Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: `நந்தினிய குழந்தைபோல பாத்துக்குறோம்; உதவுங்க!' - வைரல் வீடியோ பெண்ணின் சோக பின்னணி

போலீஸிடம் வாக்குவாதம் செய்யும் இளம்பெண்
போலீஸிடம் வாக்குவாதம் செய்யும் இளம்பெண்

தஞ்சாவூர் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்தப் பெண்ணை போலீஸாரும் கைது செய்த நிலையில், அவர் மனநலம் பாக்திக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் வந்ததுடன் போலீஸ் மற்றும் கலெக்டரை தகாத முறையில் பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்தப் பெண்ணை போலீஸாரும் கைது செய்த நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

இளம்பெண் நந்தினி
இளம்பெண் நந்தினி

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகப் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்களா என்பதை போலீஸார் கண்காணித்து வருவதுடன் மாஸ்க் அணியாமல் செல்வோரிடம் ரூ. 200 அபராதம் வசூல்செய்து வருகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரே கடந்த வியாழக்கிழமை போலீஸார், பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்கிறார்களா எனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இளம் பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றார். அவரை நிறுத்திய போலீஸ், ஏன் மாஸ்க் போடவில்லை எனக் கேட்டதுடன் ரூ. 200 அபராதம் செலுத்த வேண்டும் எனக் கூறினர். இதையடுத்து அந்த இளம்பெண், ``எல்லாரும் உழைக்கிறவங்கதான். இத்தனோண்டு மாஸ்க்கு 200 ரூபாய் கேட்குறீங்களே... அசிங்கமா தெரியல உங்களுக்கு?" எனக் கேட்க, பணியிலிருந்த போலீஸ், `கலெக்டர்கிட்ட கேளும்மா' எனச் சொல்கிறார்.

இதையடுத்து அந்த இளம்பெண், `கலெக்டர வரச்சொல்லு' எனத் தகாத வார்த்தைகளில் பேசினார். இதனை ஒரு போலீஸ் செல்போனில் வீடியோ எடுக்க, `என்ன ஃபேஸ்புக்ல போடுறியா? போடு. ஷேர் பண்ணுவோமா?' என ஒருமையில் பேசியதுடன், `புடிச்சு உள்ளபோடப் போறியா? போடு. நானும் ரவுடிதான். எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல' என்றார். இளம்பெண் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வீடியோ நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்தப் பெண் கலெக்டர் மற்றும் போலீஸ் ஆகியோரை ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பெயரில், மருத்துவக்கல்லுாரி காவல் நிலைய போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் அந்த இளம்பெண், தஞ்சாவூர் மானோஜிபட்டி, மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த நந்தினி (26) என்பது தெரியவந்தது. பின்னர் நந்தினி மீது அரசு உத்தரவை மதிக்காமல் நடத்தல், அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பொது இடங்களில ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து நந்தினி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரின் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து போலீஸிடம் பேசினர். அப்போது, ``நந்தினி மனநலம் பாதிக்கப்பட்டவர், அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வருகிறார், அதனால்தான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டுள்ளார், அவரை விடுதலை செய்யுங்கள், அவர் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யுங்கள்" எனக் கோரினர். அப்போதும் நந்தினி போலீஸாரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இளம் பெண் நந்தினி
இளம் பெண் நந்தினி

போலீஸ் தரப்பிலோ, ``இந்த விவகாரம் கலெக்டர், எஸ்.பியின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, பெரிய மனசு செய்து விட்டால்தான் உண்டு" என்று கூறியுள்ளனர். இதையடுத்து நந்தினியின் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொடுத்துள்ளார். அவரும், பார்க்கலாம் எனக் கூறி அனுப்பியுள்ளார். இந்நிலையில், நேற்று எழுதி வாங்கிக்கொண்டு நந்தினியை போலீஸ் பெயிலில் விடுவித்துள்ளது. இந்த சம்பவத்தால் நந்தினியின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

அத்துடன் நந்தினியின் சிகிச்சைக்காகவும் அலைந்து வருகின்றனர். இது குறித்து நந்தினியின் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசினோம்.

``நந்தினி கடந்த மூணு வருஷமா பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற மனநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுக்காக சிகிச்சை எடுத்துட்டு வர்றாங்க. தொடர்ந்து மாத்திரை சாப்பிடுறாங்க. நந்தினி மனநோய் தீவிரமாகும்போது, `நான்தான் டாப்'ங்கிற மனநிலையில இருப்பாங்க. நார்மல் ஆனவுடனே அப்படியே டௌன் ஆகிடுவாங்க. எப்பவும் ஒரே மாதிரி இல்லாம, ஆவேசம், அமைதினு மாறி மாறி இருப்பாங்க. நந்தினி அப்பப்போ, தனக்குக் கீழதான் எல்லாம்னு இருப்பாங்க. இல்லைன்னா, என்னால எதுவுமே முடியாது, நான் எதுக்குமே லாயக்கில்லனு அமைதியாக இருந்துடுவாங்க.

போலீஸ்
போலீஸ்

ஒரு குழந்தை மாதிரிதான் நந்தினியை பார்த்துக்குறோம். கொஞ்ச நாளா நந்தினி சரியா மாத்திரை எடுத்துக்கலை. அதனாலதான் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கு. இந்த ரெண்டு நாள்ல நாங்க பட்ட துயரத்துக்கு அளவே இல்ல. கண்ணுல எங்களுக்கு ரத்தக் கண்ணீரே வந்துடுச்சு. நந்தினி சார்புல நாங்க மன்னிப்புக் கேட்குறோம். பெரிய மனசு பண்ணி கலெக்டரும், எஸ்.பி சாரும் அவங்களை மன்னிச்சு, அவங்க மேல போட்டிருக்குற வழக்குகளை ரத்து செய்யணும். நந்தினியை அரசு ஹோம்ல வெச்சு சிகிச்சையளிக்கவும் உதவி செய்யணும். அப்படி செய்தா எங்க குடும்பமே நன்றி சொல்லும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு