Published:Updated:

திரிபுராவில் உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்; 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்ட உடல்!

உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்
News
உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்

கடந்த 11-ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரிபுராவில் உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்; 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்ட உடல்!

கடந்த 11-ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Published:Updated:
உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்
News
உயிரிழந்த ஈரோடு ராணுவ வீரர்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி, ஸ்ரீவாரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (39). எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவர் திரிபுரா மாநிலம், அகர்தலாவிலுள்ள 122-வது பட்டாலியனில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கு நித்யா (33) என்ற மனைவியும், இலக்கியா (12) என்ற மகளும், கவிப்பிரியன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். வடிவேல் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். ஓரளவு உடல்நலம் குணமடைந்ததையடுத்து கடந்த மாதம் மீண்டும் பணிக்குச் சென்றதாகத் தெரிகிறது.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி

திரிபுராவிலுள்ள முகாம் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த நிலையில், 3 தினங்களுக்கு முன்பு தன் மனைவி நித்யாவுடன் பேசினார். அப்போது, திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், ஜன. 11-ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திரிபுராவிலிருந்து 12-ம் தேதி தனி ராணுவ விமானம் மூலமாக கோவைக்குக் கொண்டுவரப்பட்டது. வடிவேல் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்வதற்காக ஈரோடு ஆத்மா மின் மயானத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

தேசியக்கொடி நித்யாவிடம் ஒப்படைப்பு
தேசியக்கொடி நித்யாவிடம் ஒப்படைப்பு

அங்கு ராணுவ வாகனத்திலிருந்து தேசியக் கொடியால் சுற்றி வைக்கப்பட்டிருந்த அவரின் உடல் அடங்கிய பெட்டியை ராணுவ வீரர்கள் இறக்கிவைத்தனர். அங்கு பி.எஸ்.எஃப்  உதவி கமாண்டன்ட் பிஜேந்திர குமார் தலைமையிலான ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வடிவேலு மகன் கவிப்பிரியன் தன்னுடைய தந்தைக்கு உறவினர்களுடன் சேர்ந்து சடங்குகளைச் செய்துமுடிக்க, 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பெட்டியின்மீது போர்த்தியிருந்த தேசியக்கொடி மடித்து வடிவேலுவின் மனைவி நித்யாவிடம் வழங்கப்பட்டது. அதைக் கண்ணீர் வழிய தன் பிள்ளைகளுடன் பெற்றுக்கொண்ட நித்யா, தன் கணவரின் நினைவாக அதைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றார். பின்னர் ராணுவ மரியாதையுடன் வடிவேலுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.