பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்துவருகிறார்கள்.
``அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள், உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பதிவில், ``தி.மு.க என்னும் மாபெரும் இயக்கத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா. மாநில சுயாட்சியின் மையப்புள்ளியும் அவரே. அவரின் நினைவுநாளான இன்று, நமது உரிமைகளைத் தேக்கிவைத்திருக்கும் அதிகாரக் குவியலை உடைத்து, கூட்டாட்சித் தத்துவத்தைப் பேணிக் காப்போம் என உறுதியேற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
``சமதர்ம சிந்தனை, சமூகநீதி, மொழி உணர்வு, மக்கள்நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்கொண்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளில் அவரின் சீரிய சித்தாந்தங்களைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்” என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
``சமூக நீதி மற்றும் மக்கள் நலச் சிந்தனையாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான அறிஞர் திரு.அண்ணாதுரை அவர்களை, அவரது 53-வது நினைவுநாளான இன்று தமிழக பாஜக சார்பாக நினைவுகூர்கிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.