Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: `இனி நாங்க எங்க போறது?' - கைவிட்ட பெற்றோர், தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை

தற்கொலைக்கு முயன்ற அண்ணன் தங்கை
தற்கொலைக்கு முயன்ற அண்ணன் தங்கை

இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணனும் தங்கையும், பிரிந்து வாழ்ந்த தங்களின் பெற்றோர் தங்களை கைவிட்டதால் இருக்க இடமும், அரவணைக்க யாரும் இல்லாமல் நிற்கதியாயினர். அதனால் மனம் உடைந்த அவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள கரந்தை சறுக்கை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு கரண்ராஜ் என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். கனகராஜுக்கும் காந்திமதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று கடந்த 15 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிரிந்த நிலையில் காந்திமதி தனது இரண்டு பிள்ளைகளுடன் திருவையாறு அல்லூர் அருகே உள்ள தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சிகிச்சையில் இந்துமதி
சிகிச்சையில் இந்துமதி

கூலி வேலைக்குச் சென்று கரண்ராஜ், இந்துமதியை வளர்த்து வந்துள்ளார் காந்திமதி. தற்போது 18 வயதாகும் கரண்ராஜ் பெயின்டிங் வேலை செய்துவர, இந்துமதி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் காந்திமதியின் தாய் வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காந்திமதி, `இதுவரை உங்களை காப்பாற்றி வளர்த்து ஆளாக்கிட்டேன். இப்ப எனக்கு உடம்பும் சரியில்ல, உடம்புல தெம்பும் இல்ல. இனி உங்க அப்பா வீட்டுக்குப் போய் பொழச்சுங்கங்க. அப்பப்ப வந்து நானும் பார்த்துக்கிறேன்' எனக் கூறி பிள்ளைகளை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இருவரும் கரந்தைக்கு வந்து தங்கள் அப்பா கனகராஜின் வீட்டில் தங்கியுள்ளனர். வெளியூர் சென்றிருந்த கனகராஜ் வீட்டிற்கு வந்ததும், `இவ்வளவு நாள் எங்கே போனீங்க? இப்ப ஏன் வந்தீங்க? சொத்துக்காக உங்களை அனுப்பி வெச்சாளா உங்கம்மா?' என்று கேட்டு சத்தம் போட்டதுடன், `என்னால பார்த்துக்க முடியாது, நீங்க இங்க தங்கவும் கூடாது' என்று அவர்களை விரட்டியுள்ளார்.

இளமையில் வறுமை என்பதே பெரும் கொடுமை. அதுவும் பெற்றோரும் கைவிட்ட நிலையில், இருக்க இடம் இல்லாமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அண்ணனும் தங்கையும் நிற்கதியாய் நின்றுள்ளனர். `அம்மாகிட்டயும் போக முடியாது, அப்பாவும் அடிச்சு விரட்டிட்டார். இனி நாம எங்க போவோம்...' எனத் தன் அண்ணனின் கைகளை பற்றிக்கொண்டு கதறியுள்ளார் இந்துமதி.

`நம்மை அரவணைக்க யாரும் இல்ல. இதுவரை எல்லா கஷ்டத்தையும் கடந்து அம்மா நம்மள கவனிச்சுக்கிட்டாங்க. இனி அவங்களையும் தொந்தரவு செய்ய வேண்டாம். எந்த பிரச்னையும் இல்லாத இடத்துக்குப் போய்டுவோம்' எனக் கண்களில் கண்ணீர் வழிய கூறியுள்ளார் இந்துமதி. பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த 6-ம் தேதி இரவு முயன்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து இருவரும் மயங்கி கீழே சரிந்துள்ளனர்.

வாழவேண்டிய வயதில் சாவைத் தேடிச் சென்றவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அங்கேயே கிடந்துள்ளனர். அவ்வழியாகச் சென்ற ஒருவர் அவர்களைப் பார்த்து பதறி, போலீஸுக்கு தகவல் கொடுத்து, ஆம்புலன்ஸையும் வரவழைத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர்களை அனுப்பிவைத்தார். அங்கு காப்பாற்றப்பட்ட அண்ணன், தங்கைக்கு சிகிச்சை தொடர்கிறது. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கரண்ராஜிடம் பேசினோம். ``அப்பாவும் அம்மாவும் நாங்க சின்ன வயசா இருக்கும்போதே பிரிஞ்சுட்டாங்க. அம்மாதான் எங்களை வளர்த்து ஆளாக்கினாங்க. இப்ப அம்மாவுக்கு உடம்புல பிரஷர் உள்ளிட்ட பல பிரச்னைகள் இருக்கு. அதனால எங்களை அப்பாவோட இருந்துக்கச் சொல்லி அனுப்பி வெச்சாங்க. அம்மாவும், அப்பாவும் ஒண்ணா இருக்கும்போது கட்டிய சின்ன வீட்லதான் நாங்க வந்து தங்கியிருந்தோம். வெளியூர் போயிருந்த அப்பா, முதல்ல எதுவும் சொல்லல.

நாங்க வீட்டை பூட்டிட்டு ஓட்டுப் போட போயிருந்தோம். திரும்பி வந்து பார்த்தா, இன்னொரு பூட்டு போட்டிருந்தாங்க. அப்பா ஏன் இப்படி செஞ்சாங்கனு நெனச்சிக்கிட்டு வெளியே நிற்கும்போதே போலீஸ் வந்தது. `உங்க அப்பா உங்க மேல புகார் கொடுத்திருக்கார், நீங்க இங்க இருக்க முடியாது'னு சொல்லி எங்ககிட்ட எழுதி வாங்கிக்கிட்டு விரட்டினாங்க. எங்ககிட்ட ரொம்ப கறாரா நடந்துக்கிட்டாங்க.

கரண்ராஜ்
கரண்ராஜ்

எங்க உறவினர்களின் தூண்டுதலாலதான் அப்பா புகார் கொடுத்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. எங்களுக்கு 18 வயசாகிடுச்சு. வீடு இருக்கும் இடம் எங்க தாத்தா சொத்து. அந்த இடத்துல எங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா இதை எதையுமே விசாரிக்காம போலீஸ் எங்களை அனுப்புவதிலேயே குறியா இருந்தாங்க.

பெற்றோரும் கைவிட்டுட்டாங்க. பாதுகாப்பு தர வேண்டிய சட்டமும் எங்களுக்கான நீதியை தரலை. நிற்கதியா நின்ன நாங்க, நாய் மாதிரி தெருவில் சுற்றினோம். `இருக்குறதுக்கு இடம் கொடுத்தா போதும், வேல செஞ்சு சாப்பிட்டுக்குவோம். எங்களை நாங்களே பாத்துக்குவோம்'னு சொல்லியும் யார் மனசும் இறங்கல. இந்தச் சூழல்ல எப்படி எங்களால வாழ முடியும்? அதான் அந்த விரக்தியில உயிரை விட முடிவெடுத்தோம்.

இந்துமதி
இந்துமதி

எங்க நல்ல நேரம், அந்த வழியா போன அண்ணன் ஒருத்தர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உதவியுடன் எங்களை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தார். விஷயத்தை கேள்விப்பட்ட எங்கம்மா உடனே ஓடியாந்துட்டாங்க. `இதுக்காகவா உங்களை கஷ்டப்பட்டு வளர்த்தேன்...'னு அழுதாங்க.

`நீயும் அனுப்பிட்ட, அப்பாவும் ஏத்துக்கல. நாங்க எங்க போவோம்? வேற வழி தெரியல, இந்த முடிவை எடுத்துட்டோம்'னு சொன்னேன்.

இப்ப நாங்க பொழச்சுட்டோம். ஆனா அப்பா வீட்டுல இருக்கறதுக்கான ஏற்பாடு செஞ்சாதான் எங்களால வாழ முடியும். அதை அதிகாரிகள் செஞ்சு கொடுத்தா போதும், யாருக்கும் தொந்தரவு தராம வாழ்ந்திடுவோம்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு