Published:Updated:

தஞ்சாவூர்: தாய் உயிரிழந்ததால் மருத்துவர்களைத் தாக்கிய இளைஞர்; அரசு மருத்துவ மனையில் பரபரப்பு!

டாக்டர்கள் போராட்டம்
டாக்டர்கள் போராட்டம்

டாக்டர்கள் உயிரைக் கொல்லும் கொரோனா நோய்க்கு அஞ்சி தங்களை பாதுகாத்துக்கொண்டு பணி செய்வதா, அல்லது இதுபோன்ற தாக்குதலுக்கு அஞ்சி பணிசெய்வதா என்பதற்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரை பணயம் வைத்து டாக்டர்கள், செவிலியர்கள் பணி செய்து வரும் இந்தச் சூழலிலும், மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் தாக்கப்படும் துயர சம்வங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அந்த வகையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை நினைத்து பயப்படுவதா, இதுபோன்ற தாக்குதல்களுக்கு அஞ்சி வேலைபார்ப்பதா என மருத்துவர்கள் வேதனையுடன் புலம்பி வருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ம.அரவிந்த்

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல வார்டுகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் டாட்ஸ் வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹாலிக் அமீத் என்ற இளைஞரின் அம்மாவும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஹாலிக் அமீத், இன்று அதிகாலை 4.30 மணியளவில், `எங்க அம்மா சீரியஸா ஆனதுக்கு நீங்கதான் காரணம்' என அந்த வார்டில் பணியிலிருந்த சிறப்பு மருத்துவர், பயிற்சி மருத்துவர், செவிலியர் ஆகியோரை விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கினார். இதனால் அந்த வார்டில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதையடுத்து மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் பேசினோம்.

``கொரோனா நேரத்துல அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் உயிரை பணயம் வச்சு, குடும்பத்தை மறந்து, சந்தோஷங்களை மறந்து பணி செய்து வர்றோம். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக களத்துல போராடிட்டு இருக்கோம். இந்த நேரத்திலகூட எங்களை சங்கடப்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கு.

குறிப்பா, நோயாளிகளோட உறவினர்களால அரசு மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருது. எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வர்றோம். இந்நிலையில தஞ்சாவூரில் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரின் உறவினர் ஒருவர், `எங்க அம்மா சீரியஸாக நீங்கதான் காரணம்'னு சத்தம் போட்டுட்டு இருந்தார்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அப்போ செவிலியர் ஒருவர் மருந்துகள் வழங்கிட்டு இருந்தார். சிறப்பு மருத்துவர் மற்றும் பயிற்சி மருத்துவர், இளைஞரான அந்த உறவினர்கிட்ட, `உங்கம்மாவுக்கு தொற்று அதிகரிச்சிருக்கு'னு எடுத்துச் சொன்னாங்க. ஆனா டாக்டர்கள் சொன்னதை அவர் கேட்கலை. மேலும், அவங்களைப் பணி செய்யவும் விடாம அடிக்கத் தொடங்கினார். இதுல மூணு பேருமே ஓட, அந்த இளைஞர்கள் அவங்களைத் துரத்தித் துரத்தி தாக்கியிருக்கார்.

இதையடுத்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தோம். பின்னர் போலீஸார் ஹாலிக் அமீத்தை ஸ்டேஷன்ல உட்காரவெச்சாங்க. மருத்துவக் கல்லூரி டீன் ரவிக்குமாரிடமும் இது தொடர்பா முறையிடப்பட்டுள்ளது. கொரோனா பரவி வர்ற இந்தக் கடினமான சூழலை எதிர்கொண்டு பணி செய்து வரும் நிலையில, இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல்கள் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துது. இதுபோன்ற சம்பவங்களை நிர்வாகமே மூடிமறைப்பதும் வாடிக்கையாகிடுச்சு.

டாக்டர்கள் உயிரைக் கொல்லும் கொரோனா நோய்க்கு அஞ்சி தங்களைப் பாதுகாத்துக்கொண்டு பணி செய்வதா, அல்லது இதுபோன்ற தாக்குதலுக்கு அஞ்சி பணி செய்ய வேண்டுமானு இந்த அரசு பதில் சொல்லியே ஆகணும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருது. தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பா இதை அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கோம்.

டாக்டர்கள் போராட்டம்
டாக்டர்கள் போராட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆகியோர் இதில் தனி கவனம் செலுத்தி மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தணும். இதுபோன்ற தாக்குதல்ல ஈடுபடுவோர் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதுடன், அவங்க மீது உரிய நடவடிக்கையும் எடுக்கணும். இனி இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது'' என்றனர்.

ஹாலிக் அமீதின் தாயார் கொரோனா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார். சரியான சிகிச்சை அளிக்காததால்தான் தன் அம்மா இறந்ததாக எண்ணி வேதனையடைந்த ஹாலிக், அதனால் ஏற்பட்ட மனக் குமுறலில் டாக்டர்களைத் தாக்கியிருக்கிறார். பின்னர் டீன், நிர்வாக அதிகாரி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு ஹாலிக் விடுவிக்கப்பட்டதாக இளைஞரின் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு