Published:Updated:

தூத்துக்குடி: கல்லறைத் தோட்டத்தைச் சூழ்ந்த நீர்; உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் உறவுகள்!

கல்லறைத் தோட்டத்தைச் சுழ்ந்த மழைநீர்
News
கல்லறைத் தோட்டத்தைச் சுழ்ந்த மழைநீர்

தூத்துக்குடியில் மையவாடி கல்லறைத் தோட்டத்துக்குள் மழைநீர் சூழ்ந்து நிற்பதால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமலும், எரியூட்ட முடியாத நிலையும் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்பிவருகின்றனர்.

தூத்துக்குடியின் மையப்பகுதியிலுள்ளது சிதம்பரநகர் பொது மையவாடி. சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலுள்ள இந்த மையவாடியின் முன்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டங்களும், இறுதிப் பகுதியில் 12 எரியூட்டும் தகனமேடைகளும் உள்ளன. இதன் வெளிப்பகுதியில் மின்சார தகன மேடையும் உள்ளது. ஒவ்வொரு எரியூட்டும் கூடத்தின்ன் அருகில் காத்திருப்போர் அறை, முடி இறக்கும் அறை, கிணறுகளும் உள்ளன.

சூழ்ந்துள்ள மழைநீரில் செல்லும் அமரர் ஊர்தி
சூழ்ந்துள்ள மழைநீரில் செல்லும் அமரர் ஊர்தி

ஒவ்வொரு பருவமழையின்போதும் இந்த மையவாடிப் பகுதிக்குள் மழைநீர் சூழ்வதும், பின்னர் வெயிலில் வற்றுவதுமாக இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் மையவாடியின் உள்ளே மழைநீர் குளம்போலத் தேங்கி நிற்கிறது. மையவாடியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், இந்த நீர் வடிய வழியில்லாமல் அப்படியே நிற்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கல்லறைகள், எரியூட்டும் தகன மேடைகளைச் சுற்றிலும் தண்ணீர் சூழந்துள்ளது. இதனால், முறைப்படி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமலும், எரியூட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கல்லறைகளைச் சுற்றித் தேங்கியுள்ள தண்ணீரால் அந்தப் பகுதியைச் சுற்றி கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. இந்த நிலையில், இறந்தவர்களின் உடலை எடுத்துவரும் அமரர் ஊர்திகள் மையவாடியின் பாதி தூரம் வரை மட்டுமே செல்கின்றன. இதையடுத்து இறந்தவரின் உடலை உறவினர்கள் தோளில் தூக்கிச் சென்று, எரியூட்டும் தகன மேடைக்கு எடுத்துச் சென்று எரியூட்டிவிட்டுத் திரும்புகின்றனர்.

மழைநீரில் உடலைத் தூக்கிச் செல்லும் உறவினர்கள்
மழைநீரில் உடலைத் தூக்கிச் செல்லும் உறவினர்கள்

ஆனால், சூழ்ந்துள்ள மழைநீரால் இறந்தவர்களின் உடல்களை குழி வெட்டி அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி கணேஷ்நகரில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஒருவரின் உடலை எரியூட்டுவதற்காக எடுத்துவந்த உறவினர்களிடம் பேசினோம். ``பத்து நாளா பெய்ஞ்ச மழையில மையவாடிக்குள்ள ரெண்டு அடி உயரத்துல தண்ணி தேங்கி நிக்குது. மையவாடிக்கு வெளியிலயும் தண்ணி கட்டி நிக்குறதுனால தண்ணி வடியாம அப்படியே இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்ணியிலதான் உடலைத் தூக்கிட்டு வந்தோம். எரியூட்டும் தகன மேடைக்குப் போகுற உள் சாலையும் குண்டும் குழியுமா இருக்குறதுனால உடலைத் தூக்கிட்டு வர்றது சிரமமாத்தான் இருக்கு. மழைநீர் சூழ்ந்து இருக்குறதுனால ஈமச்சடங்குகளைச் சரியா செய்ய முடியலை. அதேபோல, கல்லறைகளும் பாதி மூழ்கிய நிலையில இருக்கு. கல்லறைத் தோட்டத்துல காலி இடங்கள்லயும் தண்ணி கட்டி நிக்குறதுனால குழி எடுத்து அடக்கம் செய்ய முடியாத நிலையில இருக்கு.

மழைநீரில் மூழ்கிய கல்லறைத் தோட்டம்
மழைநீரில் மூழ்கிய கல்லறைத் தோட்டம்

அப்படியே ஜேசிபி இயந்திரம் மூலம் குழி எடுத்து அடக்கம் செஞ்சாலும் அடுத்தடுத்து பெய்யுற மழையால உடல்கள் வெளியில தெரியுது. இதனால ரொம்ப துர்நாற்றம் வீசுது. மூக்கைப் பொத்திக்கிட்டுத்தான் மையவாடிக்குள்ள போயிட்டு வரக்கூடிய நிலை இருக்கு. மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேத்தணும்” என்றனர்.