Published:Updated:

பழுதான சைக்கிளில் 80 கி.மீ பயணம்.. பஸ் ஸ்டாப்பில் உறக்கம்.. மெய்சிலிர்க்க வைத்த அண்ணன் பாசம்!

ஜீவராஜ் மற்றும் பிரவீனா
ஜீவராஜ் மற்றும் பிரவீனா

கொரோனா ஊரடங்கு காரணமாக, தேனியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் தன் தங்கையை அழைத்துச் செல்ல மதுரையிலிருந்து பழுதான சைக்கிளில் தேனி வந்த அண்ணனின் செயல், பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை கூடல் நகர் அருகே உள்ள தினமணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு ஜீவராஜ், பிரவீனா என இரு பிள்ளைகள். கணவனை இழந்த தமிழ்ச்செல்வி, கூலி வேலை செய்து இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார். பிரவீனா, தேனி அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்த தமிழ்ச்செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேனியில் உள்ள தன் மகள் பிரவீனாவைப் பார்க்க வேண்டும் என மகன் ஜீவராஜிடம் கூறியுள்ளார்.

`ஊரடங்கு முடிந்தால்தான் நிதியாம்!’ - ஓபிஎஸ்-க்கு கோரிக்கை வைக்கும் தேனி தோல் பாவைக்கூத்துக் கலைஞர்
corona
corona

அதன் அடிப்படையில், தேனிக்குப் பயணிக்க திட்டமிட்ட ஜீவராஜ், தன்னிடம் இருந்த பழைய சைக்கிளை எடுத்துள்ளார். டயர் பழுதான நிலையில், சில தூரம் சென்றவுடன் காற்று முழுவதும் இறங்கிவிடக் கூடிய நிலையில் இருந்த அந்த சைக்கிளையும், காற்று அடிக்கும் பம்பையும் எடுத்துக்கொண்டு, நேற்று காலை, மதுரையிலிருந்து புறப்பட்டிருக்கிறார் ஜீவராஜ்.

சிறிது தூரம் சென்றவுடன் சைக்கிளில் காற்று முழுவதும் இறங்கிவிட, சாலை ஓரத்தில் நிறுத்தி காற்றடித்துவிட்டுச் மீண்டும் பயணத்தை தொடங்கியிருக்கிறார். நாள் முழுவதும் இப்படி பயணித்து, நேற்று நள்ளிரவு தேனி வந்தடைந்த ஜீவராஜ், தன் தங்கை பணிபுரியும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிழற்குடையில் இரவு தூங்கியுள்ளார்.

காலையில், மருத்துவமனைக்குச் சென்று, தங்கையை அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூற, ``மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், அடுத்த மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது. எனவே, நாங்கள் பிரவீனாவை அனுப்ப மாட்டோம்’’ என கூறியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர்.

இருவரையும் விசாரிக்கும் தேனி இன்ஸ்பெக்டர்
இருவரையும் விசாரிக்கும் தேனி இன்ஸ்பெக்டர்

ஜீவராஜ், நிலைமையை எடுத்துக் கூற, இறுதியில் சம்மதித்த மருத்துவமனை நிர்வாகம், பிரவீனாவை அனுப்பிவைத்தது. மருத்துவமனையிலிருந்து பழுதான சைக்கிளில் இருவரும் புறப்பட்டதைக் கண்ட தேனி போலீஸார், இருவரையும் விசாரித்துள்ளனர். விவரத்தைக் கூற, அதிர்ச்சியடைந்த தேனி போலீஸார், இருவரும் மதுரைக்குச் செல்ல, வாகன ஏற்பாடு செய்யத் திட்டமிட்டு, தேனியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சக்தியிடம் உதவி கேட்க, அவரோ, தனது காரை கொடுத்து உதவியிருக்கிறார். இருவரையும், பத்திரமாக மதுரைக்கு அனுப்பிவைத்தனர் தேனி போலீஸார்.

தன் தங்கையை மீட்க மதுரையிலிருந்து நாள் முழுவதும் பழுதான சைக்கிளை ஓட்டிவந்து இறுதியில் தங்கையுடன் ஊர் திரும்பிய பாசக்கார அண்ணனைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.

மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!
அடுத்த கட்டுரைக்கு