Published:Updated:

`ஊரடங்கால் இல்லாமல் போன திருவிழா சீசன்!’ -பரிதவிக்கும் பந்தல் தொழிலாளர்கள்

பந்தல் தொழிலாளர்கள்
பந்தல் தொழிலாளர்கள்

ஊரடங்கால் கோயில் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அலங்காரப் பந்தல் அமைப்பு மற்றும் ஒலி-ஒளி மைக்செட் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடே முடங்கிக் கிடக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், ஆரஞ்சு, பச்சை மண்டலப் பகுதிகளுக்கு மட்டும் ஊரடங்கு சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சில தொழில்களை மேற்கொள்ள நிபந்தனைகளுடன்கூடிய உத்தரவு அளிக்கப்பட்டதால், குறைவான எண்ணிக்கையில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தல் கம்புகள்
பந்தல் கம்புகள்

இதில், கோயில் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பந்தல் தொழில் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்கள் பந்தல் மற்றும் ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளர்கள். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அளித்திட வேண்டும் என அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பந்தல் மற்றும் ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளர்களிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் பந்தல், ஒலி-ஒளி மைக்செட் அமைப்புத் தொழில்களை நம்பி, சுமார் 10,000 தொழிலாளர்கள் இருக்கோம். திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள், கோயில் கொடை திருவிழாக்கள், அரசியல் கூட்டங்களுக்கு மேடை அமைத்தல் போன்றவற்றுக்குப் பந்தல் அமைத்தும், ஒலி-ஒளி அமைத்தும் பிழைப்பு நடத்திட்டு வந்தோம்.

கவலையுடன் படுத்திருக்கும் பந்தல் தொழிலாளி
கவலையுடன் படுத்திருக்கும் பந்தல் தொழிலாளி

பந்தல் அமைப்பு முறையும், அலங்கார மின்விளக்குகளும், ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்களாலும்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் பிரமாண்டமாகின்றன. ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுன் அதிகளவில் மக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. திருமணம், சடங்கு போன்றவை 20-க்கும் குறைவான குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு எளிமையாகவே நடக்கிறது.

சமூக விலகலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தபட்டதால் பல நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை விட, கோயில் திருவிழாக்கள்தான் எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு வாழ்வளிப்பவை. தென் மாவட்டங்களில் சித்திரை முதல் புரட்டாசி வரையுள்ள மாதங்களில் தேரோட்டம், கும்பாபிஷேகம், வருசாபிஷேகம், குரு பூஜை, கோயில் கொடை திருவிழாக்கள் என வரிசையாக நடைபெறும்.

பந்தல் பொருள்கள்
பந்தல் பொருள்கள்

இந்த மாதங்களை ’திருவிழா சீசன்’ எனச் சொல்வோம். இந்த சீசன் நாள்களில் பந்தல் போடுதல், பந்தல் பிரித்தல், மின்விளக்கு அமைத்தல், பிரித்தல் எனத் தொடர்ச்சியாக வேலை இருக்கும் என்பதால் வாரம் ஒருமுறைதான் வீட்டிற்கே செல்வோம்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூட ஃபீஸ் கட்டுவோம். பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசி முடிப்போம். இப்போ ஒண்ணுக்கும் வழியில்லாமப் போச்சு. ஊரடங்கு தளர்த்தப்பட்டலும் கோயில் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி அளிக்குமான்னு சந்தேகமா இருக்கு. கடந்த 40 நாள்களுக்கும் மேலாக எந்தவித வருமானமும் இல்லாம வறுமையில வாடுறோம்.

பந்தல் செட்
பந்தல் செட்

தினசரி வயித்துப் பாட்டைக் கழிக்கிறதே பெரிய விசயமா இருக்கு. மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி இருக்கோம். எனவே அரசு, எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை அளிக்க வேண்டும். எங்களுக்கு எந்த நலவாரியமும் கிடையாது. எனவே நலவாரியம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு