Published:Updated:

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

சிறுவனை மீட்கும் தீயணைப்புத் துறை வீரர்
News
சிறுவனை மீட்கும் தீயணைப்புத் துறை வீரர்

தேனி வடபுதுப்பட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ளது வடபுதுப்பட்டி கிராமம். இங்கு வசிக்கும் பாஸ்கரன் என்பவரின் 4 வயது மகன் ஜெகதீஸ். நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களோடு சேர்ந்து விளையாடியுள்ளார். இரவு ஆன பின்னரும், ஜெகதீஸ் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர், ஜெகதீஸை தேடியுள்ளனர். இறுதியில், முனீஸ்வரன் என்பவரது கிணற்றில் விழுந்து, வெளியே வர முடியாமல் தவித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிணற்றில் சிறுவனை மீட்கும் தீயணைப்புத் துறையினர்
கிணற்றில் சிறுவனை மீட்கும் தீயணைப்புத் துறையினர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தண்ணீர் இல்லாமல், 100 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் விழுந்த சிறுவன், மயங்கிய நிலையில் குரல் கொடுத்துள்ளான். அதைக் கேட்டு பதறிய கிராம மக்கள், சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பாழடைந்த கிணறு என்பதாலும், இரவு நேரத்தில் கிணற்றின் ஆழம் தெரியாததாலும், தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேனி தீயணைப்புத் துறையினர், கிராம மக்களின் ஒத்துழைப்போடு, கயிறு மூலம் கிணற்றின் உள்ளே தவித்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். உடனடியாக 108 ஆம்புன்ஸ் மூலம் சிறுவன், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். மருத்துவமனையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்துவிட்டதாக கூறினர்.

``பாழடைந்த கிணற்றில், இருட்டில், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பிஞ்சுக் குழந்தை தவித்தது. போராடி குழந்தையை மீட்டோம். ஆனால், கடைசியில அவன காப்பாத்த முடியாம போச்சே!” என கலங்குகின்றனர் வடபுதுப்பட்டி கிராமத்தினர். இச்சம்பவம் தேனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.