Published:Updated:

சர்க்கஸ் தொழிலை விட்டு பள்ளியைத் தேடிவரும் பிள்ளைகள்..! - சாதித்த`சாப்ட்வேர்’ பெண் #MyVikatan

விகடன் வாசகர்

``பள்ளிகளில் பீஸ் கட்ட முடியாமல் வகுப்புகளில் பெயர் வாசிக்கப்படும்போது மாணவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை..’’

வானதி
வானதி ( Thats My Child )

``நான் பட்ட கஷ்டம் மாதிரி இனி எந்தக் குழந்தையும் பணமில்லாமல் பள்ளிப் படிப்புக்கு சிரமப்படக் கூடாது. குறிப்பா அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை கைதூக்கி விடுறதுதான் என்னோட முதல் லட்சியம்’’ என்று உற்சாகமாய்ப் பேசத் தொடங்குகிறார் வானதி பாலசுப்பிரமணியன்.

வானதி
வானதி
Thats My Child

இவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்கு அருகில் உள்ள பழங்குளம் எனும் சிற்றூரை பூர்வீகமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே பெற்றோர் கோவைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். அங்கேதான் இவருடைய பள்ளிக் கல்வியும் தொடங்கி இருக்கிறது. ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்புச் செல்ல இருந்த நிலையில், கல்விக் கட்டணமாக ஐநூறு ரூபாய் கட்ட வேண்டும் என பள்ளி நிர்வாகம் சர்குலர் அனுப்பி இருக்கிறது. அந்தத் தொகையை மொத்தமாக கட்ட முடியாத சூழல் வானதியின் குடும்பத்துக்கு மகளின் படிப்பை நிறுத்துவதைத் தவிர அவருடைய பெற்றோருக்கு வேறுவழி தெரியவில்லை. இதுவரை பள்ளியில் பர்ஸ்ட் ரேங்க் பெற்று வந்த வானதியின் படிப்புக்கு அதுவே முற்றுப் புள்ளி என்ற நிலைக்கு வந்துவிட்டனர் அவருடைய பெற்றோர்.

அப்போதுதான் வானதியுடன் ஏழாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்த அவருடைய நெருக்கமான தோழி ஒருவர் அந்தக் கல்விக் கட்டணத்தை செலுத்தி இவருடைய கல்விப் பயணத்தை தொடர வைத்திருக்கிறார். அப்படி தொடரப்பட்ட வானதியின் கல்விப் பயணம் பி.டெக், எம்.டெக் என கணினித்துறையில் நீண்டிருக்கிறது. முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் அலங்கரிக்க வைத்திருக்கிறது. அவர் பயணம் செய்யாத ஐரோப்பிய நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு பணி ஆளுமையை தந்திருக்கிறது. SAP என்ற கணினி தொழில்நுட்பத்தில் ஜி.டி.எஸ்.(Global Trade services) என்ற மிகவும் சிக்கலான நுண்ணிய கணினி தொழில்நுட்பப் பிரிவில் உலகம் முழுவதுமே மிகக்குறைந்த அளவிலான நிபுணத்துவம் பெற்றுள்ளவர்கள் உள்ளனர். அதிலும் பெண்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். அவர்களில் வானதியும் ஒருவர்.

சிறுவயதில் கல்விக்காக அவர் பட்ட பணக் கஷ்டங்கள் மனதை விட்டு அகலவே இல்லை. படிப்பதற்கு பண ரீதியாகச் சிரமப்படும் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற வேட்கை மட்டும் தீரவே இல்லை. தான் பெற்ற முதல் மாதச் சம்பளத்திலிருந்து ஏதாவது ஒருவகையில் யாராவது ஒரு மாணவரின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் வானதி.

வானதி
வானதி
Thats my child

கடைசியில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஸ்வீடனில் ஒரு முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் மிகப்பெரிய சம்பளத்தில் இருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு அரசுப் பள்ளிக் குழந்தைகளின் அதுவும் மிகவும் மோசமான பொருளாதாரச் சூழலில் உள்ள பெண் பிள்ளைகளின் நலனுக்காக ‘அவர்கள் என்னுடைய குழந்தைகள்’ என்ற தாய்மை உணர்வுடன் `தட்ஸ் மை சைல்ட்’என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார் வானதி. அவருடைய அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றிக் கேட்டபோது..

``பணம் இல்லைங்கிற சூழலில் எந்தக் குழந்தையின் கல்வியும் தடைபடக் கூடாது. அந்த எண்ணம் ஏற்படக் காரணம் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்தான். அந்த வலி நிறைந்த ஒற்றைப் புள்ளிதான் என்னை இந்த அமைப்பை தோற்றுவிக்க காரணமாய் இருந்தது. அதற்காக என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் 2014-ம் ஆண்டில் முறைப்படி பதிவு செய்யப்பெற்ற தன்னார்வ அமைப்புதான் எங்களுடைய ‘தட்ஸ் மை சைல்ட்”

நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு குழந்தையின் கல்வி பொருளாதார ரீதியாக தடைபடும்போது அதை உடைக்கவும், தளர்த்தவும் ஒரு உதவிக்கரம் நீளும்போது அந்தக் குழந்தையின் இலக்கு உச்சி தொடும் என்பதில் ஐயமில்லை. அதற்கு நானே உயிருள்ள சாட்சி.

பள்ளிகளில் பீஸ் கட்ட முடியாமல் வகுப்புகளில் பெயர் வாசிக்கப்படும்போதும், சில பள்ளிகளில் வகுப்புகளுக்கு வெளியே நிறுத்துப்படும்போதும் மாணவர்களின் மனநிலை அதிலும் பெண் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. அது மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

3 கோடி வருமானம்; ப்ளஸ் டூ படிப்பு; அமெரிக்காவில் ஷோரூம்... சகீலா ஃபரூக்கின் வெற்றிக்கதை

முதலில் அதிலிருந்து அவர்கள் விடுபட்டால்தான் அவர்களால் படிக்க முடியும். அதனால் பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். அதற்காக எங்கள் அமைப்பில் `கனவைத் தொடு..’ என்ற திட்டத்தைத் தொடங்கி தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து கல்விக் கட்டணம் செலுத்தி வருகிறோம்.

ஆனால், பணம் மட்டுமே அவர்களின் கல்வி வாழ்க்கையை முழுமையாக்கிவிடுமா? என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதால் எனக்கும் அந்த மாணவர்களின் கல்வி வாழ்க்கைக்கும் இடையே ஒரு பெரிய நெருக்கம் இருப்பதுபோல் தெரியவில்லை. ஏதோ ஒரு இடைவெளியை உணர ஆரம்பித்தேன். அவர்களை முழுமையாகச் செதுக்கினால் மட்டுமே சிற்பங்கள் ஆவார்கள் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தேன். அடுத்தடுத்து சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிடமிருந்து சில உதவிக் கோரிக்கைகள் வந்தன. செய்தும் கொடுத்தோம். ஆனால், இதுமாதிரியான பொருள் மற்றும் நிதி உதவிகள் மட்டுமே இந்த மாணவர்களின் வாழ்க்கைக்கு முழு நிவாரணத்தை தந்துவிடாது என்பதை எங்கள் அமைப்பினர் புரிந்துகொண்டோம். பள்ளிக் கட்டடத்துக்கு வெறும் சுண்ணாம்பு பூசினால் மட்டும் போதாது. அங்குள்ள மாணவர்களின் வாழ்க்கையில் வண்ணம் பூச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.

ஆண், பெண் என் இரு தரப்பு மாணவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். இதில் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதிலும் பெற்றோர் இருவரும் இல்லாத அல்லது தாய் அல்லது தந்தையுடன் மட்டும் வளர்ப்பில் உள்ள ஏழைப் பெண் குழந்தைகளை சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து உதவி வருகிறோம்.

எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் பலரும் முன்னணி ஐ.டி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் அந்தப் பணிகளுக்கிடையேதான் இதையும் செய்துவருகிறார்கள்.
வானதி

எங்கள் திட்டங்கள் செயல்படும் சென்னை, திருவண்ணாமலை, கோவை, பொள்ளாச்சி, திருநெல்வேலி பகுதி பள்ளிகளை எங்கள் பொறுப்புமிக்க தன்னார்வ ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையானவற்றை செய்துவருகின்றனர். இதை தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பொறுப்பும் சேவை மனப்பான்மையும் கொண்ட தன்னார்வலர்கள் கிடைத்தால் மிகப்பெரிய பலமாக இருக்கும்.

தற்போது எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் பலரும் முன்னணி ஐ.டி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களின் அந்தப் பணிகளுக்கிடையேதான் இதையும் செய்துவருகிறார்கள். சிங்கப்பூர் மற்றும் பல்வேறு நாடுகளில் பல ஆண்டுகள் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து தற்போது தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் மற்றும் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டிருக்கும் என் சிறுவயது தோழி கௌரி, ஸ்வீடனில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கிருஷ்ணா, முன்னணி சிசிடிவி கேமரா தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராய் பணிபுரியும் ரமேஷ், கேரளாவில் உள்ள என்.ஐ.டி-யில் பி.எச்டி. படித்து வரும் அபிநயா மற்றும் பிரணவ் ஆகியோர்தான் எங்களின் இந்த அமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். எங்களுடைய பணிகளைச் செயல்படுத்த என்னுடைய சேமிப்பு, நண்பர்களின் நிதி உதவி, அந்த நண்பர்களின் நண்பர்கள் கொடுக்கும் நன்கொடை இதை வைத்துத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். எனவே, எங்களின் உண்மையான சேவை முகம் காண்பவர்கள் இந்தப் பயணத்துக்குத் தேவையான நிதி உதவி அளித்து கைகோத்தால் இந்தப் பணி தொய்வின்றி செயல்பட மிகவும் பக்கபலமாக இருக்கும்.

பள்ளி மாணவர்களுடன்..
பள்ளி மாணவர்களுடன்..

கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறுவிதமான சூழல்களில் பணியாற்றி இருக்கிறோம். ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். ஒவ்வொரு விதமான பின்னணிகள். பொள்ளாச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் மிகவும் உள்ளடங்கிய சிஞ்சுவாடி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடமிருந்து எங்களுக்குத் தொடர்ந்து அழைப்புகள். எங்களை பள்ளிக்கு நேரடியாக வரச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார். என்ன தேவை சொல்லுங்கள் எனக்கேட்டோம். அவரோ நீங்கள் நேரடியாக வர வேண்டும் என்றார்.

அங்கு ஒரு மிகப்பெரிய சவால் எங்களுக்குக் காத்திருந்தது. அங்கு பள்ளியில் சேர்ந்துள்ள பிள்ளைகள் எல்லாம் பெரும்பாலும் சர்க்கஸ் தொழில் செய்யும் குடும்பத்துப் பிள்ளைகள். அடுத்து நாடோடி சமூகப் பிள்ளைகள். அவர்களைப் பள்ளிக்கு வரவைக்க வேண்டும். ஏதாவது செய்யுங்கள். இங்கு அட்மிஷன் போட்ட எம் பிள்ளைகள் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறங்களில் சர்க்கஸ் நடத்தியும், பிச்சை எடுத்தும் வாழ்வதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என அப்பள்ளி தலைமை ஆசிரியை கண்ணீர் வடித்தார். இந்தக் குழந்தைகள்தான் அந்தக் குடும்பங்களுக்கு பொருளீட்டும் நபர்களாக இருந்தார்கள். எனவே, அவர்களை அதை எல்லாம் தூக்கித் தூர எறிந்துவிட்டு பள்ளிக்கு அனுப்புங்கள் என்று பெற்றோர்களை கன்வின்ஸ் செய்து பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது.

பள்ளி மாணவர்களுடன்..
பள்ளி மாணவர்களுடன்..

அவர்கள் உடுத்துவதற்குகூட நல்ல உடைகள் இல்லை. முதலில் இதைச் சரிசெய்தோம். எல்லோருக்கும் புத்தாடைகள் வழங்கினோம். முதன்முதலாக புத்தாடைகள் கண்டு அவர்கள் சந்தோஷமானார்கள். உடல் சுத்தத்தின் அவசியத்தை உணர வைத்து அவர்களை அழகாக்கினோம். உளவியல் ரீதியாக பெற்றோர்களை அணுகினோம். அவர்களுக்கு நிறைய கவுன்சலிங் கொடுத்தோம். மருத்துவ முகாம்கள் நடத்தினோம். நமக்கென சிலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை முளைவிடத் தொடங்கும்போதுதான் பலரின் வாழ்க்கையிலும் சந்தோஷமே மலரத் தொடங்குகிறது.

ஆரம்பத்தில் அப்பாக்களிடம் இருந்து எதிர்ப்புகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன. அவர்கள் பெரும்பாலும் குடிக்கு அடிமை ஆனவர்கள். பிள்ளைகளை வைத்துத்தான் அவர்களுக்கு சம்பாத்தியமே. எனவே, அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவந்தனர். எனவே, அவர்களின் அம்மாக்களிடம் நாங்கள் கல்வியின் அவசியத்தைப் பற்றிச் சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமாய் மாறினார்கள். பள்ளிக்குத் தொடர்ந்து வரும் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுத்தோம். உற்சாகப்படுத்தினோம். மேடையில் வைத்து சர்டிபிகேட்ஸ் கொடுத்தோம். இதெல்லாம் அவர்களுக்குப் புதியது. ரொம்பவே மகிழ்ந்தார்கள். ஒட்டுமொத்தப் பள்ளியையும் தத்தெடுத்தோம். அப்பள்ளியில் மெள்ள மெள்ள மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம். எங்களுடைய இந்தப் பணிகளுக்குப் பிறகு அரசுத் தரப்பிலிருந்தும் மற்ற சில அமைப்புகளிடமிருந்தும் பல்வேறு உதவிகள் கிடைத்துவருகின்றன. அந்தச் சிறுகிராமத்தில் உள்ள பள்ளியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கண்டு மகிழ்கிறோம். எங்களின் ஐந்தாண்டு காலப் பணியில் இதுவே எங்களுக்கு மிகப்பெரிய திருப்தியையும் சந்தோஷத்தையும் தந்துள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதிய 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினோம். இதன் விளைவாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் முறையாக அந்தப் பள்ளி 100% தேர்ச்சி பெற்றது. இது எங்களுக்கு இன்னொரு மிகப்பெரும் சாதனை. இதற்காக எங்களை அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே பாராட்டியுள்ளார். எங்களின் சேவையைப் பாராட்டி அப்துல் கலாம் விருதை ஐயா `பாலம்’ கல்யாண சுந்தரம் அவர்களிடம் பெற்றது பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. எங்களிடம் உதவிகள் தேவைப்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாணவ,மாணவியர் ‘that’s my child’ என்ற இணையதளம், முகநூல், யூடியூப் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

பொள்ளாச்சி சிஞ்சுவாடி பள்ளி மாணவர்களுடன்..
பொள்ளாச்சி சிஞ்சுவாடி பள்ளி மாணவர்களுடன்..

பெண்கள் எட்டாம் வகுப்பைத் தாண்டுவதே பெரும்பாடாக இருக்கிறது. சில பகுதிகளில் மிகக்குறைந்த வயதிலேயே திருமணத்தை நடத்தி வைத்துவிடுகிறார்கள். பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பி படிக்க வைப்பதற்காக தயக்கமும் பயமும் இன்னும் பல பெற்றோர்களிடம் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி அவர்களை கல்விக் கூடங்களுக்கு கொண்டுவரும் பணியை மிக முக்கியமாகச் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றை பலரின் ஒத்துழைப்புடன் எமது அமைப்பு தொடர்ந்து திறம்படச் செய்யும்” என திடநம்பிக்கையுடன் உற்சாகம் கொப்பளிக்க பேசுகிறார் வானதி பாலசுப்பிரமணியன்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/