Published:Updated:

வேலூர்: அதிவேகமாக வந்த லாரி; சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுவன்! - வீட்டுக்கே சென்று பாராட்டிய எஸ்.பி

சிறுவனைப் பாராட்டிய எஸ்.பி செல்வகுமார்
சிறுவனைப் பாராட்டிய எஸ்.பி செல்வகுமார்

அதிவேகமாக வந்த லாரிக்கு அடியில் சிக்கியபோதும், சமயோஜிதமாகச் செயல்பட்டு உயிர் தப்பித்த 7 வயது சிறுவனை வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார், வீடு தேடிச் சென்று பாராட்டினார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆர்.வி.கோபாலன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது 7 வயது மகன் நரேஷ், கடந்த 7-ம் தேதியன்று காலை 10 மணியளவில், அருகிலுள்ள கடைக்குச் சென்றிருக்கிறான். பிச்சனூர் டு பலமனேர் சாலையைக் கடக்க முயன்றபோது, ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரிக்கு அடியில் சிறுவன் நரேஷ் சிக்கிக்கொண்டான். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் லாரியை உடனடியாக நிறுத்தினார். `சிறுவனுக்கு என்னவாகியிருக்குமோ?’ என்கிற பதற்றத்துடன் ஓடிவந்த பொதுமக்களுக்கும், லாரி ஓட்டுநருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவன் நரேஷ் சமயோஜிதமாகச் செயல்பட்டு லாரிக்கு அடியிலிருந்து சிறு காயமுமின்றி உயிர் தப்பி எழுந்து வந்ததைப் பார்த்து, அனைவரும் ஆச்சர்யமடைந்து திகைத்துப்போயினர்.

விபத்தில் சிறுவன் சிக்கிய திக்... திக்... காட்சி
விபத்தில் சிறுவன் சிக்கிய திக்... திக்... காட்சி

இந்தக் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அந்த வீடியோ, சமூக வலைதளங்களிலும் வைலரானது. இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார், நேற்று மாலை சிறுவன் நரேஷை அவனது வீட்டுக்கே சென்று பார்வையிட்டார். மன தைரியத்தையும் சமயோஜித செயலையும் பாராட்டி பூங்கொத்து கொடுத்தும் மகிழ்வித்தார்.

மேலும், குழந்தைகளைக் கடைத் தெருவுக்குத் தனியாக அனுப்புவதை தவிர்க்குமாறும், வெளியில் செல்லும்போது குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு சாலை மற்றும் பொது இடங்களைக் கடக்குமாறும் சிறுவனின் பெற்றோருக்கு அறிவுரை கூறினார், எஸ்.பி செல்வகுமார்.

அடுத்த கட்டுரைக்கு