸ் இல்லாம எப்படி வர்றீங்க?'னு கேட்டார். மருத்துவக் காரணங்களுக்காகப் போறதுக்கு இ-பாஸ் தேவையில்லனு அரசு சொல்லியிருக்கே'னு சொன்னோம். அதைக் காதுல வாங்காம, நாங்க மூணு பேரும் முகக்கவசம் சரியாக அணிந்திருந்தும், ஆட்டோ டிரைவர் சரியா மாஸ்க் போடலைன்னு சொல்லி ரூ.200 அபராதம் வசூலித்தார்.

போலீஸ் அபராதம் விதித்த ஆட்டோ டிரைவர்
போலீஸ் அபராதம் விதித்த ஆட்டோ டிரைவர்

அபராதம் கட்டவில்லைன்னா ஆட்டோவை பறிமுதல் செய்துவிடுவதாவும் எச்சரித்தார். அந்த ஆட்டோ டிரைவர் எங்களுக்காகத்தானே வந்தார்னு, அவருக்காக நாங்க அந்த ரூ.200 கட்டினோம். அதுக்கான ரசீதைக் கொடுத்தார். நாங்க மருத்துவமனைக்குப் போனோம்.

பெண் போலீஸ் ஒருத்தரே, கர்ப்பிணினு சொல்லியும் நாங்க பயணம் செய்றதோட நோக்கத்தைப் புரிஞ்சுக்காம அபராதம் வசூலிச்சது வேதனையா இருக்கு'' என்றார்.

ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜ் கூறுகையில், ``அரசு அறிவித்துள்ள ஊரடங்கை நாங்க மதிக்கிறோம். கொரோனா நேரத்துல மருத்துவமனைக்குப் போறதுக்காகப் பலரும் கூப்பிடும்போது, அதைத் தவிர்க்க முடியாம, கொரோனா ஆபத்துக்கு மத்தியிலதான் ஆட்டோ ஓட்டுறோம். ஆனா, கர்ப்பிணி பெண்ணை அழைச்சுட்டு வந்த எனக்கு, மாஸ்க் சரியா போடலைன்னு ஒரு காரணம் சொல்லி அபராதம் விதிச்சதுடன், கடுமையாவும் நடந்துகிட்டாங்க. இனி யாராச்சும் ஆஸ்பத்திரிக்குப் போகணும்னு கூப்பிட்டாக்கூட யோசிக்கிற நிலையை போலீஸ் உருவாக்கிட்டாங்க'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு