Published:Updated:

`நான் மாரியம்மா வந்துருக்கேன்...!'- விசாரணைக்கு சென்ற வட்டாட்சியரால் திகைத்த மக்கள்

''நான் மாரியம்மா வந்துருக்கேன். மஞ்ச பால் கொடு'' என்று குரல் எழுப்பிய படி தொடர்ந்து சாமி ஆடினார். இதனை கண்ட அங்கு கூடியிருந்த பெண்கள் குழவை சத்தம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கிருந்த சில பெண்களும் அருள் வந்து சாமி ஆடினர்.

வட்டாட்சியர் முத்துக்குமார்
வட்டாட்சியர் முத்துக்குமார் ( உ.பாண்டி )

நீதிமன்ற உத்தரவுப்படி அம்மன் கோயிலை திறக்க சென்ற வட்டாட்சியர் திடீரென சாமி வந்து ஆடியதால் அங்கு கூடியிருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

நீதி மன்ற உத்தரவு
நீதி மன்ற உத்தரவு
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாலிநோக்கம் அருகே உள்ளது மேலக்கிடாரம் கிராமம். இந்த கிராமத்தில் உய்யவந்த அம்மன் மற்றும் திருவடி அய்யனார் கோயில்கள் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிலை கிடையாது. பீடம் மட்டுமே உண்டு. உய்யவந்தன் அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழாவும், அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக இக்கோயிலில் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த கோயிலில் முதலில் விபூதி வாங்கும் உரிமை யாருக்கு என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவினை மேற்கொள்வதற்காக கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார் கடந்த சனிக்கிழமை போலீஸாருடன் உய்யவந்த அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

''நான் மாரியம்மா வந்துருக்கேன். மஞ்ச பால் கொடு''
வட்டாட்சியர் முத்துக்குமார்

விசாரணைக்கு சென்ற வட்டாட்சியர் முத்துக்குமார் அம்மன் கோயிலினை திறக்க முயன்ற போது திடீரென அருள் வந்து ஆடினார். ''நான் மாரியம்மா வந்துருக்கேன்... மஞ்ச பால் கொடு'' என்று குரல் எழுப்பியபடி தொடர்ந்து சாமி ஆடினார். இதனை கண்ட அங்கு கூடியிருந்த பெண்கள் குழவை சத்தம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கிருந்த சில பெண்களும் அருள் வந்து சாமி ஆடினர்.

இதனை தொடர்ந்து கோயிலின் முன் திரண்டிருந்தவர்கள் ''சாமி என்ன சொல்லுதுன்னு கேளுங்கப்பா' என்றபடி மஞ்சள் கலந்த பாலினை வட்டாட்சியரிடம் கொடுத்தனர். அதனை கோயிலுக்குள் தெளித்த வட்டாட்சியர் முத்துக்குமார் சாந்தமடைந்தார்.

வட்டாட்சியர் முத்துக்குமார்
வட்டாட்சியர் முத்துக்குமார்
உ.பாண்டி

இதன் பின் கோயில் திறக்கப்பட்டு உள்ளிருந்த பீடத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் திருவிழா கொண்டாடுவதில் ஏற்பட்ட பிரச்னையை விசாரிக்க வந்த வட்டாட்சியரே அருள் வந்து ஆடியது கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. வட்டாட்சியர் முத்துக்குமார் தனது சொந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார் என்பதால் இந்த கோயிலுக்கு வந்த நிலையில் அருள் வந்து ஆடியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.