Published:Updated:

`ஆதரவில்லாதவங்கனு யாரும் இருக்கக் கூடாது!' - அன்பை ஒருங்கிணைத்து இல்லம் ஆரம்பித்த பாக்கியலெட்சுமி

பாக்கியலெட்சுமி

''தினமும் என் வீட்டிலேயே சமைச்சு எடுத்துட்டுப் போய் 50 பேருக்கு மதிய சாப்பாடு கொடுக்குறேன். இந்நிலையிலதான், சாலையோரத்துல இருக்குற பாட்டி ஒருத்தவங்க, 'வெயில்லயும், மழையிலயும் கிடக்குற எங்களைப் போன்ற ஆளுங்கள ஒரு இடத்துல பாதுகாப்பா தங்க வை தாயி'னு கண்கள்ல தண்ணியோட கேட்டாங்க.''

`ஆதரவில்லாதவங்கனு யாரும் இருக்கக் கூடாது!' - அன்பை ஒருங்கிணைத்து இல்லம் ஆரம்பித்த பாக்கியலெட்சுமி

''தினமும் என் வீட்டிலேயே சமைச்சு எடுத்துட்டுப் போய் 50 பேருக்கு மதிய சாப்பாடு கொடுக்குறேன். இந்நிலையிலதான், சாலையோரத்துல இருக்குற பாட்டி ஒருத்தவங்க, 'வெயில்லயும், மழையிலயும் கிடக்குற எங்களைப் போன்ற ஆளுங்கள ஒரு இடத்துல பாதுகாப்பா தங்க வை தாயி'னு கண்கள்ல தண்ணியோட கேட்டாங்க.''

Published:Updated:
பாக்கியலெட்சுமி

பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணியில், பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவின்றி சாலையோரத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியலெட்சுமி சாப்பாடு கொடுத்து வந்தார். 'வெயில்லயும், மழையிலயும் ரோட்டுல கிடக்குற எங்கள ஒரு எடத்துல தங்க வச்சு காப்பாத்துவியா தாயீ...' என்று அவரிடம் ஒரு பாட்டி கேட்ட வலி நிறைந்த கோரிக்கை, அரசு உதவியுடன் ஆதரவற்ற முதியோர்களை அவரவணைத்து காக்கும் இல்லத்தை இன்று அவரை தொடங்கவைத்திருக்கிறது.

ஆதரவற்ற இல்லத்தை திறந்து வைக்கும் எம்.எல்.ஏ
ஆதரவற்ற இல்லத்தை திறந்து வைக்கும் எம்.எல்.ஏ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. Msc., BEd., DPTT., DCA பட்டதாரி. விபத்து ஒன்றில் இவரின் கணவர் நீலகண்டன் உயிரிழந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆறாம் வகுப்புப் படிக்கும் மகள் சாம்பவி, வயதான தன் அம்மா செண்பகவள்ளியுடன் வசித்து வருகிறார் பாக்கியலெட்சுமி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஆறு வயசுல என் அப்பாவை இழந்தேன். வாழ வேண்டிய இளம் வயசில் கணவரையும் இழந்துட்டேன். அவர் இருந்த வரைக்கும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அவர் இறந்ததுக்கு அப்புறம் பல போராட்டங்களை சந்திக்க வெச்சது வாழ்க்கை. இப்போ என் கஷ்டத்தை தாண்டி, சமுதாயத்துல கஷ்டப்படுறவங்களுக்கும் ஆதரவா இருக்கக்கூடிய அளவுக்கு என் வாழ்க்கையை மாத்திக்கிட்டேன்'' என்கிறார் பாக்கியலெட்சுமி.

பேராவூரணியை சேர்ந்த பாக்கியலெட்சுமி
பேராவூரணியை சேர்ந்த பாக்கியலெட்சுமி

கணவர் மறைவுக்குப் பிறகு, அவரது தென்னந்தோப்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்யத் தொடங்கினார் பாக்கியலெட்சுமி. ஒவ்வொரு வருடமும் கணவருடைய நினைவு நாள், மற்றும் தன் மனசுக்கு ஆறுதல் தேவைப்படும் போதேல்லாம் ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களின் பசி போக்கி அவர்களுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அடிக்கு மேல அடினு சொல்ற மாதிரி, கஜா புயலால எங்க வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததுல நிலைகுலைந்து போனோம். ஆனாலும் துவண்டு முடங்கிடாம, புயல்ல இருந்து தப்பிச்சு நின்ற மிச்சம் மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிரா உளுந்து, கீரை சாகுபடி செஞ்சு வருமானத்துக்கு வழிபண்ணினேன்'' என்றவர், சேவைகள் பக்கம் திரும்பியது பற்றி தொடர்ந்தார்.

ஆதரவற்ற முதியோர் இல்லம் திறப்பு விழா
ஆதரவற்ற முதியோர் இல்லம் திறப்பு விழா

''மனசுக்குள்ள ஆயிரம் வலிகள் இருக்கும். அதையெல்லாம் வெளிக்காட்டாம, முகத்துல சிரிப்பை வெச்சுக்கிட்டு ஒவ்வொரு நாளையும் கடந்தேன். கஜா புயல் நிவாரண நிதியா கிடைச்ச ஒரு லட்சத்தில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழை மாணவிகள் பயன்பெறும் வகையில வாலி பால் மைதானம் அமைத்துக் கொடுத்தேன்.

கொரோனா லாக்டெளன் நேரத்தில் பேருந்து நிலையம், சாலையோரம்னு பல இடங்கள்ல உணவு கிடைக்காம தவிச்ச ஆதரவற்ற முதியோர்களுக்கு தேடிச் சென்று மதிய உணவு கொடுத்தேன். அப்போ முதியவர் ஒருவர், 'எல்லா நாளும் எங்க பசி தீர சோறு தருவியாம்மா?'னு கேட்டார். 'தர்றேன்ய்யா...' சொன்னேன். இப்போ வரை சாப்பாடு கொடுத்துட்டு இருக்கேன்.

பாக்கியலெட்சுமி
பாக்கியலெட்சுமி

தினமும் என் வீட்டிலேயே சமைச்சு எடுத்துட்டுப் போய் ஆதரவற்ற 50 பேருக்கு மதிய சாப்பாடு கொடுக்குறேன். இந்நிலையிலதான், சாலையோரத்துல இருக்குற பாட்டி ஒருத்தவங்க, 'அஞ்சு புள்ளை பெத்து வளத்தேன், ஒரு புள்ளையும் என்ன கவனிக்கல, நீ ஒரு நாள் கூட விடாம சாப்பாடு தர்ற. வெயில்லயும், மழையிலயும் கிடக்குற எங்களைப் போன்ற ஆளுங்கள ஒரு இடத்துல பாதுகாப்பா தங்க வை தாயி'னு கண்கள்ல தண்ணியோட கேட்டாங்க.

பாட்டி கேட்டது, என்னை ரொம்ப தொந்தரவு பண்ணுச்சு. ஏற்கெனவே ஒத்தையாளா போராடிக்கிட்டு இருக்குற என்னால அதை எப்படி செய்ய முடியும்னு யோசிச்சேன். ஆனாலும் பின்வாங்கல. சமூக நலத்துறை மூலமா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை அணுகி உதவி கேட்டேன்.

எம்.எல்.ஏ அசோக்குமார் மற்றும் அதிகாரிகள்
எம்.எல்.ஏ அசோக்குமார் மற்றும் அதிகாரிகள்

ஆதரவில்லாம பசி, பட்டினியோட சாலையில யாரும் கிடக்க வேண்டாமேனு சார்னு ஆட்சியர்கிட்ட கோரிக்கை வைக்க, அவர் உடனடியா அரசு சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம் தொடங்குவதற்காக முயற்சிகளை முன்னெடுத்தார். பேராவூரணியில் பயன்பாடு இல்லாம வீணாகிக் கொண்டிருந்த அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றை ஆதரவற்ற இல்லம் தொடங்குவதற்கு முறைப்படி கொடுத்தார்.

கட்டடத்தை சீரமைக்கவும், தண்ணீர் வசதிக்காக போர்வெல், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்யவும் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கி முதல் கட்ட பணிகளை முடித்து தந்திருக்கார். 'அன்பில் நாம் இல்லம்'னு அதுக்கு பேர் வெச்சோம். அன்னம் பகிர், அன்பை பகிர் என்ற பின்னொட்டோடு 'அன்பில் நாம் இல்லம்' இப்போ தொடங்கப்பட்டிருக்கு'' என்றவர்,

உணவு கொடுக்கும் பாக்கியலெட்சுமி
உணவு கொடுக்கும் பாக்கியலெட்சுமி

''பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், ஆர்.டி.ஓ பிரபாகரன், தாசில்தார் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள்னு பலரும் சேர்ந்து அன்பில் நாம் இல்லத்தை திறந்து வெச்சிருக்காங்க. எம்.எல்.ஏ அசோக்குமார், 'நம்ம பகுதியில ஆதரவுக்கு யாரும் இல்லைனு பேருந்து நிலையத்திலோ, ரோட்டோரத்திலோ யாரும் இல்லாத நிலையை பாக்கியலெட்சுமி உருவாக்குவாங்க. என்னோட பங்களிப்பா 30 கட்டில்கள் வாங்கித் தர்றேன். எல்லாத்துக்கும் மேல, பெத்து வளத்து ஆளாக்கின பெற்றோரை பிள்ளைங்க கைவிடாம அரவணைச்சு பாத்துக்கணும்'னு நிகழ்ச்சியில கண் கலங்கப் பேசினார்'' என்று சொல்லும்போது உணர்வுபூர்வமாகிறார் பாக்கியலெட்சுமி.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.டி.ஓ பிரபாகரன், 'பசியின் வலியை அறிஞ்சவங்கதான் அடுத்தவங்க பசியைத் தீர்க்க முடியும். ஒரு பெண் தனி மனுஷியா இருந்து கிட்டதட்ட ஒரு வருஷம் ஆதரவற்றவங்களோட பசியை போக்கியிருக்கிறார். அடுத்த கட்டமா அவங்கள நிரந்தரமா அரவணைக்க ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கார். பாக்கியலெட்சுமிக்கு உறுதுணையா இருந்து அரசு சார்பில் 'அன்பில் நாம் இல்ல'த்துக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்' என்றார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தொடர்ந்து பேசிய பாக்கியலெட்சுமி, ''முதல் கட்டமா 30 பேர் வரை அன்பில் நாம் இல்லத்தின் மூலம் அரவணைக்க இருக்கோம். 100 பேர் வரை தங்கவைப்பதற்கான வசதியை விரிவுபடுத்தணும். சாப்பாடு கொடுத்த இந்த ஒரு வருஷத்துல, பிள்ளைகளால கைவிடப்பட்ட பெற்றோர் ஒவ்வொருத்தர்கிட்டயும் பல கண்ணீர் கதைகள் இருப்பதை தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னைக்கு சமூகத்துல நல்ல நிலையில இருக்குறவங்க கூட, தங்களோட பெற்றோரை கவனிக்காம கைவிடுறது பெருகி வருது. இன்னொரு பக்கம், அப்பா/அம்மா பாசம் கிடைக்கக் கொடுத்துவைக்காத என்னை போன்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்குத்தான் பெற்றோரின் அருமை புரியும். 'அன்பில் நாம் இல்லம்' தொடங்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து என் கனவிற்கு உயிர் கொடுத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு நன்றி.

பாக்கியலெட்சுமி
பாக்கியலெட்சுமி

அவர் இல்லைன்னா நிச்சயமா இது சாத்தியமாகியிருக்காது. ஆதரவில்லாம யாரும் இருக்கக் கூடாது என்பதே என் ஆசை. எங்க ஊரைச் சேர்ந்த பலரும் எனக்கு பக்கபலமா இருந்து கை கொடுக்குறதுதான் எனக்குப் பெரும் தெம்பா இருக்கு. ஒத்தையாளாக இருந்த என் பின்னாடி இப்ப பேராவூரணியே சேர்ந்து நிக்குது. ஆதரவற்ற முதியோர்கள் இல்லாத நிலையை உருவாக்கணும்'' என்றார்.

சேவை மனங்களும் கரங்களும் இணைந்து செயல்படட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism